சூ. 255 : | மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு |
| யாப்புற வந்த இளிவரல் நான்கே |
(6) |
க - து : | மூப்பு முதலிய நான்கு பொருளும் பற்றி இளிவரல் பிறக்குமென்கின்றது. |
பொருள் :திட்பமுறவந்த இளிவரல் என்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள் மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமாகிய நான்குமாம் எனக் கூறுவர் புலவர். |
இவையும் இருபாலும் பற்றி வரும். |
1. மூப்பாவது :முதுமை. அஃதாவது புலன்கள் பொறிவழி நிகழாது இளைத்தலும் எழிலும் இளமையும் கழிதலுமாம். |
எ - டு : | வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின் |
| தீர்தல் செல்லாதென் உயிரெனப் பலபுலந்து |
| கோல்கா லாகக் குறும்பல ஒதுங்கி |
| நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று |
| முன்றிற் போகா முதிர்வினள் யாயும் |
(புறம்-159) |
இது தனக்குற்ற மூப்புப்பற்றி வந்த இளிவரல். |
| மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னொடு யானே |
| போர்த்தொழில் தொடங்க நாணுவல் |
(பேரா-மேற்) |
இது பிறர் மூப்புப்பற்றி வந்த இளிவரல். |
2. பிணியாவது நீங்காப் பசியும் நேராத காமமும் உறங்கா நிலையும் ஊறுசெய் நோயும் இவை போல்வன பிறவுமாம். |
எ - டு : | ஊரலர் தூற்றுமிவ் வுய்யா விழுமத்துப் |
| பீரலர் போலப் பெரிய பசந்தன |
| நீரலர் நீலம்என அவர்க்கஞ் ஞான்று |
| பேரஞர் செய்த என்கண் |
(கலி-142) |
இது தன்கண் உற்ற நோய்பற்றி வந்த இளிவரல். |
| சேயள் அரியோட் படர்தி |
| நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே |
(குறு-124) |
எனத்தன் நெஞ்சினை வேறுநிறுத்தித் தலைவன் கூறலின் இது பிறர் கட்டோன்றிய பிணிபற்றி வந்த இளிவரலாம். |
3. வருத்தமாவது இடுக்கண்.அஃதாவது எளிதின் முடியாமல் அரிதின் முயலும் முயற்சியான் வரும் துன்பம். |
எ - டு : | மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் |
| தாமிரந் துண்ணும் அளவை |
| ஈன்ம ரோஇவ் வுலகத் தானே |
(புறம்-74) |
என்பது தனக்குற்ற வருத்தம் பற்றி வந்த இளிவரலாம். |
| ஒன்றுஇரப்பான் போல்எளி வந்தும் சொல்லும்-உலகம் |
| புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் |
| அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச் |
| சொல்லஞ் சொற்கேட்டி ...? |
(கலி-47) |
என்பது பிறர்க்குற்ற வருத்தங் காரணமாகப் பிறந்த இளிவரல். |
4. மென்மையாவது : ஆற்றலும் திறனும் அமையாமையும் வலியின்மையுமாம். மென்மை எனினும் நொய்மை எனினும் ஒக்கும். நல்குரவெண்பார் இளம்பூரணர், அஃது அழுகைக்குப் பொருளாகக் கூறினமையான் சாலாதென்க. |
எ - டு : | பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் |
| பெண்மை யுடைக்கும் படை |
(குறள்-1258) |
என்பது தன் மாட்டமைந்த மென்மைபற்றி வந்த இளிவரல். |
| கடந்தடு தானை மூவிரும் கூடி |
| உடன்ற னிராயினும் பறம்புகொளற் கரிதே |
(புறம்-110) |
என்பது பிறர் மென்மை பற்றி வந்த இளிவரலாம். |
"யாப்புற" என்றதனான் "யானை, ஒருகை உடையது எறிவலோயானும் இருகை சுமந்து வாழ்வேன்" எனப் பகைக்கு மென்மை கற்பித்துக் கூறலும் இளிவரலாய் அடங்குமென்க. |