சூ. 220 :

மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க

நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே

(24)
 

க - து :

இது  புலனெறி  வழக்குப்பற்றிச்  செய்யுள்  செய்யும் நல்லிசைப்
புலவோர்க் காவதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :  அகப்பொருளின்கண் தலைமக்களது ஒழுகலாறு கைகடந்து
நிகழுமிடத்து   அவற்றைச்   செய்யுள்   செய்யும்    நல்லிசைப்புலவோர்
அவர்தம்  நாணுடைமை  நீங்காமைக்குரிய   நல்லமரபுகளை  உள்ளடக்கி
இசைதிரிந்திசைக்கும் சொற்களைப் புணர்த்துக்கூறுக.
 

ஈண்டு ‘நாண்’ என்றது மகளிர்க்குரிய  குணத்தையன்று. இருபாலார்க்கும்
உரிய நாணுடைமை என்னும் பண்பினையாம். இதனைக்,
 

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற

(குறள்-1011)
 
என்றதனான் அறிக.
 
எ-டு :

"சான்றவிர் வாழியோ" என்னும் நெய்தற் கலியுள்

(139)

காணுநர் எள்ளக் கலங்கித் தலைவந்துஎன்

ஆணெழில் முற்றி உடைத்துள் அழித்தரும்

மாண்இழை மாதராள் ஏஎர்எனக் காமனது

ஆணையால் வந்தபடை

காமக் கடும்பகையிற் றோன்றினேற்கு ஏமம்

எழில்நுதல் ஈத்த இம்மா.
 

எனத்  தலைவன் மாதரார்  ஏர் உறுப்புடையது  போலவும் உணர்வுடையது
போலவும்  பொருள்வகை புணர்த்துக்  கூறிப் பின்னர் "அறிந்தனிர் ஆயின்
சான்றவிர்!

..... ....... ....... .... ..... ....... ...... ........

என்துயர் நிலைதீர்த்தல் நும்தலைக் கடனே"
 

என்றமையான் அச்செய்யுள்  நாணுத்தலைப்  பிரியாதமைந்துள்ளமை கண்டு
கொள்க.  அவ்வாறே  "அகலாங்கண்"   என்னும்  கலியும்  (143)  தலைவி
கூற்றாக அமைந்து நாணுத்தலைப் பிரியாதுள்ளமை கண்டு கொள்க.