சூ. 134 :

பகற்புணர் களனே புறனென மொழிப

அவளறி வுணர வருவழி யான

(42)
 

க - து :

பகற்குறி நிகழும் இடமாமாறு கூறுகின்றது.
 

பொருள் : பகற்குறி   நிகழும்  களமாவது   மேற்கூறிய  களத்திற்குப்
புறத்ததாகும்      எனக்கூறுவர்    நூலோர்.    அதுதான்   தலைவியாற்
சுட்டப்பட்டதாகித் தலைவன் உணர வருமிடமாகலான் என்க.
 

தலைவியாற்   சுட்டப்பெறும்   களன்  தலைவி முன்பே அறிந்ததாகித்
தலைவன்   உணர   அவளான்   அறிவிக்கப்பட்ட  இடனாகலின் "அவள்
அறிவுணர வரும்வழி"  என்றார்.   புறம்   என்றது  இல்லத்தைச் சார்ந்தும்
அடுத்தும் அமைந்த பொழிலும் சோலையும்,  புனமும்,  கானலும்   ஆகிய
இள மகளிர் சென்று விளையாடி வருதற்குரிய இடங்களாம்.
  

எ - டு :

"பூவேய் புன்னையந் தண்பொழில்

வாவே தெய்ய மணந்தனை செலற்கே"

(அகம்-240)
 

எனவரும்.