சூ. 285 :

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்

மருளறு சிறப்பினஃ துவம மாகும்

(9)
 

க - து:

உவமமும்   பொருளுமாகிய   அவைபற்றி     வருவதோரைய
மகற்றுகின்றது.
 

பொருள் :மேற்றொட்டு   மரபாக   வரும்  பொருளை உவமமாகவும்
உவமத்தைப்   பொருளாகவும் மாற்றியமைத்துக்  கூறினும்  அது மயக்கமற
வந்த சிறப்பினையுடைய உவமமேயாம்.
 

‘அஃது’  என்றது  மேற்றொட்டு உவமிக்கப்படுவதாக வரும் பொருளை.
மருளறு சிறப்பாவது "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை" என்றதனை.
 

ஒரு பொருளை உவமத்தான்  விளக்கும்   நோக்கம்   அப்பொருளைத்
திரிபின்றி உணரச் சிறப்பாக உணர்த்த  வேண்டுமென்பதன்றோ? அதனான்
உணர்த்தப்படும்   பொருளினும்  உணர்த்தும்  உவமம் உவமத்தன்மையாற்
சிறப்புடையதாக  இருத்தல்   வேண்டுமென்பதை   "உயர்ந்ததன்  மேற்றே
உள்ளுங்   காலை"   என்னும்   சூத்திரத்தான்   வற்புறுத்தினார்.   மற்று,
இருதிணைப்    பொருள்களுள்    இவையெல்லாம்    உவமமாக   வரும்
இவையெல்லாம்  பொருளாக  வரும் என்னும்   வரையறையில்லையாயினும்
மேற்றொட்டுப்  பொருளிவை, உவமமிவை  என மரபாக  வரும் வழக்காறு
தோக்கிப் "பொருளே உவமம் செய்தனர் மொழியாயினும்’’ என்றார்.
 

எ - டு :

‘வருமுலை யன்ன வண்முகை யுடைந்து

திருமுகமவிழ்ந்த தெய்வத்தாமரை (சிறுபாண்) எனவரும்.

நின்னே போலும் மஞ்ஞையால, நின்

நன்னுதல் நாறும் முல்லை மலர

நின்னே போலமா மருண்டு நோக்க

நின்னே உள்ளி வந்தனென் (ஐங்-492) என்பதுமது.
 

‘வருமுலை   யன்ன   வண்முகை    யுடைந்து    திருமுக  மவிழ்ந்த தெய்வத்தாமரை’  எனக்கூறுமவன்  உணர்வு  முலையையும்,  முகத்தையும்
தாமரை   முகையையும்   மலரையும்   கொண்டு   சிறப்பித்தலேயாயினும்
உவமத்தன்மை     முகையினும்   முலைக்கும்,   மலரினும்   முகத்திற்கும்
மிக்குளதாகக் கருதிக் கூறலின் மருளறு சிறப்பினஃதுவமமாகும் என்றார்.
 

இனி,  இச்சூத்திரத்திற்கு "உவமிக்கும்  பொருள் தன்னை உவமையாகக்
கூறினும்  மயக்கமற்ற   சிறப்பு   நிலையான்   எய்தும் உவமையாகும் என
உரைகூறி, ஒருசாராசிரியர்   ரூபகம்  என்று சொல்லப்பட்டது உவமைபற்றி
வருதலின் இஃது உவமையின் பாகுபாடென்பது  இவ்வாசிரியர் கருத்து என
இளம்பூரணர் விளக்கந் தந்துள்ளார்.
 

பேராசிரியர்  "இவை   உவமத்   தொகையாங்கால்  முலைக் கோங்கம்
முகத்தாமரை     எனப்படும்.     இவற்றை     வேறு     உருவகமென

மயங்குப."   எனக்கூறி    இளம்பூரணரைக்  குறிப்பான்  மறுத்துரைத்தார்.
எடுத்துக்காட்டாக  அவர் இரும்புமுகஞ்  செறித்த   ஏந்தெழின் மருப்பின்
(புறம்-169) என்னும் செய்யுளைக் காட்டியுள்ளார். அவ்வாறு வருவனவற்றை,
 

வேறுபட வந்த உவமத் தோற்றம் 

கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் 

(உவம-34)
 

என்னும்    சூத்திரத்துள்     அடக்கிக்     கொள்ளுதலே   நேரிதாகும். பேராசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் அவருரையான் விளங்கும்.