|
சூ. 108 : | முதலொடு புணர்ந்த யாழோர் மேன | | தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே | (16) | க - து : | அவற்றுள் அகனைந்திணைப் பகுதியாகச் சிறந்து வருவன இவை என்கின்றது. | பொருள் : கெடுதலில்லாத சிறப்பினையுடைய, பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல், ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும்பகுதி, தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறல், தண்டாதிரத்தல், மற்றையவழி என இடைநின்ற ஐந்தும் முதற் பொருளொடு பொருத்திய அகனைந்திணைக் கண்ணவாய் நிகழப்பெறும். |
களவொழுக்கம் என்பது அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் என்றும், அதுதான் துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பு என்றும் மேல் ஓதினமையான் அகனைந்திணைமேன என்பார் "யாழோர்மேன" என்றார். | "முதலொடு புணர்ந்த" என்றதனான் ஏனைக் கருப்பொருளோடு புணர்தலும் கொள்ளப்படும். எனவே ஏழ் பெருந்திணைகளுள் கைக்கிளையும், பெருந்திணையும் முதலொடு புணரா என்பதும் அவை முதலொடு புணர்ந்த ஐந்திணைக்கண் அவற்றின் பகுதியாக நிகழும் என்பதும் உணர்த்தியவாறு. | இடைநின்ற ஐந்து கிளவிகளும் புணர்தல் முதலாய உரிப்பொருள்கள் யாவும் அமைய நிகழ்தலின் "தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம்" என்றார். நிலம் என்றது ஈண்டுக் கிளவிகளைச் சுட்டிநின்றது. | இம்மூன்று சூத்திரங்கட்கும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இந்நூல் அமைப்பிற்கும் தமிழ் நெறிக்கும் ஒவ்வாப் பொருள் கூறிச் சென்றனர். இடைக்கால நூலோரும், அப்பாற் சாய்ந்தனர். வெள்ளைவாரணனார் காட்சி முதலாய மூன்றும், வேட்கை, ஒருதலையுள்ளுதல் முதலாய ஒன்பதும் ஆகப் பன்னிரண்டும் என்றும் அவற்றையே இங்ஙனம் பகுத்துணர்த்தினார் என்றும் கூறுவார். அவர் ‘பாங்கர் நிமித்தம், எனப்பாடங்கொள்ளாமல் "பாங்கு அந்நிமித்தம்" எனப் பாடமோதி அவ்வாறு உரைப்பார். அது பாடமாயின் பாங்கு என்பது வெற்றெனத் தொடுத்தலாகும். | அகரச்சுட்டு இனிது பொருள்பயவாது கவர்க்கும் என்க. மற்று அது நூற்கருத்தாயின் இவை "மெய்தொட்டுப் பயிறல்" என்னும் சூத்திரத்திற்கு முன்னர் அமைந்திருத்தல் வேண்டும். அன்றியும் இருவர்தம் உணர்வும் ஒத்தலாகிய குறிப்பறிந்து தெளிதலைக் கைக்கிளை என்பது பொருந்துமாறில்லை. அவற்றுள் நாணுவரையிறத்தல் பெருந்திணைப் பாங்காக ஆவதன்றி ஐந்திணைப் பகுதியாகக் கூறல் மயங்க வைத்தலாகும். எனவே அவர் கருத்துப் பொருந்தாமை தேற்றமாம். |
|