சூ. 104 : | பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் |
| அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும் |
| ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே |
(12) |
க - து : | களவின்கண் நிகழும் நால்வகைப் புணர்ச்சிக்கும் பொதுவாக மேற்கூறிய தலைமகனுக்குரிய கிளவிகளைச் சார்ந்து பாங்கற் கூட்டம், தோழியிற் புணர்வு ஆகிய இரண்டற்கும் சிறப்பு வகையான் நிகழும் கூற்றுக்கள் இவ் ஏதுக்களான் நிகழும் என அவற்றைத் தொகுத்துணர்த்துகின்றது. |
பொருள் :1) பண்பிற் பெயர்ப்பினும் என்பது : பாங்கன் தலைவற்கு உற்றது உணர்ந்த வழித் தலைவனது பண்பு முதலியவற்றை எடுத்துக் கூறி மாற்றக் கருதியவிடத்தும், இரந்து பின்னின்ற தலைவனை நோக்கித் தோழி நின்னாற் கருதப்பட்டாள் பேதையங் குறுமகள், இத்தன்மையளாகிய செல்வ மகள் எனக் கூறி மாற்றக் கருதியவிடத்தும் தலைவன் கூற்று நிகழ்த்தும் என்றவாறு. |
இது பாங்கற் கூட்டத்து நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் என்னும் கிளவியையும் தோழியிற் கூட்டத்துத் தண்டாதிருப்பினும் என்னுங் கிளவியையும் சாரும். |
எ - டு : | கவவுக்கடுங் குரையள் காமர் வனப்பினள் |
| குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே |
| யாங்கு மறந்தமைகோ யானே ஞாங்கர்க் |
| கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி |
| தாய்காண் விருப்பின் அன்ன |
| சாஅய் நோக்கினள் மாஅ யோளே. |
(குறுந்-132) |
இது பாங்கன் பண்பிற் பெயர்த்தவழித் தலைவன் கூறியது. |
| குன்றக் குறவன் காதன் மடமகள் |
| வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி |
| வளையள் முளைவாள் எயிற்றள் |
| இளைய ளாயினும் ஆரணங் கினளே |
(ஐங்-256) |
இது தோழிபண்பிற் பெயர்த்தவழித் தலைவன் கூறியது. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. |
2) பரிவுற்று மெலியினும் என்பது : தலைவன் இனி ஆற்றான் எனக்கருதிய பாங்கன் தலைவி ஆடிடமறிந்து வந்து அவளைக் கூட்டுவித்தற்கு எண்ணி உள்ளம் இரங்கிய விடத்தும் அவ்வாறே தோழி தலைவனது ஆற்றாமையை நோக்கிக் கையுறை ஏற்றுத் தலைவியைக் கூட்டுவிக்கக் களஞ்சுட்டுதலைக் கருதி உள்ளம் இரங்குமிடத்தும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. |
இது பாங்கற் கூட்டத்துக் குற்றங்காட்டிய வாயில் பெட்பினும் என்பதனையும் தோழியிற் கூட்டத்து மற்றைய வழியும் என்பதனையும் சார்ந்து நிகழும். |
எ - டு : | அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை |
| குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே |
| இதற்கிது மாண்டது என்னாது அதற்பட்டு |
| ஆண்டொழிந் தன்றே மாண்தகை நெஞ்சம் |
| மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை |
| நுண்வலைப் பரதவர் மடமகள் |
| கண்வலைப் படூஉம் கான லானே |
(குறு-184) |
இது பாங்கன் பரிவுற்றவிடத்துத் தலைமகன் கூறியது |
| மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் |
| பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர்-குயில்பயிரும் |
| கன்னி இளஞாழற் பூம்பொழில் நோக்கிய |
| கண்ணின் வருந்துமென் நெஞ்சு |
(திணைமா-ஐம்-49) |
இது தோழி பரிவுற்ற இடத்துத் தலைவன் கூறியது. |
3) அன்புற்று நகினும் என்பது; பாங்கன் தனது கழற்றுரையான், தலைவன் மனங்கலங்கிச் சோர்வுறாமல் தன் அன்புரிமை தோன்ற நகையொடு கூறுமிடத்தும், தோழி தலைவியது இற்செறிப்பு முதலியவற்றைக் கூறும்வழித் தலைவன்உளங் கலங்காவண்ணம் அன்பு தோன்ற முறுவலித்துக் கூறுமிடத்தும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. |
இது பாங்கற் கூட்டத்து வாயில் பெட்பினும் என்பதனையும், தோழியற் கூட்டத்து அறிந்தோளயிர்ப்பின் என்பதனையும் சார்ந்து நிகழும். |
எ - டு : | அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி |
| அன்ன இனியோள் குணனும் இன்ன |
| இன்னா அரும்படர் செய்யு மாயின் |
| உடன் உறைவு அரிதே காமம் |
| குறுகல் ஒம்புமின் அறிவுடை யோரே. |
(குறு.206) |
இது பாங்கன் அன்புற்றுரைத்த விடத்துத் தலைவன் கூறியது. |
| நயனின் மையிற் பயனிது என்னாது |
| பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் |
| பாம்புயி ரணங்கியாங்கும் ஈங்கிது |
| தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது |
| உரைமதி உடையுமென் உள்ளம் சாரல் |
| கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
| பச்சூன் பெய்த பகழி போலச் |
| சேயரி பரந்த மாயிதழ் மழைக்கண் |
| உறாஅ நோக்க முற்றவென் |
| பைதல் நெஞ்சம் உய்யு மாறே |
(நற்-75) |
இது தோழி அன்புற்று நக்கவிடத்துத் தலைவன் கூறியது. |
4) அவட் பெற்றுமலியினும் என்பது : பாங்கன் தலைவி இவ்விடத்தாள் எனக் கூறி உய்த்த வழியும், தோழி பகற்குறியும் இரவுக்குறியும் நேர்ந்த வழியும், தலைவியைப் பெற்று மகிழ்தற்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. இது மூவகைப் புணர்ச்சிக்கும் பொதுப்பட நின்றது. |
எ - டு : | அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன |
| மணங்கமழ் பொழில்குறி நல்கினள் நுணங்கிழை |
| பொங்கரி பரந்த உண்கண் |
| அங்கலிழ் மேனி அசைஇய எமக்கே |
(ஐங்-174) |
| காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் |
| மாணிழை கண்ணொவ்வே மென்று |
(குறள்-114) |
எனவரும். |
5) ஆற்றிடையுறுதலும் என்பது : பாங்கனான் இடந்தலைப்பாடுற்றுச் செல்லுங்காலும் இருவகைக் குறியிடத்துச் செல்லுங்காலும் செல்லும் நெறிக்கண் உறும் இடையூறு பற்றியும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. |
ஆறு எனப்பொதுப்பட நிற்றலான் வரைபொருட் பிரிவின் கண் செல்லும் நெறி பற்றிய இடையுறு கிளவியும் கொள்க. |
எ - டு : | குருதி வேட்கை உருகெழு வயமான் |
| வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் |
| மரம்பயில் சோலை மலியப் பூழியர் |
| உருவத் துருவின் நாண்மே யலாரும் |
| மாரி எண்கின் மலைச்சுர நீளிடை |
| நீநயந்து வருதல்என் எனப்பல புலந்து |
| அழுதனை உறையும் அம்மா அரிவை! |
| பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் |
| பூதம் புணர்த்த புதிதுஇயல் பாவை |
| விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின் |
| ஆய்நலன் உள்ளிவரின் எமக்கு |
| ஏம மாகும் மலைமுத லாறே |
(நற்-192) |
எனவரும். |
அவ்வினைக்கியல்பே என்பது : களவின்கண் தலைமகன் ஒழுகும் ஒழுகலாற்றிற்குரிய இலக்கணமாகும் என்றவாறு. |
பண்பிற் பெயர்த்தல் முதலாகிய இவ்வைந்தும் பாங்கன், பாங்கி இருவர் மாட்டும் நிகழ்தற்கு ஒத்தும், மூவகைப் புணாச்சிக்கும் பொதுவாயும் தலைவன் கூற்றிற்கு ஒழிபாக அமைந்து வருதலான் இவற்றைப் பிரித்து ஓதினார் என்க. இவை தலைவன் கூற்று நிகழுமிடம் பற்றி மேற்கூறிய கிளவிகளின் வேறானவையல்ல. இவை ஏதுவாக அவை நிகழும் என்பது விளங்க "அன்னவும் உளவே" என்றாற் போலக் கூறாமல் "அவ்வினைக் கியல்பே" என்று கூறினார் என அறிக. |