சூ. 124 :

முந்நா ளல்லது துணையின்று கழியாது

அந்நா ளகத்தும் அதுவரை வின்றே

(32)
 
க - து :
 

இடந்தலைப்பாடு பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :தலைவியாற்      களஞ்சுட்டப்பட்டுக்    கூடும்    இடந்
தலைப்பாட்டுக் கூட்டம் மூன்று நாள் அளவல்லது பாங்கியது துணையின்றி
நிகழாது;   அம்மூன்று    நாளுள்   பின்னிரு     நாட்களில்     பாங்கி
துணையாதல்வேண்டின் அத்துணை நீக்கும் நிலைமைத்தின்று.
 

என்றது; இயற்கைப்      புணர்ச்சி     தெய்வத்தான்  நிகழ்வதாகலின்
அதற்குப் பாங்கர்     துணையாதலில்லை.     மற்றைய    மூன்றுவகைப்
புணர்வின்கண்  இடந்தலைப்பாடு   தானேயும்   பாங்கனானும்    நிகழும்.
பாங்கன் தலைவி  ஆடிடம் அறிந்து வந்து தலைவனைச் செலுத்துதலன்றித்
தான்   இடைநின்று   கூட்டுதலின்மையின்  பாங்கன் ஏதுவாகக் கூடுதலும்
இடந்தலைப்பாட்டினுள்    அடங்கும்.   எனவே   இடைநின்று   கூட்டும்
பாங்கியே ஈண்டுத் துணை    எனப்பட்டது.     இதனைப்     பின்வரும்
‘துணைச்சுட்டு கிளவி கிழவிய   தாகும்’    என்பதனானும்   தெளியலாம்.
 

ஆக, முந்நாள் என்றது இடந்தலைப்பட்டுக் கூடும்  மூன்று   நாட்களை
என்பது போதரும்.    அவையாவன :   இயற்கைப்     புணர்ச்சியின்பின்
இருவரும்   இது நினைவு கொல்லோ கனவு கொல்லோ என்னும் ஐயத்தான்
பிற்றை   நாளும்  நெருநல்  நேர்ந்த    இடத்திற்குத்   தாமே   சென்று
ஒருவரை   ஒருவர்   எதிர்ப்பட்டுக்  கூடுதலும், கனவன்று எனத் தெரிந்த
பின்னர்த் தலைவியான் களஞ்சுட்டப்பெற்று   மற்றை  நாளும்   கூடுதலும்
அதன் பின்னர் இதனை  ஆயத்தார்    அறியின்   ஏதமாம்   என்றஞ்சித்
தலைவி  அக்களத்திடைச்  சொல்லாதிருப்பத்  தலைவன் தன் பாங்கனான்
அவள்  ஆடிடமறிந்து  சென்று குறிசெய்து உணர்த்தத் தலைவி ஆயத்தின்
நீங்கி வந்து கூடுலுதலுமாகிய மூன்றுமாம்.
 

அந்நாளுள் என்னாது  அந்நாளகத்தும்  என்றதனான்  துணை  நாடல்
ஒருநாளும் இருநாளும்  என்பதாயிற்று.  முதலாவது   இடந்தலைப்பாட்டின்
பின் தலைவன் தலைவியின் நலம் பாராட்டி வற்புறுத்தவிடத்துத் தெளிவுற்ற
தலைவி, ஒன்றித் தோன்றும் தோழி துணையாதல் நலமெனக் கருதி அவள்
துணையாகக்   குறிவழிச்   சென்று   கூடுதலும்   ஒரோவழி  நிகழுதலின்
"அந்நா ளகத்தும் அதுவரை வின்றே" என்றார்.
 

பாங்கி   மூவகையான்   மதியுடம்பட்ட   பின்னர்த் தான் இடைநின்று
இருவரையும் கூட்டுவிக்கும்   கூட்டமே   தோழியிற்   புணர்வு   என்னும்
பாங்கியிற்     கூட்டமாகும்.   அவ்வாறன்றிப்    பாங்கனான்    அறிந்து
சென்று   கூடும்   கூட்டமும்   இடந்தலைப்பாடாயினாற்  போலத் தோழி
இடைநின்று கூட்டுவியாமல் தலைவிக்குக் காவலாந்துணையே  ஆயவிடத்து
அதுவும்   இடந்தலைப்பாடேயாகும்   என்பது   விளங்க  அந்நாளகத்தும்
என்றார்.
 

இந்நாடக   வழக்கினையும்   உலகியல்      வழக்கினையும்    ஓராத
உரையாசிரியன்மார்    இயைபின்றி     இச்சூத்திரத்திற்கு    ஒவ்வாவுரை
கூறிச் சென்றனர்.