சூ. 103 :

மெய்தொட்டுப் பயிறல் பொய்பாராட்டல்

இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்

நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல்

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்

தீராத் தேற்றம் உளபடத் தொகைஇப்

பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்

பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்

குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்

பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்

ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்

நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்

தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி

குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்

தண்டா திரப்பினும் மற்றைய வழியும்

சொல்லவட் சார்தலின் புல்லிய வகையினும்

அறிந்தோ ளயர்ப்பின் அவ்வழி மருங்கிற்

கேடும் பீடும் கூறலும் தோழி

நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி

மடன்மா கூறும் இடனுமா ருண்டே

(11)
 

க - து :

களவொழுக்கத்தின்கண்      தலைமக்கட்கும்      சிறுபான்மை
ஏனைய    துணை      மாந்தர்க்கும்     உரியவாக அமையும்
உணர்வுப் பகுதிகளையும் கூற்றுப்   பகுதிகளையும்    தொகுத்து
இரண்டு சூத்திரங்களான்    மேற்கூறினார்.    இனித்  தலைவன்
தலைவி   முதலனோர்க்குக்   களவின் கண் கூற்று நிகழுமிடமும்
அவை    நிகழுமாறும்     கூறத்தொடங்கி    இச்சூத்திரத்தான்
இயற்கைப்        புணர்ச்சி     முதலாகத்   தோழியிற்புணர்வு
ஈறாக     நிகழும்     ஒழுகலாற்றினுள்     தலைவன்   கூற்று
நிகழுமிடமும் அவன் கூற்று நிகழ்த்துமாறும் கூறுகின்றார்.
 

குறிப்பு: இருவகைக் கைகோளுள்ளும் தலைவன் தலைவியர்க்குரியவாக
ஓதப்பெறும் கிளவிகள் யாவும் அகத்திணை புறத்திணைகளுள் உலகியலான்
வகுத்துக் கூறப்பெற்ற அந்தணர்   முதலிய   நாற்பாலார்க்கும் வேந்தனாற்
சிறப்பு நிலை எய்தியோர்க்கும்  வினைவல பாங்காயினார்க்கும் உரியவாகப்
புலனெறி வழக்குப்   பற்றிக்   கூறப்    பெறுவனவாகும்.   அவை யாவும்
ஒவ்வொருவர்  மாட்டும் நிகழ்வனவோ நிகழ வேணடுவனவோ அல்ல. சில
பொதுவாகவும் சில   நாற்பாலார்க்கும்    பிறர்க்கும்        சிறப்பாகவும்
அவரவர்க்கேற்ப   நிகழும்.   சில நிகழாமற் போதலும் அமையும். இவை
யாவும்    அகப்பொருள்    புறப்பொருள்  பற்றிய செய்யுளாக்கத்திற்குரிய
இலக்கண   மரபுகள்   என்பதனை   உணர்ந்து ஆசிரியர் கூறுவனவற்றை
அறிதல் வேண்டும்.
 

வரைதற்கு    ஏதுவாகிய கொண்டுதலைக் கழிதல் பிரிந்தவண் இரங்கல்
ஆகிய நிகழ்ச்சிகள்  பிரிவு   பற்றிய   ஒழுகலாறுகளாதலின் அவைபற்றிய
இலக்கணங்களை      அகத்திணையியலுட்     கூறினார்        ஈண்டுப்
பிரிவொழுக்கமல்லாத ஏனைய ஒழுகலாற்றிற் குரியவற்றையே   ஓதுகின்றார்
என அறிக இவ்விளக்கம் இனிவரும் கற்பியலுள்   கூறப்படும் கிளவிகட்கும்
பொருந்தும்.
 

பொருள் : (1) மெய்தொட்டுப்    பயிறல்    என்பது:    தலைவியின்
வேட்கையையும்    ஒருதலையுள்ளுதலாகிய குறிப்பையும் அறிந்த தலைவன்
அவள்   மாட்டுநிகழும்   அச்சமும் நாணமும் நீங்குதற் பொருட்டு அவள்
மெய்யினைத்    தண்டற்கு    முயல்தல்.  முயலுங்கால் சில நிகழ்த்துதலும்
கொள்க. பாலதாணையான் வேட்கை ஒத்து நிற்றலைப் புகுமுகம்  புரிதலான்
தெளிந்த தலைவன்   அவள்    மெய்யினைத் தீண்டற்கு   அணுகுங்கால்,
பொறிநுதல்     வியர்த்தல்     முதலாக     இல்வலியுறுத்தல்   ஈறாகத்

தலைவியின்பால்   நிகழும்    உணர்வு   வெளிப்பாடுகள்  இடையறவு
செய்தலான் தீண்டற்குப் பல்வழியானும்  முயலுதல்   தோன்றத்  தொடுதல்
என்னாது ‘பயிறல்’ என்றார். அங்ஙனம் முயன்று   தலைவியது  மெய்யைத்
தீண்டுதல் பின்னர் இடம் பெற்றுத் தழாஅல்  என்பதன்கண் நிகழுமாதலின்
பயிறல் என்றது தீண்ட முயலுதல் என்னும்  பொருள்பட நின்றவாறுணர்ந்து
கொள்க. "தொடற்கு" என்னும்   வினையெச்சம்   "வினையெஞ்சு கிளவியும்
வேறுபல் குறிய" (சொல் - 458) என்றதனான் செய்தென் எச்ச வாய்பாடுபட
நின்றதென அறிக.
 

2) பொய்பாராட்டல் என்பது :   தலைவியது   மெய்யினைத் தீண்டற்கு
முயலும்   தலைவன்  ஓர் ஏதுவைக் கற்பித்துக் கொண்டு அதன் வாயிலாக
அவள் நலத்தினைப் பாராட்டுதல். அஃதாவது, ‘அனிச்சப்பூ  கால்களையாள்
பெய்தாள்’ என அதனை நீக்குவான் போலவும்,மெல்லிடை யாதலின் அவள்
சூடிய கண்ணியில் தும்பி சென்று சேரின்  நலியும் என அதனை ஓச்சுவான்
போலவும் நெருங்குதல். இதனை அகப்பொருட்கோவை நூலார் வண்டோச்சி
மருங்கணைதல் என்னும் துறையாகக் கூறுவர்.
 

3) இடம்பெற்றுத்தழாஅல்   என்பது :    பொய்பாராட்டித்   தலைவன்
அணுகிய   வழி    நாணொடுங்கி    இல்வலியுறுத்தி     நிற்கும் தலைவி
புனலோடும்வழிப்    புற்சாய்ந்தாற்போல   உணர்வு  வழிப்பட்டு நிற்றலை
வாய்ப்பாகக்   கொண்டு    அவள் மெய்யினைத் தீண்டி அகப்படுத்தலாம்.
இடம் என்றது    தலைவியின்    உடன்பாடாகிய    வாய்ப்பினை. அவள்
உடம்பட்டு   நிற்கும்    நிலையைப்  பெறுதல் என்றார். இதனை "இடனில்
பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்"    என்பது போலக் கொள்க.  தழுவுதல்
என்றது கையால் அணைத்தலை. என்னை? கூடுதலுறுதலும்     நுகர்ச்சியும்
பின்னர் நிகழ்வனவாகக் கூறுதலின் என்க.
 

4) இடையூறு கிளத்தல் என்பது :   தலைவன் ஒருகையினான் அவளை
அணைத்தவழி இதுகாறும் உறாததோர் ஊற்றுணர்ச்சியான் ஒடுங்கி   நின்ற
நாண் மீதூரப்பெற்று அவன் தளையினின்று விலகி நாணத்தாற் புரியும் சில
செயல்கள்         கூட்டத்திற்கு      இடையூறாதலைத்      தலைவன்
எடுத்தியம்புதலாம்.
 

அவ் இடையூறுகளாவன:   தலைவி ஒரு  மரக்கொம்பினையோ மலர்க்
கொடியினையோ   சார்ந்து   தன்னை   மறைத்து   நிற்றலும்  தலைவன் 
நெருங்கியவழி   இரு   கைகளையும்   எடுத்துக்   கண்களைப்  பொத்தி
நிற்றலுமாம்.   இதனை    நாணிக்கண்  புதைத்தல் என்பர் கோவைநூலார்.
அங்ஙனம்   கண் புதைத்து நிற்றலைப்   பின்னர்     மெய்ப்பாட்டியலுள்
‘இருகையும்   எடுத்தல்’   என்னும்   பொருளாகக் கூறப்படுதலைக் கண்டு
கொள்க.
 

எ - டு :

சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய்
(நற் - 39)
 

இதன்கண்    சொல்லிற்    சொல்லெதிர்     கொள்ளாய்   என்றதனான்
மெய்தொடற்கு    முயன்றமையும்,   கூட லன்ன  நின்கரும் புடைத்தோள்
என்றதனான் பாராட்டியமையும் திருமுகம் இறைஞ்சி  நாணுதி என்றதனான்
இடையூறு கிளத்தியமையும் நிகழ்ந்தவாறு கண்டுகொள்க.
 

5) நீடுநினைந்திரங்கல்    என்பது :   அவ்இடையூறுகளான்    காலம்
நீடுதலை   எண்ணித்  தலைவன் உளமெலித்துரைத்தலாம். நீடுதல் என்னும்
தொழிற்பெயர் முதனிலையளவாய் நின்றது.
 

6) கூடுதலுறுதல் என்பது : தலைவனது ஆற்றாமையைக் கண்ட தலைவி
அளியளாய்க் கூட்டத்திற்கு உள்ளம் பொருந்தி நிற்றலாம்.  ஆண்டுச்  சில
சொல் நெஞ்சொடு கூறுதலும் கொள்க. கூடுதற்கு என நான்காவது விரித்துப்
பொருள் காண்க. சொல்லிய நுகர்ச்சி   வல்லே   பெறுதல்   என   மேல்
வருதலின்   இஃது   உடன்பட்ட  அளவே  யாமென  அறிக.   முன்னர்
மெய்தீண்டுதற்கு இயைந்தவள்  இதனாற்  கூட்டத்திற்கு உடன்பட்டாள் என
அறிக.
 

7) சொல்லிய நுகர்ச்சி என்பது : ஐந்திணை மருங்கின் காமக்   கூட்டம்
(களவு-1) எனவும் காமப் புணர்ச்சி (செய்- 178)    எனவும்  இலக்கணமாகச்
சொல்லப்   பெற்ற காம இன்பத்தினை நுகரும்   நுகர்ச்சியாம். அஃதாவது
மெய்யுறுதலான்  எய்தும்  இன்பமாம்.  ஈண்டுச்  சில  சொல்  நெஞ்சொடு
நிகழ்த்தலுமாம். நுகர்ச்சியும் என்னும் எண்ணும்மை தொக்கு நின்றது.
 

எ - டு :

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்

(குறள்-1105)
 

8) வல்லே    பெற்றுழித்தீராத்      தேற்றம்    உளப்படத்தொகைஇப்
பேராச்    சிறப்பின்   இரு   நான்கு   கிளவியும்   என்றது :  தெய்வப்
புணர்ச்சியாய   இன்ப   நுகர்ச்சியைப்   பாலதாணையாற்    றலைமக்கள்
விரைந்து   பெற்றவழித்   தலைவி  இது மாயமோ மருட்கையோ கனவோ
நினைவோ எனத்திகைத்து  இனி எவ்வாறாங்கொல்லோ எனக் கலங்குதலை
ஓர்ந்துணர்ந்த  தலைவன்  தனது  தீராத  காதன்மையை நயமுற  விளம்பி
எஞ்ஞான்றும்   பிரியேன்,   பிரியின்   தரியேன்   எனச்சூளுரை  கூறித்
தலைவியைத்  தேற்றித்  தெளிவித்தலாகிய  கிளவி   உளப்படத்  தொகை
பெற்றுத்  திகழும் வேறுபடாத சிறப்பினையுடைய அவ் எட்டுக் கிளவிகளும்
என்றவாறு.
 

பயிறலும், பாராட்டலும், தழாஅலும்,  கிளத்தலும்,  இரங்கலும் உறுதலும்,
நுகர்ச்சியும், தேற்றமும் என எண்ணிக் கொள்க.
 

‘பூவிடைப்   படினும்  யாண்டுகழிந்   தன்ன’   உணர்வுடையாராகலின்
காதலர்க்குப் பொழுது நீடுவதாகத்  தோன்றலன்றி  மெய்தொட்டுப்  பயிறல்
முதலாகிய நிகழ்ச்சிகள் விரைந்து  நிகழும்  என்பது அறிவித்தற்கு "வல்லே
பெற்றுழி"   என்றார். இவை எட்டும் பேராச்சிறப்பின  எனவே  இவற்றைச்
சார்ந்து   நிகழும்  தலைவியைப்  புகழ்தலும்,  தெய்வத்தை   வாழ்த்தலும்,
அணிந்தவை திருத்தலும், இடமணித்தென்றலும்,  ஆயத்துய்த்தலும்,  அவள்
செலவு கண்டுரைத்தலும்  பிறவும் இயற்கைப் புணர்ச்சிக்குரிய கிளவிகளாகக்
கொள்ளப் பெறும்.
 

எ - டு :

கொங்குதேர் வாழ்க்கை.... அறியும் பூவே
(குறு - 2)
 

இது புணர்ச்சிக்குப்பின் தன்காதன்மை தோன்ற நலம் பாராட்டியது.
 

அம்மெல் லோதி விம்முற் றழுங்கல்

எம்மலை வாழ்நர் இரும்புனம் படுக்கிய

அரந்தின் நவியறுத் துறுத்த சாந்தம்நும்

பரந்தேந் தல்குற் றிருந்திழை யுதவும்

பண்பிற் றென்ப வண்மை யதனாற்

பல்கால் வந்துநம் பருவரல் தீர

அல்கலும் பொருந்துவ மாகலின்

ஒல்கா வாழ்க்கைத் தாகுமென் னுயிரே

(நச்சர்-மேற்)
 

இஃது   இடம்   அணித்தெனக்   கூறித்தெளித்தது.   பிறவும்  சான்றோர்
இலக்கியங்களுட் கண்டுகொள்க.
 

இயற்கைப்  புணர்ச்சி பாலதாணையான் நிகழ்வதாகலின் அஃது ஒன்றாக
ஒருமுறையே    நிகழும்   என்பதறிவித்தற்கு    இவற்றைப்     பிரித்துத்
தொகைகொடுத்துக் கூறினார் என அறிக.
 

9) பெற்றவழி மகிழ்ச்சியும் என்றது; தலைவியைத்  தேற்றி ஆய்த்துய்த்து
நீங்கிய   தலைவன்-பிற்றை  நாளும் அவளைத்  தலைப்படுதலை  விரும்பி
நெருநற்  கண்ட  இடத்திற்குச்  சென்ற  காலை  தலைவியும்   அவ்வாறே 
நினைந்து  வந்தாளாக  அவளை  எய்தி  நுகர்ச்சி  பெற்றவழித் தலைவன்
மகிழும் மகிழ்ச்சியும் என்றவாறு.  ஆண்டுத் தலைவன் கூற்று  நிகழ்த்தலும்
ஒரோவழி நிகழுமெனக் கொள்க.
 

இஃது இடந்தலைப்பாடு என்னும் இரண்டாவது  பகுதியாகிய கூட்டமாம்.
இஃது  ஒருமுறையோ சில முறையோ நிகழலாம். எல்லாம் இடந்தலைப்பாடு
என்னும்  ஒரு  கூறாகவே   கொள்ளப்படும்.  அவ்வாறே  பாங்கற்கூட்டம்,
தோழியிற் புணர்வு என்னும் பகுதிகளும் ஒருமுறைக்கு மேற்பட்டு நிகழினும்
ஒரு கூறாகவே கொள்ளப்படும்.
 

10) பிரிந்தவழிக்   கலங்கலும்   என்றது :   இடந்தலைப்பட்டுக்  கூடிய
தலைவி   பிரிந்து  சென்று  ஆயத்தொடு  சேர்தலையும் ஆண்டு அவளது
தலைமைப்பாட்டினையும்   ஒன்றித்தோன்றும்   தோழி  அவளைத்  தழுவி
மகிழ்தலையும்  கண்டு  இனி அவளை அடைதல் அரிதாகுங்கொல்  எனத்
தலைவன் எண்ணி மனக் கலக்கமுறுதலும் என்றவாறு.
 

இயற்கைப்    புணர்ச்சியின்  பின் தலைவியைத்  தேற்றுவித்துத் தானே
விடுத்தலின்  ஆண்டுக்   கலக்கங்      கூறாராயினார்.   இவ்   இரண்டு
கிளவிகளையும் இடந்தலைப்பாட்டினைச் சாரவைத் தாராயினும் இனி  வரும்
பாங்கற் கூட்டத்திற்கும், பாங்கியிற் கூட்டத்திற்கும்   உரியவாக  வருதலின்
இவற்றை இடைநிலை விளக்காகக் கொள்க.
 

எ - டு :

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கு மிடத்து

(குறள்-1124)
 

11) நிற்பவை  நினைஇ  நிகழ்பவை  உரைப்பினும்  என்பது  :  மற்றை
நாளும்  தலைவியைத்  தலைப்படுதலை   விரும்பிச்   சென்ற   தலைவன்
ஆண்டுத்தலைவி   வாராதவழித்    தன்   உள்ளத்துக்    கிளர்ந்தெழும்
அவாவினையும் தலைவியை எய்தப் பெறாத துன்பினையும் நினைத்து, இனி
அவளை   எய்தும்   வழி   யாதென   எண்ணிப் பாங்கனாற் கூடுமெனத்
தன் நெஞ்சிற் குரைத்தலும் என்றவாறு.
 

தலைவி   ஆயத்தான்    சூழப்   பெற்றனள்  கொல்?  தாயர் காவல்
கொண்டனர் கொல்? என்றாற் போல எண்ணுதல்  நிற்பவை  நினைதலாம்.
இத்துயரினை மாற்றுவான் உயிரன்ன பாங்கனே  எனவும்  அவனை  நாடி
ஆவன புரிதல் வேண்டும் எனவும் கருதிக் கூறல் நிகழ்பவை உரைத்தலாம்.
உரைத்தல் பெரும்பான்மை தன் நெஞ்சொடும் சிறுபான்மை பாங்கனொடும்
நிகழும் எனக் கொள்க.
 

இது பாங்கற் கூட்டத்திற்குரிய கிளவி என்பது குற்றங்  காட்டிய வாயில்
பெட்பினும் என மேல்வருங் கிளவியான் அறியப்படும். பாங்கன் தலைவனது
வாட்டத்தையும்,     சோர்வையும்     நோக்கி     உற்றது   வினாதலும்
வினாவியறிந்தவழிக் கழறியுரைத்தலும்  பிறவும்   ஈண்டே  கொள்ளப்படும்
என்க.
 

மற்றுப் பாங்கன் கூட்டத்தைத்  தனித்துப்  பிரித்துக்  கூறாதது என்னை
எனின்? பாங்கன் கூற்றுப் பெரும்பான்மையும் தலைவனாற் கொண்டெடுத்து
மொழியப்பட்டு வருதலான் நூலோர் தலைவற்குரிய கிளவியுள் அடக்கினார் என்க.
 

12) குற்றங்காட்டிய   வாயில்   பெட்பினும்   என்பது  :   தலைவனது
குலப்பிறப்பு அறிவாற்றல் தகுதி போன்றவற்றை  எடுத்துக்காட்டிப் பாங்கன்
கழறியவிடத்துத் தலைவன்   தன்   நிலைமாறாமை   கண்டு,  இனி இவன்
ஆற்றாமையான்  இறந்துபடின்  ஏதம்  பெரிதாம்  என  அஞ்சித்  துணை
புரிவானாக, நின்னாற் காணப்பட்ட உரு  எத்தன்மைத்து எவ்விடத்தது என
வினாய   வழித்   தலைவன்  கூற்று  நிகழும் என்றவாறு. அஃதாவது தன்
துயரைக் களையப் பாங்கன்  விருப்பமுடையானாதற்கண்  தலைவன் கூற்று
நிகழும்   என்றவாறு.  இவை   இரண்டும்    பாங்கற்    கூட்டத்திற்குரிய
கிளவிகளாம்.
 

பிரிந்தவழிக் கலங்கல், நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைத்தல், குற்றங்
காட்டிய   வாயில்பெட்புறல்  ஆகிய   மூன்றும்    அகனைந்திணைக்கண்
கைக்கிளைப் பகுதியாக நிகழும்.
 

நச்சினார்க்கினியர்    பாங்கன்   இடஞ்சுட்டிச்   சென்று  தலைவனை
எய்துமாறு   கூறலன்றி   இடைநின்று   கூட்டுவித்தலின்மையான்  பாங்கற்
கூட்டம்  என்றது  தலைவன் பாங்கனைக் கூடும் கூட்டம் என்றும் அதுவும்
இடந்தலைப்பாட்டின் பகுதியேயாம் என்றும் கூறுவார்.
 

தலைவன்  இடந்தலைப்பாட்டின்கண்  தலைவியை அடைதற்கு இயலாத
நிலையில் பாங்கன் அவள் ஆடிடம் அறிந்து கூறிக்   கூட்டுவித்தலின் அக்
கூட்டத்திற்குப் பாங்கன் துணையும், காரணமும் ஆதல் தெளியலாம். களவுக்

கூட்டத்தை  நான்காக  வகுத்து அவற்றுள் பாங்கற் கூட்டமும் ஒன்று என
நூலோர்   கூறியுள்ளமையான்   நச்சினார்க்கினியர்   கருத்து   நூலொடு
பொருந்தாமையறியலாம்.
 

எ - டு :

பண்டையை அல்லைநீ இன்று பரிவொன்று

கொண்ட மனத்தை எனவுணர்வல் - கண்டாயால்

நின்னுற்ற தெல்லாம் அறிய வுரைத்தியாற்

பின்னுற்ற நண்பினாய் பேர்ந்து

(நச்-மேற்)
 

இதுபாங்கன் தலைவனை உற்றதுவினாவியது.
 

எலுவ சிறஅர் ஏமுறு நண்ப

புலவ தோழ கேளா யத்தை

மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்

பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக்

கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்

புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே

(குறு-129)
 

இது தலைவன் உற்றது உரைத்தது.
 

தேரோன் தெறுகதிர் மழுங்கினும் திங்கள்

தீரா வெம்மையொடு திசைநடுக் குறினும்

பெயராப் பெற்றியிற் றிரியாச் சீர்சால்

குலத்திற் றிரியாக் கொள்கையும் கொள்கையொடு

நலத்திற் றிரியா நாட்டமும் உடையோய்

கண்டதன ளவையிற் கலங்குதி எனின்இம்

மண்டிணி கிடக்கை மாநிலம்

உண்டெனக் கருதி உணரலன் யானே

(நச்-மேற்)
 

இது பாங்கன் கழறியுரைத்தது.
 

இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

(குறு-58)
 

இது கழறிய பாங்கற்குத் தலைவன் ஆற்றாமை உரைத்தது.
 

பங்கயமோ துங்கப் பனிதங்கு மால்வரையோ

அங்கண் விசும்போ அலைகடலோ-எங்கோவிச்

செவ்வண்ண மால்வரையே போலும் திருமேனி

இவ்வண்ணம் செய்தாட் கிடம்

(நச்-மேற்)

இது பாங்கன் நின்னாற் காணப்பட்ட உரு எத்தன்மைத்து?
எவ்விடத்தது? என்று வினாவியது.
 

கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க

ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று

அதவத் தீங்கனி யன்ன செம்முகத்

துயத்தலை மந்தி வன்பறழ் தூங்கக்

கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து

குறக்குறு மாக்கள் தாளங் கொட்டும்அக்

குன்றகத் ததுவே குழுமிளைச் சீறூர்

சீறுரோளே நாறுமயிர்க் கொடிச்சி

கொடிச்சி கையகத் ததுவேபிறர்

விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே

(நற்-95)
 

இது தலைவன் இவ்விடத்து இத்தன்மைத்து எனக்கூறியது.
 

நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை

மெய்ந்நிலை திரியா மேதகு சுற்ற மொடு

எய்துதல் அரிதென் றின்னன மிரங்கிக்

கையறு நெஞ்சமொடு கவன்றுநனி பெயர்ந்தவென்

பைதல் உள்ளம் பரிவு நீக்கித்

தெய்வத் தன்ன தெரியிழை மென்றோள்

எய்தத் தந்த ஏந்தலொடு எம்மிடை

நற்பாற் கேண்மை நாடொறு மெய்தல்

      

அப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெமக்கே

(நச்-மேற்)
 

இது  பாங்கனால்   இடந்தலைப்பட்டுத்   தலைவியைக்  கூடிய  தலைவன்
பாங்கனது கேண்மையை உவந்து கூறியது.
 

13) பெட்டவாயில்  பெற்று  இரவு  வலியுறுப்பினும்  என்பது : தலைவி
ஆடிடமறிந்து   வந்து  கூறுந்  துணையல்லது பாங்கன் தலைவியை இரந்து
தலைவியைத் தலைவனொடு  கூட்டுவித்தல் புலனெறி வழக்கமின்மையான் -
இனித்  தலைவியை   எய்துதல்  பாங்கனாற்  கடைபோகாதெனக்  கருதிய
தலைவன்   இடைநின்று   கூட்டுவித்தற்குத் துணையாவாள் தோழியே என
ஓர்ந்து தோழியை எய்தித் தன்  ஆராத காதலை  இரந்து  பின்னிற்றலான்
வற்புறுத்துமிடத்தும் என்றவாறு.
 

பெட்டவாயில்   என்றது   தோழியை.   அஃதாவது     தலைவியான்
விரும்பப்பட்டவள்   என்பது  பொருள்.  அதனான் தோழிக்கு அஃதொரு
காரணப் பெயராயிற்று.
 

தெளிவகப்படுத்தித்   தலைவியை  ஆயத்துய்த்த  காலை ஆயத்தாருள்
தலைவி  சிறப்பாக நாடிச் சென்று அவளை அடைந்தமையும் அவளும் தன்
பிரிவாற்றாமை   தோன்றத்   தலைவியைத்   தழுவிக்    கொண்டமையும்
கண்டிருந்தானாதலின் அவளே இவட்கு உயிரன்ன பாங்கி எனத் தலைவன்
அறிந்தானாயினான் என்க. பெறுதல் = தோழியைத் துணையாகப்  பெறுதல்.
இரவு  =  தான்   எளியனாய்   இரந்து  பின்னிற்றல்.  எ-டு :  வந்துழிக் கண்டுகொள்க.
 

14) ஊரும் பேரும் கெடுதியும்  பிறவும்  நீரிற்குறிப்பின்  நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும்  பகுதியும் என்பது  :  இரந்து பின்னிற்றலைக்கருதி
தலைவன் தலைவியும் தோழியும் தனித்திருந்த செவ்வி  நோக்கிச்   சென்று
நீவிர் வாழும் இடம் யாது? எனவும் நும்பெயரறியும் வேட்கையேன் எனவும்
யான்  கெடுத்திழந்த   பொருள்   இவ்வழி  வரக்கண்டனிரோ?   எனவும்
வினவுவான் போலத் தன்  நெஞ்சத்து நீர்மை விளங்கும் குறிப்பினான் தன்
நோக்கம்  தோழியின்   உள்ளத்தே   நிரம்புமாறு   தன்    குறையினைத்
தெரிவிக்கும் பகுதிக்கண்ணும் என்றவாறு.
 

தலைவன்   தன்  உள்ளக்கிடக்கையைத்   தோழி   நன்கறியுமாற்றான்
கூறுவான்   என்பது  விளங்க  ‘நிரம்பக்   கூறி’   என்றார்.    தலைவன்
குறிப்பினைத்   தோழி    முற்றும்   உணர்ந்து கொள்ளுதலைப் பின்னர்த்
தோழிக்குரிய  கிளவிகள்   கூறுமிடத்து  "இருவரும்  உள்வழி அவன் வர
உணர்தல்’ என ஓதுமாற்றான் அறிக.
 

‘பிற’   என்றதனான்  நும்  ஊர்க்குச்  செல்லும் வழியாதெனவும் வாய்
வாளாதிருப்பது  என்?  எனவும் வினாதல் கொள்க. இதனை வழிவினாதல்,
ஒழிந்தது வினாதல் என்ப கோவை நூலார். இங்ஙனம் ஊர் வினாதல் முதல்
பலவாறாகத் தலைவன் தன் குறிப்பினை உணர்த்தலின் ‘குறையுறும்  பகுதி’
என்றார்.
 

கெடுதிவினாதலாவது,  மானும்   மரையும்   யானையும்  பிறவும்  தன்
வேட்டைக்குத்   தப்பிப்  புண்ணொடு  இவ்வழிப்  போந்தனவோ?   என
வினாதலும்  என்  நெஞ்சும் உணர்வும் இழந்தேன் அவற்றைக் கண்டிரோ?
என வினாதலுமாம்.
 

பகுதி  என்றனான்  தோழி  தனித்திருந்த  விடத்து அவற்றுள் ஏற்பன
கூறிக் குறையுறுதலும்  தழையும்  கண்ணியுமாகிய கையுறை தந்து ஏற்குமாறு
கூறுதலும் பிறவும் கொள்க. இவை தோழி மதியுடம்பாட்டிற்குக்  காரணமாக
அமைதலைத் தோழிக்குரிய கிளவிகளுள் கண்டு கொள்க.
 

எ - டு :

அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்

கன்றுகால் யாத்த மன்றப் பலவின்

வேர்க்கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும்பழம்

குழவிச் சேதா மாந்தி யயலது

வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும்

பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச்

சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லெனக்

கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த

செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக்

கொய்புனங் காவலும் நுமதோ?

கோடேந் தல்குல் நீடோ ளீரே

(நற்-213)
 

இது ஊரும், செய்தியும் பற்றி வினாவியது.
 

செறிகுரல் ஏனற் சிறுகிளி காப்பீர்

அறிகுவேன் நும்மை வினாஅய்-அறிபறவை

அன்ன நிகர்க்குஞ்சீர் ஆடமை மென்றோளிர்

என்ன பெயரிரோ நீர்

(நச்-மேற்)
 

இது பெயர் வினாவியது.
 

நறைபரந்த சாந்தம் அறவெறிந்து நாளால்

துறைஎதிர்ந்து வித்தியவூழ் ஏனல் - பிறைஎதிர்ந்த

தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ?

ஏமரை போந்தன வீண்டு

(திணைமாலை-நூ.ஐ-1)

இது   கெடுதி   வினாயது.  பிறவும்   தொகையுள்ளும்   பிற  சான்றோர்
இலக்கியத்தும் கண்டு கொள்க.
 

15) தோழி குறையவட்சார்த்தி மெய்யுறக் கூறலும் என்பது=தலைவன்தான்
குறையுறுதல்   தலைவியிடத்ததாய்   இருந்தது எனத் தோழி  தலைவியைச்
சார்த்தி (ஓர்ந்து) உண்மையென உணருமாறு கூறுதலும் என்றவாறு.
 

அஃதாவது  இருவரும்  உள்வழிக் குறிப்பாகக் கூறிய தலைவன் தோழி
தனிந்திருந்த   வழிக்  கூறுங்கால்   தான்   குறையுறுதல்    தலைவியை
நோக்கியதாகும்  என  அவள்  உணருமாறு  கூறும் என்றவாறு. ‘மெய்யுற’
என்றது தலைவன் கூறுவன உண்மை எனத் தோழி உள்ளத்திற்  பொருந்த
என்றவாறு.
 

எ - டு :

பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்

தண்கமழ் புதுமலர் நாறும் ஓண்டொடி

ஐதமைந் தகன்ற அல்குல்

கொய்தளிர் மேனி ! கூறுமதி தவறே

(ஐங்-176)

இது  தலைவி   இவ்வாறு   கொண்டனள் அதற்குக் காரணம் என்? எனத்
தோழியைக் குறையுற்றது.
 

இதனைத்  தோழி  கூற்றாகக்  கொண்டு பொருள் கூறுதல் நூல்நெறிக்கு
முரணாம்   என்னை?  பின்னர் முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்துரைத்தல்
முதலாகத் தோழி கூற்று நிகழுமாறு ஆசிரியர் ஓதலானும் தலைவன் கூற்றுப்
பற்றிய   சூத்திரத்துள்   தோழி கூற்றினை இடைவைத்தல் குற்றமாகலானும்
என்க. இதனை நச்சினார்க்கினியர் உரையானும் உணர்க.
 

16) தண்டாதிரப்பினும்   என்பது  :  தோழி  கூற்றானும்  குறிப்பானும்
ஏதிலான்   போல  நடந்துகொள்ளுமிடத்துத்  தனது தலைமைப் பாட்டிற்கு
ஒவ்வாதெனத்   தவிராமல்    எளியனாய்க்  கையற்று  இரந்து  கூறுதலும்
என்றவாறு.
 

தண்டாது   என்பதற்கு  நிறைவுற்றமையாது  என்பதும் பொருளாகலான்
தோழியிற்புணர்வு ஒருகால் நேர்ந்த பின்னரும், வரைதலை  மேற்கொள்ளும்
வாய்ப்பு நேராதவழிக் களவினை நீட்டிப்பான் பகற் குறியும்  இரவுக் குறியும்
வேண்டி நிற்றலும் இதனானே கொள்க.
 

எ - டு :

பாலொத்த வெள்ளருவிப் பாய்ந்தாடிப் பல்பூப்பெய்

தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்தென்

நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பாள் எவன்கொலோ

அஞ்சாயற் கேகோவல் யான்

(திணைமாலைநூ-ஐ-18)
 

இஃது ஆற்றாமை கூறி இரந்தது.
 

"தடமென் பணைத்தோள் மடநல்லீரே

எல்லும் எல்லின்று அசைவு மிகவுடையேன்

மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டி யானும்இக்

கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ"

(அகம். 110-10-13)
 

இது   குறிப்பான்   இரவுக்குறி    வேண்டி  இரந்தது.  பிறவும் சான்றோர்
செய்யுள்வழிக் கண்டுகொள்க.
 

17) மற்றைய வழியும் என்பது : தலைவியைக் குறியிடத்து  எதிர்ப்பட்டுக்
கூறலும் கூட்டத்தின் பின்னர்த் தலைவியைப்  புகழ்ந்து  கூறுதலும்  அல்ல
குறிப்பிட்ட வழி நெஞ்சொடு கூறுதலும் ஆகியவிடத்தும் என்றவாறு.
 

இவ்  ஐந்து   கிளவிகளும்  பாங்கி  ஏதுவாகத்   தலைவியைக்  கூடும்
கூட்டத்திற்குரியவாக   அமைதலின்   இவற்றை   யாழோர்   கூட்டமாகிய
ஐந்திணைப் பகுதியாம் எனக் கூறுவர்.
 

18) சொல்லவட்  சார்த்தலின்  புல்லிய வகையினும் என்பது : தலைவன்
தான் இரந்து கூறுவனவற்றைத் தோழி   தலைவியைச்  சார்த்திமொழிதலின்
புல்லிய நெஞ்சத்தனாகிய வகையினும் என்றவாறு.
 

என்றது :  அவளறிவுறுத்துப்   பின்வா  என்றலும், பேதைமையூட்டலும்
முன்னுறுபுணர்ச்சி முறைநிறுத்துரைத்தலும் பிறவுமாக  நீயே தலைவியிடத்துச்
சென்று நின்குறை முடித்துக் கொள்க எனத்தோழி கூறியவிடத்துச் சுமந்தான்
தன்தோளின் நீக்கிய முடவன் போலப் புல்லிய  நெஞ்சத்தனாய்க்  கலங்கிக்
கூற்று   நிகழ்த்தும்   என்றவாறு.  ஆண்டுச்  செய்வதறியாது  கலங்கலின்
புல்லியவகையினும்   என்றார். புல்லியவகை = புற்கென்ற   வகை   எனப்
பண்பின் மேல் நின்றது.
 

இதுமுதலாக   மடன்மா கூறுதல் இறுதியாக உள்ள நான்கு கிளவிகளும்
ஐந்திணைக்கண்  நிகழும்  பெருந்திணைப்  பகுதியாம் என மேற்கூறுதலின்
இதற்கு இதுவே பொருளாதல் தெளியப்படும்.
 

எ - டு :

நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்

பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளந் தாங்கா வெள்ளம் நீந்தி

அரிதவா வுற்றனை நெஞ்சே! நன்றும்

பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

(குறு-29)
 

19) அறிந்தோளயர்ப்பின்   அவ்வழிமருங்கிற்   கேடும்  பீடும் கூறலும்
என்றது :  தலைவன்  வரையாது  களவுநீட்டித்தலைத்  தவிர்க்க வேண்டித்
தலைவி இற்செறிக்கப் பெற்றாள் எனவும் காவற்குள்ளாயினாள் எனவும் நின்
குறையை உணர்த்தற்கு  அரியளாயினாள்  எனவும் தோழி சோர்வுற்றுரைப்
பின்   அவ்விடத்துத்   தலைவி   தன்னைக்   காணாமையான்   எய்தும்
துன்பினையும் தன்னை  இன்றியமையாத   அவள்     காதற்சிறப்பினையும்
கூறுதலும் என்றவாறு.
 

எ - டு :

தண்டழை செரீஇயும் தண்ணென வுயிர்த்தும்

கண்கலுழ் முத்தம் கதிர்முலை யுறைத்தும்

ஆற்றினள் என்பது கேட்டனம் ஆற்றா

என்னினும் அவளினும் இகந்த

இன்னா மாக்கட்டிந் நன்ன ரூரே (நச்-மேற்)

தோளுங் கூந்தலும் பலபா ராட்டி

வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோற்

குட்டுவன் தொண்டி யன்னவெற்

கண்டு நயந்துநீ நல்காக் காலே

(ஐந்குறு-178)
 

எனவரும். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க.
 

20) தோழி   நீக்கலின்   ஆகிய   நிலைமையும்  நோக்கி   என்பது :
[உம்மையை நிலைமை நோக்கியும் என மாற்றிக் கூட்டிப்பொருள்  கொள்க]
இவ்விடத்துக் காவலர் கடுகுவர்,  எம் ஐயர்காணின் ஏதமாம்,  உலகியலான்
வந்து தலைவியைப் பெறுக எனத் தோழி சேட்படுத்திக்  கூறிய   நிலையை
எண்ணிக் கையற்றுக் கூறலும் என்றவாறு.
 

எ - டு :

பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்

பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும் மற்றுஇவள்

உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய

தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்

முறையுடை யரசன் செங்கோல் அவையத்து

யான்தற் கடவின் யாங்கா வதுகொல்

பெரிதும் பேதை மன்ற

அளிதோ தானேஇவ் அழுங்க லூரே

(குறுந்-276)
 

உரைத்திசின் தோழியது புரைத்தோ வன்றே

துருக்கங் கமழும் மென்றோள்

துறப்ப என்றி இறீஇயர் என்உயிரே

(சிற்றட்டகம்)
 

எனவரும்.
 

21) மடன்மா   கூறும்  இடனுமாருண்டே என்பது : அஞ்சி யச்சுறுத்தல்
உலகியல்புரைத்தல்   முதலியவற்றான்   தோழி சேட்படுத்தியவழியும், தமர்
உடன்படார் எனக் குறிப்பாற் கூறிய  வழியும்,  இனி  மறுகின்  ஆர்ப்பெழ
மடலேறிப் பெறுதும் எனக்கூறுதலும் உண்டு என்றவாறு.
  

ஏறியமடற்றிறம்  பெருந்திணைக்குரியதாகலின்  அகனைந்திணைக்  கண்
நிகழும்   பெருந்திணைப்பகுதி,   கூற்றாக  உரைக்கு   மளவே அமையும்
என்றற்கு ‘மடன்மா கூறும்’ என்றும் இம்மடற் கூற்றும் ஒரோவழி   நிகழும்
என்பது உணர இடனுமாருண்டே என்றும் கூறினார்.
 

மடன்மா  எனச்  சிறப்புப்   பற்றிக்    கூறினார். ஏனை வரைபாய்வல்
எனக்   கூறும்  இடனும்   உண்டெனக்   கொள்க.    "இடனுமாருண்டே"
என்றதனான்    இக்      கைகோளின்கண்    பிறவாறுவரும்   தலைவன்
கூற்றுக்களையெல்லாம் கூறப்பட்ட கிளவிகளுள் அடங்குமாறறிந்து அடக்கிக்
கொள்க.
 

எ - டு :

மாவென மடலும் ஊர்ப பூவெனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப

மறுகின் ஆர்க்கவும் படுப

பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே

(குறு-17)
 

எனவரும்.