சூ. 237 :

பொழுதுதலை வைத்த கையறு காலை

இறந்த போலக் கிளக்குங் கிளவி

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு

அவைநாற் பொருட்கண் நிகழும் என்ப

(41)
 

க - து :

தலைவன்  குறித்துச்  சென்ற   பருவம்  கழிந்தகாலைத் தலைவி
கையற்றுக் கூறுதற்கு ஏதுவாமாறு கூறுகின்றது.
 

பொருள் :தலைவனது   பிரிவாற்றாமையான்  தலைவி   செயலற்றுத்
துயர்கூர்ந்து,  வினைவயிற்  பிரிந்த  தலைவன் தான் மீண்டும் வருவதாகக்
குறித்த பருவம் கழிந்தன  போலக் கலங்கிக்  கூறும் கூற்றுக்கள்,  மடனும்,
வருத்தமும்,  மருட்கையும்,  மிகுதியுமாகிய  அந்நான்கு  பொருட்கண்ணும்
நிகழும் எனக் கூறுவர் நூலோர்.
 

‘தலைவைத்த      பொழுது’     எனமாறுக.    வற்புறுத்தி    உறுதி
கூறியபொழுதாகலின் ‘தலைவைத்த பொழுது’ என்றார்.
 

மடன்   =  ஆராய்தலின்றி    நிகழும்    அறியாமை.   வருத்தம்  =
பிரிவாற்றாமையான் வரும்  துயரம்.  மருட்கை = ஒன்றைப் பிறிதொன்றாகக்
கருதும்  மயக்கம். மிகுதி = அப்பருவகாலத்திற்குரிய பொருள் மிக்கனவாகத்
தோன்றுதல்.
 

எ - டு :

கடும்புனல் தொடுத்த நடுங்கஞர் அள்ளல்

கவிர்இதழ் அன்ன தூவிச் செவ்வாய்

இரைதேர் நாரைக்கு எவ்வ மாகத்

தூவும் துவலைத் துயர்கூர் வாடையும்

வாரார் போல்வர் நம்காதலர்

வாழேன் போல்வல் தோழி யானே

(குறு-103)
 

இது   பருவத்தின்  தொடக்கமெனக்   கருதாமல்  முற்றீற்றாக   எண்ணிய
மடம்பற்றி வந்தது.
 

வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு

யாரா கியரோ தோழி நீர

நீலப் பைம்போது உளரிப் புதல

பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி

நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த

வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று

இன்னாது எறிதரும் வாடையொடு

என்ஆயி னள்கொல் என்னா தோரே

(குறு-110)
 

இது வருத்த மிகுதியாற் கூறியது.
 

இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்

இவணும் வாரார் எவண ரோஎனப்

பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லை

தொகுமுகை இலங்கெயி றாக

நகுமே தோழி நறுந்தண் காரே

(குறு-126)
 
இது முகைஎயிறாக நகும் என மருட்கைபற்றிக் கூறியது.
 

அவரோ வாரார் முல்லையும் பூத்தன

பறியுடைக் கையர் மறியினத்து ஒழியப்

பாலொடு வந்து கூழொடு பெயரும்

ஆடுடை இடைமகன் சென்னிச்

சூடிய வெல்லாம் சிறுபசு முகையே

(குறு-221)
 

சூடிய எல்லாம்  முல்லை  என  மிக்கதாக  எண்ணிக்  கூறியது.  இவ்வாறு
வருவன பிறவற்றையும் இந்நான்கனுள் அடங்குமாறு ஓர்ந்து கொள்க.
 

நச்சினார்க்கினியர், பொருளியலுள் கூறப்பெறுவன எல்லாம் வழுவமைதி
இலக்கணமெனத்தான்    திரியக்கொண்ட   கோட்பாட்டிற்கு   ஏற்ப  இது
பெருந்திணை   வழுவமைக்கின்றது   எனவும் "தலைவைத்த"  என்பதற்கு
யாதோரியைபுமின்றி  ஆறாம்  அவதியிற்  கூறிய  மெய்ப்பாடுகள் எனவும்
வலிந்து   கூறும்பொருள்  சூத்திரச்சொற்றொடர்   அமைப்பிற்குச்  சிறிதும்
பொருந்தாமையறிக.   அவர்  அங்ஙனம்  பொருள்  கூறற்குக்    காரணம்
நெய்தற் கலியுள்  வரும்   பெருந்திணைக்  கூறுகளுக்கு இலக்கணம் கூறல்
வேண்டுமென்னும்   கருத்தேயாம்.   ‘புரிவுண்ட   புணர்ச்சி’    (கலி-14)
முதலியவற்றுள் நிகழும்  பெருந்திணைக் கூறுகளுக்கு  அகத்திணையியலுள்
கூறியுள்ள    பொதுவிலக்கணமே   சாலும்  என்பதும்   பிறவும்   எனது
தொல்காப்பியக் கோட்பாடுகள் என்னும் கட்டுரையுள் விளங்கும்.