சூ. 160 :

பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழவி

மடத்தகு கிழமை யுடைமை யானும்

அன்பிலை கொடியை என்றலும் உரியள்

(17)
 

க - து : 

தலைவன்  புலந்தவிடத்துத்   தோழி  கூற்றிற்குரியதொரு
சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :  தலைவன்   பரத்தமை   ஒழுக்கத்தை   இனி   மேவாது
மறுத்தலை    வேண்டுதலானும்,   தலைவி   அவன்   புறத்தொழுக்கினை
அறிந்திருந்தும்   அதனைப்   பொறுத்தாற்றும்   பெண்மைக்  குணமாகிய
மடப்பத்தை    உரிமையாகக்    கொண்டொழுகுதலானும்     சொலத்தகு
கிளவியேயன்றி  அன்பிலை  கொடியை  எனத்  தலைவனைக்  கூறுதற்கும்
தோழி உரியளாவாள்.
  

பணிமொழியேயன்றி  இங்ஙனம்   முனிந்து  கூறற்கும்   உரியள்  என
உம்மை இறந்தது தழீஇநின்றது.
    

எ - டு :

"கண்டவரில் எனும்" நெய்தற்கலியுள்

(125)

அன்பிலை எனவந்து கழறுவல் ஐயகேள்

மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை

முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண்

அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய்

இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ"
 

என மிகைத்துக் கூறியவாறு கண்டு கொள்க.