|
பொருளதிகாரம் | ஆறாவது - மெய்ப்பாட்டியல் | பாயிர உரை :- ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளிலக்கணப் பகுதியாக அகத்திணை, புறத்திணை பற்றிய இலக்கணங்களை நான்கு இயல்களாகத் தொகுத்துக்கூறி அக ஒழுக்கத்திற்கும் புற ஒழுக்கத்திற்கும் உரிய இயல்புகளைச் செவ்விதின் உணர்தற்குரிய இலக்கணங்களைத் தொகுத்துப் பொருளியல் எனக் குறியீடு செய்து ஐந்தாவது இயலாக அமைத்துப் பின்னர் அகத்திணை - புறத்திணைக்குரிய மாந்தர்களின் ஒழுகலாறு காரணமாகப் புலப்படும் அவர்தம் உணர்வுகளைச் செய்யுள் வாயிலாக அறிதற்குரிய மெய்ப்பாடு பற்றிக் கூறும் இயலை ஆறாவதாக ஓதுகின்றார். | உரிப்பொருள் முதலியவற்றைச் செவ்விதின் புலப்படுத்தலின் மெய்ப்பாட்டினைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாக அமைத்து அதன் இலக்கணத்தை மரபின்வழி வகைப்படுத்து விளக்குதலின் இவ்வோத்து மெய்ப்பாட்டியல் என்னும் பெயர்த்தாயிற்று. எனவே மெய்ப்பாடு என்பது பொருள் புலப்பாட்டினைச் செய்வது என்பது போதரும். | அகத்திணை ஒழுகலாறு பற்றி யாப்பின் வழிச்செய்யுள் செய்யும் நல்லிசைப் புலவோர்க்கு அச்செய்யுளாவது | "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் | பாடல் சான்ற புலனெறி வழக்கம்," என்றும், அது | "கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும்" (56)என்றும் | அகத்திணையியலுள் தோற்றுவாய் செய்தமையான், செய்யுளுறுப்புக்களை வரையறை செய்யுங்கால், நாடகவழக்கொடு தொடர்புடைய மெய்ப்பாட்டினையும் ஓர் உறுப்பாக ஓதியமைத்தார். | தொன்னூலாசிரியன்மார் பொருள்புலப்பாட்டிற்குத் துணை செய்யும் உவமத்தைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளாமல் அதனைத் திணையுணர்தற்குக் கருவியாகச் சுவைப்பொருளின் அடிப்படையிற்றோன்றும் மெய்ப்பாட்டினைச் செய்யுளுறுப்பாகக் கொண்ட நுண்மையினை ஓர்ந்து உணர்தல் வேண்டும். | எல்லாவற்றையும் ஆரியநூற் கண்கொண்டு நோக்கிய உரையாசிரியன்மார் இயற்றமிழுக்குரிய மெய்ப்பாடு என்னும் உறுப்பினை நாடகநூலார் கூறும் சுவையாக (இரசபாவமாக)வே கருதி உரை விளக்கம் செய்து போந்தனர். |
மெய்ப்பாடு செய்யுள் உறுப்பினுள் ஒன்று என்பதனான் அதன் இலக்கணத்தைச் செய்யுளியலுள் ஓதி, அதன் வகையும் முறையும் பொருளும் பற்றி ஈண்டு விளக்கிக் கூறுகின்றார். ஓராற்றான் பொருளியளோடு தொடர்புடைமை பற்றி என அறிக. இனி மெய்ப்பாடு என்பதற்கு இலக்கணம், | உய்த்துணர்வின்றித்தலைவரு பொருளான் | மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும் என்றும், அதுதான் | எண்வகை இயல்நெறி பிழையா தாகி | முன்னுறக் கிளந்த முடிபின ததுவே | (செய்-196, 197) | என்றும் கூறி அமைத்தார். அச்சூத்திரங்களான் மெய்ப்பாடாவது இதுவென்பதும், அஃது எட்டு வகையாகத் தோன்றும் என்பதும் புலனாகும். | இனி இயல், இசை, நாடகம் என்னும் மூவகைக் கலைகளுள் ஒவ்வொன்றின்பாலும் ஏனையவற்றின் கூறுகள் விரவி வருதல் இயற்கை எனினும், அரங்கின்கண் காட்சியளவையாக நிகழும் நாடகம், உரையும் பாட்டும் கலந்து அமைந்து நிகழ்தலான் அஃது இயற்கலையாகவோ இசைக்கலையாகவோ ஆகிவிடாது. நாடகமானது ஒரு கதை (வரலாறு அல்லது நிகழ்ச்சி) யுள் வரும் மாந்தரை-ஒப்பப் பொருநர்தாம் வேடம் (ஒப்பனை) புனைந்து நடித்துக் காட்சியாகப் புலப்படுத்துவதும்; ஒருவரே கதை மாந்தர் பலரின் தன்மை இயல்புகளை வினையத்தான் (அவினயத்தான்) முறையொடு ஆடிக்காட்சியாகப் புலப்படுத்துவதுமாகும். | நாடகம் என்னும் தமிழ்ச்சொல் அவிநயக் கூத்தினையும், கதை தழுவி (ஆடப்பெறும்) நடிக்கப் பெறும் பொருநர் தம் ஆடலையும் குறிக்கும். இச்சொல் இடைக்காலத்தில் பொருநர் தம் ஆடற்கலையைச் சிறப்பாகச் சுட்டி வழங்கலாயிற்று. அவினயக் கூத்து நடம்-நாட்டியம் என்னும் பெயரால் வழங்கலாயிற்று. இற்றைக்கும் அவ்வழக்கு நிலவுதலின் தொன்னூல்களுள் வரும் நாடகம் என்னும் சொல்லின் பொருள் பயில்வோருக்குத் தடுமாற்றத்தைத் தருவது இயல்பேயாகும். | கதை தழுவி வரும் நாடகக் கூத்தின்கண் கதை மாந்தராக வேடம் பூண்ட பொருநர்-தம் நடிப்பானும் உரையானும் புலப்படுத்தும் உணர்வுகள் சுவை (ரசம்) என்னும் நாடகத் தமிழின் உறுப்பாகும். நாட்டியக் கூத்தின்கண் விறலி தன் அவினயத்தாற் புலப்படுத்தும் உணர்வுகள் மெய்ப்பாடாகும். ஈண்டு மெய்ப்பாடென்பது மெய்யின்கண் தோன்றுவது என்னும் பொருள்பட நின்றது. |
நாடக உறுப்பாகிய சுவை, காண்போரின் அறிவொடு கலந்து அவரை அவ்வுணர்வினராகவே ஆக்கிவிடும். நாட்டிய உறுப்பாகிய மெய்ப்பாடு காண்போரின் அறிவினைச்சார்ந்து அவ்வுணர்வினைப் புலப்படுத்தி நிற்கும். அஃதாவது நாடகத்துள் நிகழும் அழுகைக் காட்சியைக் காண்போர், தாமும் அழுவர். நாட்டியமகள் அவினயித்துக் காட்டும் அழுகையைக் காண்போர் அறிந்து கொள்வதன்றி அழுதலைச் செய்யார். அதனான் நாடக உணர்வுகள் சுவையென்றும் நாட்டிய உணர்வுகள் மெய்ப்பாடென்றும் தொன்னூலாசிரியன்மார் வேறுபடுத்தினர். | இசைக்கலையான் உணர்த்தப்படும் உணர்வுகள் இசை கேட்போரைத் துய்க்கச் செய்வதன்றிச் சுவையினராக மாற்றுதலில்லை. அதனால் அது நாடக உறுப்பாகிய சுவையினின்று வேறுபட்ட சுவையுணர்வாக அமையும். இதனைத் தன்மை (பாவம்) என்று குறிப்பிடுவர். இசையானது பொருளைப் புலப் படுத்துவதின்மையான் மெய்ப்பாடு எனற்கேலாதாயிற்று. இசை பாட்டொடு (செய்யுளொடு) கலந்து நிகழுங்கால் ஒருகால் சுவையாகவும் ஒருகால் மெய்ப்பாடாகவும் இலங்கும். | இயற்றமிழின்கண் இலக்கியக்கலையுள் செய்யுளிடத்து அமைக்கும் (அமையும்) உணர்வுகள் ஒலிவடிவாயின் செவி வாயிலாகவும் வரிவடிவாயின் விழிவாயிலாகவும் புக்கு அச்செய்யுளுணர்த்தும் நிகழ்ச்சிகள் அகத்தே புலப்பாடாகி நிற்றலின் மெய்ப்பாடென்பது சுவைப் பொருளின் அடிப்படையிற் பொருள் புலப்பாட்டினைத் தலையாகக் கொண்டிலங்கு மென்க. எனவே, மெய்ப்பாடு சுவையோடு தொடர்புடையதாதலையும் உணரலாம். | செய்யுள் இலக்கியத்தை அறிந்துணர்தற்குரிய கருவிகள் விழியும் செவியுமேயாதலின், கண்ணானும் காதானும் கண்டும் கேட்டும் சுவை கோடற்குரிய நாடகக் கலையுணர்வும் நாடகக் கலையறிவும் உடையார்க்கே செய்யுட்கண் அமைந்திலங்கும் மெய்ப்பாட்டியல்பினை அறிந்து கோடற்கியலும், அல்லாதார்க்கு அரிதாகும் என்பதை, ஆசிரியர் | "கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் | உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் | நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே" | (மெய்-27) | என இறுதியில் விதந்து கூறுதலான் அறியலாம். அச்சூத்திரத்துள் "நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்து" என்பதனான் மெய்ப்பாடென்பது பொருட்பாடே என்பதும் தெளிவாம். |
"கண்ணினும் செவியினும்" என்றதனான் உரையாசியன்மார் பலர் மெய்ப்பாட்டினை நாடக உறுப்பாகிய சுவையாகவே (ரசம்) கருதி விளக்கிச் செல்வாராயினர். நாடகக் காட்சி வழங்கும் சுவை வேறு; செய்யுள் புலப்படுத்தும் மெய்ப்பாடு வேறு என அறிக. | ஒரு செய்யுட்கண் உயர்திணைப் பொருளும் அஃறிணைப் பொருளும் நிகழ்ச்சிக்குரிய உறுப்புக்களாக அமைந்திருக்கும். அவ்வுறுப்புக்களின் பண்புநிலை செயல்நிலைகள் பற்றிவரும் மெய்ப்பாடுகள் நாடகச் சுவைக்குரிய பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றுமாகலின் நாடகச்சுவை பற்றிய மரபினையும் எடுத்துக்காட்டிச் செய்யுட்குரிய மெய்ப் பாட்டிலக்கணத்தை வகுத்தோதுகின்றார் ஆசிரியர். | உடம்பின்கண் தோன்றுதலான் மெய்ப்பாடாயிற்று; என ஒருசாரார் விளக்கம் காண்பர். அது நாட்டியக்கலைக்கு ஓரளவு பொருந்துமேனும் ஏனை உரையானும் உள்ளத்துணர்வாகிய நினைவானும் மெய்ப்பாடு தோன்றுதலின் ஈண்டைக்குப் பொருந்தாமை அறியலாம். | இனி, மெய்ப்பாடு என்பது உள்ளுறை உவமம் போலவும் இறைச்சிப் பொருள்போலவும் நோக்கு முதலாய செய்யுள் உறுப்புக்கள் போலவும் அரிதின் உணருமாறு அமையாமல் எளிதின் விளங்குமாறு அமைதல் வேண்டுமென்பர். | "உய்த்துணர்வின்றி மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்" | என்றார். ஒரு செய்யுளுள் பல்வேறு மெய்ப்பாடுகட்குரிய அடிப்படைகள் அமைந்திருப்பின் அவற்றுள் தலைமைப்பாடுடைய பொருள்பற்றி இஃது இன்ன மெய்ப்பாடு என அறிதல் வேண்டுமென்பார். | "தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்" என்றும் விளங்க ஓதினார். அஃதாவது | அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை | மாதர்கொல் மாலுமென் நெஞ்சு | (குறள்-1081) | என்னும் செய்யுள், தகையணங்குறுத்தல் என்னும் அகத்திணைக் களவுப் பகுதிக்கண் தலைவன் கூற்றாக வந்ததாகும். | |
இதன்துறை; காட்சியும் ஐயமும் தெளிவும் பற்றியதாகும். தலைவன் கூற்றின்கண் அமைந்திருக்கும் பொருட்பாடு ஐயம். ஐயமென்பது புறத்திணைக்குரிய மெய்ப்பாட்டுப் பொருள்களுள் ஒன்று. (அகத்திணைக்கண் ஐயஞ் செய்தல் என்னும் பொருள் தலைவிக்குரியதாகும்) எனினும் புலவர் ஈண்டு முடித்துக்காட்டும் மெய்ப்பாடு புதுமை பற்றி வந்த மருட்கையாகும். மற்று "மாலும் என்நெஞ்சு" எனத்தலைவன் கூறலான் "மயக்கம்" என்னும் மெய்ப்பாடெனல் ஆகாதோ எனின், ஆகாது. என்னை? மாலும் என்பது ஐயத்தைச் சார்ந்து மருட்கைக்கு அடிப்படையாக நிற்றலின் என்க. | இனித், தொல்காப்பியனார் இந்நூலைச் செய்தருளிய காலத்துத் தமிழிசை நூல்களும், தமிழ்நாடக நூல்களும் பல்கியிருந்திருத்தல் வேண்டும் என்பதனை, | "இசையொடு சிவணிய நரம்பின் மறை" | (எழுத் - 33) | நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் | (அகத்-56) | எனவரும் குறிப்புக்களானும், கலிப்பா, பரிபாட்டு ஆகியவற்றிற்கு இலக்கணங் கூறுமிடத்து வரும் குறிப்புக்களானும் அறியலாம். மேலும் பொருளிலக்கணத்துள் வரும் மாந்தருள் பாணர், கூத்தர், பொருநர், பாடினி, விறலி என்போர் பெரும்பான்மையராகக் குறிக்கப்படுதலின் இசைத்துறை - நாடகத்துறைகள் பொதுவியலும் வேத்தியலுமாகப் பரந்து வழங்கியிருத்தல் வேண்டுமென்பதை அறியலாம். அந்நூல்கள் யாவும் இற்றைக்குக் காணக் கிடையாமையால் அவைபற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்துக்கள் இனிது புலனாகாதுள்ளன. | எனினும் தலைச்சங்ககாலத்தே வேந்தரானும் நல்லிசைப் புலவோரானும் தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவாகத் தொடர்பு மொழியாக உருவாக்கப் பெற்ற சமற்கிருதம் என்னும் வட மொழியுள், பண்டைய தமிழ்நூல்களை அடிப்படையாகக் கொண்டெழுந்த நூல்கள் இத்துறையில் இருப்பவற்றைத் துணைக்கொண்டு இடைக்கால இலக்கண நூலாசிரியன்மாரும் உரையாசிரியன்மாரும் நூலும் உரையும் செய்து போந்தனர். சுவையுணர்வு மன்பதைக்கெல்லாம் பொதுவாகலின், நாடகச் சுவை பற்றிய இலக்கணம் உலகமொழிகட்கெல்லாம் ஓரளவு பொதுவாக அமைந்திருத்தலைக் காணலாம். | முத்தமிழுள் இயற்றமிழுக்குரிய மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப்பு, நாடகத் தமிழுக்குரிய சுவை உறுப்பொடு தொடர்புடையதாகலின் ஆசிரியர் நாடக நூலார் கூறும் சுவை பற்றிய கோட்பாடுகளை ஒப்புமை பற்றி இவ்வியலுள் முதற்கண் எடுத்துக்கூறிப் பின்னர் இயற்றமிழுக்குரிய மெய்ப்பாட்டியல்புகளைப் பொதுவும் சிறப்புமாக வகுத்து ஓதுகின்றார். |
சூ. 250 : | பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் | | கண்ணிய புறனே நானான் கென்ப | (1) | குறிப்பு : பொருளியைபு கருதி இந்த சூத்திரத்தின் பொருள் அடுத்த சூத்திரத்தில் கூறப்பெறுகின்றது. |
|