சூ. 102 : | முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் நன்னய முரைத்தல் நகைநனி யுறாஅ அந்நிலை யறிதல் மெலிவு விளக்குறுத்தல் தந்நிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று இன்னவை நிகழும் என்மனார் புலவர் |
(10) |
க - து : | இயற்கைப் புணர்ச்சி முதலாகத் தோழியிற் புணர்வு ஈறாக நிகழும் களவொழுக்கத்தின்கண், நாணும் மடனும் பெண்மைய வாகலின் தலைவி தன் உணர்வுகளைக் குறிப்பினும் இடத்தினும் புலப்படுத்தலன்றிக் கூற்று மொழியாற் புலப்படுத்தல் பெரிதும் இன்மையான் பெருமையும் உரனுமுடைய தலைவன் கூற்று மொழியாற் புலப்படுத்தும். அந்நெறி தோன்றக் கூற்றும் செயலுமாக நிகழ்வனவற்றைத் தொகுத்து கூறுகின்றது. |
அஃதாவது மெய்தொட்டுப் பயிறல் முதலாகக் களஞ்சுட்டுக் கிளவி ஈறாகப் பின்னர்க் கூறப்பெறும் தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையானமையும் பொருள்கள் இவை என்றவாறு. முன்னிலையாக்கல் முதலிய கூற்றுமொழிப்பகுதிகள் தலைவியொடு தலைவனும், தலைவி தலைவனொடு தோழியும், தோழியொடு செவிலியும் கூற்று நிகழ்த்துமிடத்தும் ஏனை அகத்திணைக்குரிய மாந்தரிடத்துத் தலைவன் முதலானோர் கூற்று நிகழ்த்துமிடத்தும் பொருந்துமாற்றான் அமைந்து வரும் என்பது விளங்கப் பொதுப்பட "இன்னவை நிகழும் என்மனார் புலவர்" என்றார். அறத்தொடு நிற்றலும், வரைவு கடாதலும் பிறவும் பற்றி வருவனவெல்லாம் அடங்க இவை ஏழும் என்னாது ‘இன்னவை’ என்றார். அவையெல்லாம் ஓராற்றான் இவற்றுள் அடங்குமாறறிந்து கொள்க. இவற்றை இயற்கைப் புணர்ச்சித்திறன் கூறியதாக இளம்பூரணர் வரைதலும், இவை தலைவனுக்கே உரியவை என்பதுபோல நச்சினார்க்கினியர் வரைதலும் மயங்கவைத்தல், மாறுகொளக்கூறல், குன்றக்கூறல் என்னும் சிதைவின்பாற்படுமென்க. பொருள் : 1) முன்னிலையாக்கல் என்பது; தாம் உரைக்கப் புகுவனவற்றைக் கேட்டற்குரியாரை விளித்து முன்னிலையாக்கிக் கோடலாம். புள்ளும், விலங்கும், கடலும், கானலும் தம் நெஞ்சுமாகிய அஃறிணைப் பொருள்களும் அடங்கப் பொதுப்பட முன்னிலையாக்கல் என்றார். |
எ - டு : | இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல |
(குறுந்-58) |
இது தலைவன் பாங்கனை முன்னிலைப்படுத்தியது. |
| அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் தன்னூர் மன்றத்து என்னன் கொல்லோ இரந்தூண் நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே |
(குறு-33) |
இது தலைவி தோழியை முன்னிலைப்படுத்தியது, |
| வேம்பின் பைங்காய் என்தோழி தரினே |
| தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய! அற்றால் அன்பின் பாலே |
(குறுந்-196) |
இது தோழி தலைவனை முன்னிலைப்படுத்தியது. |
| யார்அணங் குற்றனை கடலே! |
(குறு-163) |
இது தலைவி கடலை முன்னிலைப்படுத்தியது. |
| ஒம்புமதி வாழியோ வாடை! |
(குறுந்-235) |
இது தலைவன் வாடையை முன்னிலைப்படுத்தியது. |
| குணகடற் றிரையது பறைதபு நாரை ..... ..... ...... ...... ...... ...... ....... ....... நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே |
(குறு-128) |
இது தலைவன் தன் நெஞ்சினை முன்னிலைப் படுத்தியது. பிறவும் சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க. 2) சொல்வழிப்படுத்தல் என்பது : முன்னிலையாக்கிக் கொண்ட மாந்தரையும் நெஞ்சு முதலாயவற்றையும் தன் கருத்தின்வழி ஒழுகவேண்டுதலாம். |
| கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றிரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ அறியும் பூவே |
(குறு-2) |
இது தலைவன் தும்பியைச் சொல்வழிப்படுத்தியது. |
| கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும் வானுயர் நெடுவரை ஏறி ஆனாது காண்கம் வம்மோ தோழி செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே |
(ஐங்-199) |
இது தோழி தலைவியைச் சொல்வழிப்படுத்தியது. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. 3) நன்னய முரைத்தல் என்பது : தமது ஆராத காதல் புலப்பட இதனைச் செய்தல் அறத்தாறாகும் எனத்தம் விருப்பினை இனிது எடுதியம்புதலாம். இஃது அகத்திணைக்குரியவாகப் பின்னர் ஓதப்பெறும் மெய்ப்பாட்டுப் பொருள்களுள் ‘மடந்தப உரைத்தல்’ என்னும் பொருளாம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே மெய்ப்பாட்டுப் பொருள் நிலைகளை அறிந்து கொள்க. மெய்ப்பாட்டுணர்வு தோன்றாமல் கூற்று நிகழ்தல் ஏலாதென அறிக. இதற்கு நச்சினார்க்கினியர் தனது கழிபெருங் காதலைக் கூறுதல் எனப் பொருளுரைப்பார். அஃதொன்றே ஆசிரியர் கருத்தாயின் நன்னயப் புரைத்தல் என வரைந்தோதியிருப் |
|
எ - டு : | யாயும் ஞாயும் யாரா கியரோ |
| எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் |
| யானும் நீயும் எவ்வழி யறிதும் |
| செம்புலப் பெயல்நீர் போல |
| அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே |
(குறு-40) |
இது தலைவன் தலைவியிடத்து நன்னய முரைத்தது. |
| பெருநன் றாற்றின் பேணாரும் உளரே |
| ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு |
| புலவி தீர அளிமதி இலைகவர்பு |
| ஆடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல் |
| மென்னடை மரையா துஞ்சும் |
| நன்மலை நாட நின்னல திலளே |
(குறு-115) |
இது தோழி தலைவனிடத்து நன்னய முரைத்தது. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
4) நகைநனியுறாஅ அந்நிலையறிதல் என்பது : கூட்டத்திற்கு ஏதுவாகும் முறுவற் குறிப்பு மிக்குத் தோன்றாமல் அடக்கி நிற்கும் தலைவியது பெண்மையுணர்வைத் தலைவன் அறிந்து கோடலாம். உறாமை தலைவிக்கும் அறிதல் தலைவற்கும் கொள்க. இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய நகுநய மறைத்தல் என்னும் பொருள் தோன்ற நிகழும் என்க. |
எ - டு : | சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் |
| திருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் |
| காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ |
| கொடுங்கே ழிரும்புறம் நடுங்கக் குத்திப் |
| புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் |
| தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் |
| கண்ணே கதவ வல்ல நண்ணார் |
| அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு |
| ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் |
| பெரும்பெயர்க் கூட லன்னநின் |
| கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே |
(நற்-39) |
என்பது தலைவன் தலைவி நிலையறிந்தது. |
5) மெலிவு விளக்குறுத்தல் என்பது : தணத்தலும் வரைவு நீட்டித்தலும் அலரெழுதலும், தமர் வரைவுமறுத்தலும் பிறவு மாகியவற்றான் நேர்ந்த வருத்தத்தைக் கேட்போர் உளங்கொளக் கூறுதலாம். |
அறத்தொடு நிலை, வரைவு கடாதல், அல்ல குறிப்படுதல் முதலியவை பற்றி நேர்வனவெல்லாம் இதன்கண் அடங்கும். |
எ - டு : | ஒண்டொடி அரிவை கொண்டனள் நெஞ்சே |
| வண்டிமிர் பனித்துறைத் தொண்டி யாங்கண் |
| உரவுக்கடல் ஒலித்திரை போல |
| இரவி னானும் துயிலறி யேனே |
(ஐங்-172) |
இது தலைவன் தன் மெலிவு கூறியது. |
| மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் |
| கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் |
| கொடிய ரல்லரெம் குன்றுகெழு நாடர் |
| பசைஇப் பசந்தன்று நுதலே |
| ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே. |
(குறு-87) |
இது தலைவி தன் மெலிவு கூறியது, பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. |
6) தம்நிலையுரைத்தல் என்பது: களவொழுக்கத்தின் கண் நிகழும் நிகழ்ச்சிகட்கு ஏற்பத்தலைவன், தலைவி, தோழி முதலானோர் தம் நிலையினை எடுத்துக் கூறுதலாம். |
தலைவன் பாங்கனிடத்தும், தோழியிடத்தும் கூறலும் தலைவி அறத்தொடுநிலை, வரைதல் வேட்கை பற்றியவாகக் கூறலும் தோழி சேட்படை உடன் போக்கு முதலியவை பற்றிக் கூறலும் பிறவும் இதன்கண் அடங்கும். |
எ - டு : | இடிக்குங் கேளிர் நுங்குறை யாக |
| நிறுக்க லாற்றினோ நன்றுமன் தில்ல |
| ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் |
| கையில் ஊமன் கண்ணிற் காக்கும் |
| வெண்ணெய் உணங்கல் போல |
| பரந்தன் றிந்நோய் தோன்றுகொளற் கரிதே |
(குறு-58) |
இது தலைவன் பாங்கனிடத்துத் தன்நிலை கூறியது. |
| உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை |
| ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு |
| இன்னா என்றிர் ஆயின் |
| இனியவோ பெரும தமியோர்க்கு மனையே |
| (குறு-124) |
இது தலைவி தலைவனிடத்துத் தன்நிலை கூறியது. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
7) தெளிவகப்படுத்தல் என்பது. ஒருவர் கொண்ட ஐயமும் அச்சமும் வருத்தமும் நீங்கத் தம் பேரன்பினையும் பிரியின் ஆற்றாத கேண்மையினையும் சூளுறவொடு கூறித் தெளிவிக்கத் தெளிதலாம். |
எ - டு : | மெல்லிய லரிவைநின் நல்லகம் புலம்ப |
| நிற்றுறந்து அமைகுவ னாயின் எற்றுறந்து |
| இரவலர் வாரா வைகல் |
| பலவா குகயான் செலவுறு தகவே. |
(குறு-137) |
இது தலைவன் தலைவியைத் தெளிவித்தல். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |
களவிற்குரிய தலைமக்களும் தோழி செவிலி பாங்கன் முதலானோரும் கூற்றாகவும் குறிப்பாகவும் பேசுவனவற்றையெல்லாம் இதன்கண் அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க. |
|