சூ. 125 :

பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம்

நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலின்

துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்

துணையோர் கருமம் ஆக லான

(33)
 

க - து :

இடந்தலைப்பாட்டின்    பின்னர்   வரைவு   நேராமல் களவு
நீட்டித்த  காலை      இன்றியமையாமை   கருதி   உயிரன்ன
பாங்கியைத் தலைவற்கு   அறிவிக்கும் எனத்  தலைவிக்காவதோ
ரிலக்கணம்  கூறுகின்றது.
 

பொருள் : பலநூறு   வகையானும் தனது ஒழுகலாற்றான் தன்னிடத்தே
வரும்   நல்ல   நயப்பாட்டுப்   பகுதிக்கண்   நாட்டமுறுதலைத்    தான்
விரும்புதலின் அங்ஙனம்  நாடுதல்,   துணையாவாரின்   செயல்களாதலின்
அத்தகு துணையைச் சுட்டிக் கூறுதல் தலைவியது கடனாகும்.
 

தன்வயின்   வரூஉம்   நன்னயமாவன :   இருவகைக்   குறியிடத்தும்
தலைவனை நேர்தலும், பிரிவுழிக்கலங்கலும்,   வரைபொருட்   பிரிவின்கண்
ஆற்றியிருத்தலும், உடன் போக்கிற்கு   ஒருப்படுதலும்   அவை போல்வன
பிறவுமாம்.  அதன்  மருகின் நாட்டமாவது : தலைவியை அரியளாக்குதலும்,
தலைவனைச் சேட்படுத்தலும், வரைவு   கடாதலும்,  அறத்தொடு நிற்றலும்,
உடன்போக்கு வலித்தலும் அவை போல்வன பிறவுமாம்.
 

அங்ஙனம் நாடுபவள் பாங்கருஞ்  சிறப்பினையுடைய ஒன்றித் தோன்றும்
தோழியேயாகலின் துணைச்சுட்டுக்     கிளவி கிழவியதாயிற்று. தலைவியது
நன்னய    மருங்கின்     நாட்டங்கொண்டு   தோழி    செயல்புரிதலைத்
தோழிக்குரியவாக   ஆசிரியர்  கூறும்     கிளவிகளானும்     சான்றோர்
செய்யுட்களானும் அறிந்து கொள்க.