சூ. 146 :

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க் காகிய காலமு உண்டே

(3)
 
க - து :

 கரணம் பற்றியதொரு வரலாறு கூறுகின்றது.
 

பொருள் : வண்புகழ்  மூவர்   தண்பொழில்  வரைப்பின்கண் பண்பும்
செயலும் குடிமையும் காரணமாக அந்தணர்,  அரசர்,   வணிகர், வேளாளர்
என நாற்பாலாக அமைந்துவரும் தமிழின

மாந்தருள்,   நிரல்முறையான்   மேலமைந்த   முப்பாலார்க்கும்  உரியதாக
ஓதப்பெற்ற     திருமணக்கரணம்,   இறுதிக்கண்   அமைந்த   வேளாண் மாந்தர்க்கும் ஆகி நடந்த காலமும் உண்டு.
 

என்றது : ஒரு கால எல்லையளவும்  திருமணக்கரணம் நாற்பாலார்க்கும்
ஒத்ததொரு முறையாக நிகழ்ந்து வந்து பின்னர் வேளாண் மாந்தர்க்கு அவர்
மேற்கொண்டு புரிந்த பல்வேறு தொழிற்கூறுபாடு   காரணமாகக் கரணமுறை
சிறப்பாக யாத்தமைக்கப்   பெற்றது  என்றவாறு.   அஃதாவது   வேளாண்
மாந்தரின் குலவழக்காகிய   உழுதுண்ணலும்   உழுவித்துண்ணலும்   பற்றி
மரபியலுள்
 

வேளாண் மாந்தர்க்கு உழுதூ ணல்லது

      

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி

(மரபு-81)
 

எனக்கூறிப் பின்னர்
 

வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்

வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே (மரபு-82)

எனவும்
 

வில்லும் வேலும் கழலும் கண்ணியும்

தாரும் மாலையும் தேரும் மாவும்

மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய (மரபு-84)

எனவும்
 

கூறுதலான், அவர்தாம் வேந்தராற் சிறப்புப்  பெற்றுப்  போர் மறவராகவும்,
தானைத் தலைவராகவும், தண்டத்தலைவராகவும்   அமைச்சராகவும் குறுநில
மன்னராகவும்  வினைகளை மேற்கொண்டு  ஒழுகுமிடத்துச்   செய்தொழில்
வேற்றுமையான் விளங்கும் சிறப்பு நிலைகளுக்கேற்ப வேளாண் மாந்தர்க்குச்
சிறப்பாகக்   கரணம்   யாத்தமைக்கப்பட்டது   எனப்  பண்டை  வரலாறு
றித்துணர்த்தப் பெற்றது என்க.
 

பண்டைய  தமிழரின்   நாற்பாலமைப்புப்   பற்றிப் புறத்திணையியலுள்
கூறப்பட்டுள்ளவற்றை ஓர்ந்து கொள்க.