சூ. 282 :

முதலும் சினையுமென் றாயிரு பொருட்கும்

நுதலிய மரபின் உரியவை உரிய

(6)
 

க - து :

உவமங் கூறுதற்குரியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :உவமங் கூறுமிடத்து, முதற்பொருள், சினைப்பொருள் எனப்
பாகுபடும் அவ்விரு  பொருட்கும் தொன்னூலோர் கருதிக் கூறிய இலக்கண
மரபினான் வருதற்குரியவை உரியவாகும்.
 

என்றது,   உவமங்கூறுமிடத்து   முதற்பொருளுக்கு    முதற்பொருளும்
சினைப்பொருளுக்குச் சினைப்பொருளுமாக  வருதலேயன்றி  உவமத்தன்மை
ஒத்து அமையுமிடத்து அவை பிறழ்ந்து  வரினும் "தகுதியும்  வழக்கும்  தழீ இன" வாக வழங்கி வருமாயின் கொள்ளப்படும் என்றவாறு.
 

வழுவின்றி அமையும் தொடர்மொழியாக்கம் பற்றிய மரபுகளைக்  கூறும்
கிளவியாக்கத்துள்.
 

செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு

அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே

(கிளவி-16)
 

எனக்  கூறிப்  பின்னர், அவை ஒரோவிடத்துப் பிறழ்ந்துவரினும் அவை
மரபு பற்றி வந்தனவாயின் வழுவென்று களையப்படா என்பதனைத்,
 

தகுதியும் வழக்கும் தழீஇயின வொழுகும் 

பகுதிக் கிளவி வரைநிலை யின்றே 

(கிளவி-17)
 

எனக்   கூறினாராகலின்    (இச்சூத்திரத்தின்    மெய்யுரையை  எனது
சொல்லதிகார  உரையுட் கண்டுகொள்க).   அங்ஙனம் தகுதியும்   வழக்கும்
பற்றி வருமென்பார் "நுதலிய மரபின்" என்றார். ஆண்டு முதலும்  சினையும்
பிறழ்ந்து   வருங்கால் "உவமையும்  பொருளும் ஒத்தல்" வேண்டுமாகலான்
ஒவ்வாதன உரியவாகா   என்பது   விளங்க   "உரியவை  உரிய" என்றும்
கூறினார்.
 

"நுதலிய" என்றது கருதிக் கூறிய என்றவாறு. அதனான் முதலும் சினையு
மெனப்பகுத்தற்கு  ஏலாதனவற்றைச்  சான்றோர்  வழங்கியவாறு   கொள்க
என்றவாறாயிற்று. அஃதாவது
 

"விசும்பினன்ன சூழ்ச்சி" என்றவழி விசும்பு என்னும் பொருளும் சூழ்தல் என்னும்   தொழிலும்   முதற்பொருள்   எனக் கோடலும்,  "பூவமன்றன்று
சுனையுமன்று"  என்றவழிச்  சுனையை   முதற்பொருளெனக்  கொள்ளாமல்
சுனையுள்   பூத்  தோன்றிய   இடத்தை நோக்கிச் சினையாகக் கோடலும்,
இவ்வாறு வருவன பிறவுமாம்.
 

எ - டு :  "வரைபுரையும்  மழகளிற்றின்"  (புறம்-38) என்பது முதலுக்கு
முதலே  வந்த  உவமத்   தொடர்.   தாமரை  புரையும்  காமர்  சேவடி
(குறு-கடவுள்) என்பது சினைக்குச் சினையே   வந்த தொடர்.   நெருப்பின்
அன்ன சிறுகட் பற்றி (குறு-190)  என்பது  சினைக்கு முதல் உவமமாக வந்த
தொடர்.  அடைமறை  ஆயிதழ்ப்போது போற்கொண்ட குடைநிழற்றோன்று
நின்  செம்மலைக்  காணூஉ (கலி-84) என்பது முதலுக்குச் சினை உவமமாக
வந்தது.
 

உவமத்தோற்றம், வினை, பயன், மெய், உரு என்பவை பற்றி நிகழ்தலின்
திணையும்   பாலும்   மயங்கி  வருதல் இலக்கணமே என்பதும் அங்ஙனம்
வருதல்   வழுவமைதியாகாதென்பதும்,   "விரவியும்  வரூஉம்" என்பதனாற்
கொள்ளக்கிடந்தமையின்   ஆசிரியர் அதுபற்றி    விதந்து  கூறாராயினார். அவை மரபுபற்றி வேண்டியவாறு வருமென்க.
 

எ - டு : மாரி  யானையின் வந்துநின் றனனே (குறு-16) என்பது திணை
பிறழ்ந்து   வந்தது. ...... ....... ........ ........ ........ ......... .........  "கூவற்   குரலான்
படுதுயர்   இரவிற்கண்ட    உயர்திணை    ஊமையன்    போலத்  துயர்
பொறுக்கல்லேன்  தோழி நோய்க்கே" (குறு-232)  என்பது  உயர்திணையுள்
பால் பிறழ்ந்து வந்தது. கடும்பமர் நெடுவே ளன்ன மீளி உடம்பிடித்தடக்கை
ஓடாவம்பலர்   (பெரும்பாண்.75-76)   என்பது  உயர்திணைக்கண் ஒருமை
பன்மை    பிறழ்ந்து    வந்தது.    "அவ்வான்,   இலங்கு    பிறையன்ன
விலங்குவால்வை யெயிறு" என்பது அஃறிணையுள் பால் பிறழ்ந்து வந்தது.
 

பிறவும்   இவ்வாறு வருவனவற்றைக் கண்டுகொள்க. இவ்விலக்கணநெறி
நோக்காமல்   இவையெல்லாம்   மயங்கி வந்தன எனக்கருதிப் பேராசிரியர்
இச்சூத்திரத்துள் மிகைப்படுத்தி அடக்குவார்.
 

ஒத்தல்  என்பது    உவமத்திற்கும்    பொருளுக்கும்   பொதுவாகிய
தன்மையையேயன்றி அப்பொருள்கள் அல்ல என்க.