சூ. 225 : | பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே |
| நிலத்திரி பன்றஃது என்மனார் புலவர் |
(29) |
க - து : | பரத்தையிற் பிரிவிற்குரியார் இவர் என்றும் அவ்வொழுக்கம் நிலத்திரிபாகாதென்றும் கூறுகின்றது. |
பரத்தையிற் பிரிவு ஒரோவழிச் சிறுபான்மையாக நிகழ்வ தொன்றாகலானும், நிலம்பெயர்ந்து நிகழும் பிரிவு அன்மையானும் கற்பென்னும் கைகோளிற்கே சிறந்துரிமையுற்று வருதலானும், ஓதல் முதலிய பிரிவும் அவற்றிற்குரியாரும் பற்றிக் கூறிய அகத்திணையியலுள் அவற்றொடு ஒருங்கு கூறாமல் ஈண்டுக் கூறினார் என்க. |
ஈண்டுப்பரத்தை என்றது : குடிமரபாகவரும் காமக்கிழத்தி, காதற்பரத்தை ஆகியோரை என உணர்க. இவரை இற்பரத்தை எனவும் வழங்குப. மற்று, அற்றைநாள் பரிசங்கொள்ளும் சேரிப்பரத்தையொடும் விருந்தியற் பரத்தையொடும் நிகழும் கூட்டத்தைப் பரத்தையிற் பிரிவாகக் கூறல் புலனெறி வழக்கன்று என்க. |
பொருள் : பரத்தையிற் பிரிவு காரணமாக ஊடிய தலைவியின்பால் பாணர் முதலானோரை வாயிலாகப் போக்குதல் நானிலத்துத் தலைவர்க்கும் ஒப்ப உரியதாகும். அது தீம்புனலுலகமாகிய மருதத்திற்கு உரியதாய் ஏனைய நிலத்தும் மயங்கி நிகழ்வதன்று. அவ்வந் நிலத்திற்கும் ஒப்ப உரிய ஒழுக்கமேயாம் எனக் கூறுவர் நூலோர். |
விழா நிமித்தமாகத் தலைமக்கள் சோலைபுக்கு விளையாடலும், புதுநீராடலும், சுனையாடலும் பற்றிச் சிறுபான்மை ஊர்ப்புறத்தே பிரிதலன்றிப் பரத்தையிற் பிரிவு தம்மனை வளாகத்து ஓரிடத்தேயே நிகழ்வதொன்றாகலான், மருத ஒழுக்கமாகிய இவ்வொழுக்கம் தீம்புனலுலகத்திற்கே உரியது எனக் கருதற்க. அது மருத ஒழுக்கமாய் ஏனை நிலத்தினும் நிகழும் என்பது விளங்க "நிலத்திரி பன்று" என்றார். |
திணை மயக்கம் வேறுநில மயக்கம் வேறு என்பதும் மாயோன் மேய காடுறையுலகம் முதலியவை முல்லை முதலிய திணைப்பெயரானும் வழங்கப்பெறும் என்பதும் (அகத் - 5 ; அகத் - 14) அகத்திணையியலுள் விளக்கப் பெற்றன. |