சூ. 113 :

மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல்

நிறைந்த காதலின் சொல்லெதிர் மழுங்கல்

வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல்

பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்

கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்

இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய்த யர்ப்பினும்

வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும்

நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும்

பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்

வருந்தொழிற் கருமை வாயில் கூறினும்

கூறிய வாயில் கொள்ளாக் காலையும்

மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு

நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்

உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல

வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும்

நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்

பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி

ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள்

அருமை சான்ற நாலிரண்டு வகையின்

பெருமை சான்ற இயல்பின் கண்ணும்

பொய்தலை யடுத்த மடலின் கண்ணும்

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்

வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்

குறியின் ஒப்புமை மருடற் கண்ணும்

வரைவுதலை வரினும் களவறி வுறினும்

தமர்தற் காத்த காரண மருங்கினும்

தன்குறி தள்ளிய தெருளாக் காலை

வந்தவன் பெயர்ந்த வருங்களம் நோக்கித்

தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்

வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்

பொழுதும் ஆறும் புரைவ தன்மையின்

அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்

காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும்

ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும்

தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்

அன்னவு முளவே ஓரிடத் தான

(21)
 

க - து :

இயற்கைப்புணர்ச்சி     முதலாக      உடன்போக்கு    ஈறாகக்
களவின்கண்    நிகழும்         தலைவியது      ஒழுகலாறும்
அவ்வழி   அவள்  கூற்று  நிகழ்த்துமாறும்  பற்றிய   கிளவிகள்
இவை என்கின்றது.
 

பொருள் :1) மறைந்தவற்  காண்டல்   என்பது : தலைவன் தன்னைக்
காணா  வண்ணம்  ஒரு கொம்பானும் கொடியானும் சார்ந்து மறைந்துநின்று
தான் அவனைக் காணுதல். இது தலைவற்கோதிய இடம் பெற்றுத் தழாஅல்,
இடையூறு கிளத்தல் ஆகியவை நிகழ்வுழி நிகழும்.
 

எ - டு :

‘கவவுக் கடுங்குரையள்’ என்னும் குறுந்தொகையுள்

கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி

தாய்காண் விருப்பின் அன்ன

சாஅய் நோக்கினள் மாஅ யோளே

(குறு-132)
 

எனத்தலைவன்    பாங்கனிடத்துக்   கூறிய    கூற்றினுள்    இந்நிகழ்ச்சி
புலப்படுமாறு கண்டுகொள்க.
 

2) தற்காட்டுறுதல் என்பது : அங்ஙனம் மறைந்துநிற்குமிடத்துத் தன்னை
முழுதும் மறைக்காமல் தலைவற்குச் சிறிது புலப்படுமாறு காட்டிநிற்றல்.
 

எ - டு :

மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு

விழைந்ததன் தலையும் நீவெய் துற்றனை

இருங்கரை நின்ற உப்பொய் சகடம்

பெரும்பெயல் தலைய வீஇந்த தாங்கிவள்

இரும்பல் கூந்தல் இயலணி கண்டே

(குறுந்-165)
 

இதன்கண் தலைவிதன் கதுப்பணி தோன்ற நின்று காட்டியவாறறிக.
 

3) நிறைந்தகாதலின்    சொல்லெதிர்    மழுங்கல் என்பது : தலைவன்
நிரம்பிய காதலுணர்வினான் வினவும் சொற்கு எதிர் மொழி பேச  இயலாது
நிற்றல். இது தலைவன் நீடு நினைந்திரங்கிக் கூறுதற்கண் நிகழும்.
 

எ - டு :

சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்

திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்

காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ

கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்

புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்

தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்

கண்ணே கதவ அல்ல நண்ணார்

அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு

ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்

பெரும்பெயர்க் கூடல் அன்னநின்

கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே

(நற்-39)
 

இம்மூன்றும்    தலைவியது    செயற்பாடு     பற்றியவையாதலின்   இக்
கிளவிகளின் நிகழ்வு தலைவன் கூற்றாற் புலப்படும் என அறிக.
 

4) வழிபாடுமறுத்தல் என்பது : தலைவன் வேட்கை மிகுதியானே இரந்து
நிற்றலை   உடன்படாமை    தோன்ற  இருத்தல்.  அஃதாவது தலைவனது
கருத்திற்கு  இசையும்  குறிப்பினைப்    புலப்படுத்தி   நிற்றல்.  அந்நிலை
தலைவன் இரந்து வழிபடுதலை  மாற்றுதலின் அதனை  ‘மறுத்தல்’ என்றார்.
இதற்கிதுவே பொருள் என்பதனை "மறுத்தெதிர்  கோடல்" என்பதனானறிக.
எ - டு : வந்துழிக் கண்டு கொள்க.
 

5) மறுத்தெதிர்கோடல்     என்பது   :   தலைவன்     வழிபடுதலை
மறுத்தமையோடமையாது      அவன்     விருப்பினை    எற்றுக்கோடல்
குறிப்பினளாதல். இது தலைவற்கோதிய கூடுதலுறுதல்  என்னுங் கிளவிக்குப்
பொருத்த நிகழும். எ-டு. வந்துழிக் கண்டுகொள்க.
 

6) பழிதீர்    முறுவல்    சிறிதே   தோற்றல்  என்பது  : தலைவனது
விருப்பத்திற்கு உடன்பாடு தோன்றக் குற்றமற்ற சிறு  நகையை  அளவாகப்
புரிதல்.
 

எ - டு :

யான்நோக்குங் காலைநிலன் நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்

(குறள்)
 

7) கைப்பட்டுக்   கலங்கினும்    என்பது :      தலைவன்     பொய்
பாராட்டுதலைப்    புரிந்து   இடம்   பெற்றுத்   தழுவுங்கால் அதுகாறும்
அறியாததோர் ஊற்றுணர்ச்சியானே உள்ளங்கலக்க முறுதற் கண்ணும்.
 

எ - டு :

கொடியவும் கோட்டவும் நீரின்றி நிறம்பெறப்

பொடியழற் புறந்தந்த பூவாப்பூப் பொலன்கோதை

தொடிசெறி யாப்பமை அரிமுன்கை அணைத்

தோளாய்!

அடியுறை யருளாமை ஒத்ததோ நினக்கு என்ன

நரந்தம்நா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்

பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை

நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ்

விரல்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்

நறாஅவிழ்ந் தன்னவென் மெல்விரற் போதுகொண்டு

செறாஅச் செங்கண் புதைய வைத்துப்

பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்

தொய்யில் இளமுலை இனிய தைவந்து

தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கும்

மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்

அதனால் அல்லல் களைந்தனன் தோழி

(கலி-54)
 

எனவரும்.
 

8) நாணுமிகவரினும்   என்பது  :  கூட்டத்தாற்  பிறந்தமெய் வேறுபாடு
கண்டு நாணம் மிக்கவிடத்தும் எ-டு. வந்துழிக் கண்டு கொள்க.
 

முறுவலித்தல் முதலிய மூன்றும் தலைவற்கோதிய  "சொல்லிய  நுகர்ச்சி"
என்னும் கிளவிக்கு ஏற்ப நிகழும்.
 

மறைந்தவற்   காண்டல்   முதலிய இவ்எட்டுக் கிளவிகளும் இயற்கைப்
புணர்ச்சிக்குரியனவாகும்.   இவற்றுள்   முதல்    மூன்றும்       ஏனைய
கூட்டங்களுக்கும் பொதுவகையான் உரியனவாகும்.
 

9) இட்டுப்பிரி    விரங்கினும்    என்பது : சொல்லிய நுகர்ச்சி வல்லே
பெற்றதன் பின்னர்த் தலைவன் தன் பெருநயப்புரைத்து   இடம்  அணித்து
என்றலும் பிறவும் கூறித் தெளிவுறுத்து ஒருவழித் தணத்தலாகப் பிரியுங்கால்
உளம்மெலிந்திரங்குதற் கண்ணும்.
 

எ - டு :

நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்

என்றும் என்றோள் பிரிபறி யலரே

தாமரைத் தண்டாது ஊதி மீமிசைச்

சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை

நீரின் றமையா உலகம் போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி

நறுதுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுவோ செய்பறி யலரே’

(நற்-1)
 
எனவரும்.
 

10) அருமைசெய்தயர்ப்பினும்  என்பது : புறம்  போந்து  விளையாடற்கு
இடையூறாக ஆயக்கூட்டம் சூழ்ந்து கிடத்தலான்

தலைவற்கு  அரியளாகி   இடந்தலைப்படுதலைத்   தவிர்ந்திருக்குமிடத்தும்
என்றவாறு. எ - டு. வந்தவழிக் கண்டு கொள்க.
 

11) வந்தவழி      எள்ளினும்     என்பது  :   பாங்கனான்  தலைவி
ஆடிடந்தெரிந்து தலைவன் வந்தவிடத்து அஃது ஆயத்தார்க்குப் புலனாகுங்
கொல்   என்னும்   அச்சத்தான்  கூட்டத்தை  இகழ்ந்திருத்தற்  கண்ணும்
என்றவாறு. இக்கூற்றுத் தலைவன்   சிறைப்புறத்தானாக  இருக்கத்  தலைவி
முன்னிலைப் புறமொழியாற் கூறுமென்க.
 

எ - டு :

மானடி யன்ன கவட்டிலை யடும்பின்

தார்மணி யன்ன வெண்பூக் கொழுதி

ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்

புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை

உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே

(குறு-243)
 

எனவரும்.
 

12) விட்டுயிர்த்தழுங்கினும்    என்பது :  அங்ஙனம் எண்ணிய தலைவி
தலைவனைப்போக   விட்டமையான்   வேட்கை   நலிய   நெட்டுயிர்த்து
வருந்துமிடத்தும் என்றவாறு. விடுதல் = கூடாது போக விடுதல்.
 

எ - டு :

பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்

காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்

பாசம்பட் டோடும் படுகல் மலைநாடற்கு

ஆசையின் தேம்புமென் நெஞ்சு.

(கைந்நிலை-3)
 

13) நொந்துதெளிவொழிப்பினும்   என்பது  :  ஒருகால் ஆயத்தைவிட்டு
நீங்கி   நின்றாட்கு   இடந்தலைப்பாடு   நேராவிடத்து  உள்ளம் வருந்தித்
தலைவன் தெளிவித்த தெளிவு ஒழிய நிற்குமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

மன்றத் துறுகல் கருங்கண் முசுவுகளும்

குன்ற நாடன் தெளித்த தெளிவினை

நன்றென்று தேறித் தெளித்தேன் தலையணி

ஒன்றுமற் றொன்றும் அனைத்து

(ஐங்-எழு-9)
 

14) அச்சம் நீடினும்   என்பது :  தலைவன் வரையாது நீட்டிக்குமிடத்து
அலர் முதலியவற்றைக்  கருதலான்  அச்சம்   மிக்க விடத்தும் என்றவாறு.
பொதுப்படக் கூறியதனான் தலைவன் கூறியசூள் பொய்த்தமையான் அவற்கு
ஊறுநேருங்கொல் என அஞ்சுதலும் கொள்ளப்படும்.
 

எ - டு :

மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி

வன்கல் அடுக்கத்துக் துஞ்சும் நாடன்

எந்தை அறிதல் அஞ்சிக்கொல்

அதுவே தெய்ய வாரா மையே (ஐங் 261)

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்

கொடிய ரல்லரெம் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.

(குறு-87)
 

15) பிரிந்தவழிக்   கலங்கினும்   என்பது : தலைவன் வரைபொருட்குப்
பிரிந்து சென்றவிடத்து உள்ளங்கலங்கினும் என்றவாறு.
 

எ - டு :

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க

விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்

பொலம்படைப் பொலிந்த வெண்டே ரேறிக்

கலங்கு கடற்றுவலை ஆழி நனைப்ப

இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்

யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்

தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே

(குறு-205)
 

16) பெற்றவழி   மகிழ்ச்சியும்  என்பது : வரைபொருள் முதலியவற்றான்
பிரிந்து   மீண்டதலைவனை   இருவகைக்  குறியிடத்தும்  எய்திய வழியும்
பிறவழியும்   அவனை   அடைந்தவழித்  தோன்றும்  மகிழ்வின் கண்ணும்
என்றவாறு.
 

எ - டு :

அம்ம வாழி தோழி நலமிக

நல்ல வாயின அளியமென் றோள்கள்

மல்லல் இருங்கழி மல்கும்

மெல்லம் புலம்பன் வந்த மாறே

(ஐங்-120)
 

17) வருந்தொழிற்   கருமை    வாயில்   கூறினும் என்பது : தலைவன்
குறியிடத்துவருதற்கு    இடையூறாகத்    தாய்துஞ்சாமை,   நாய்துஞ்சாமை
முதலிவை நிகழ்வனவற்றைத் தோழி உரைக்குமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து

இனிதடங் கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே
(குறு-6)
 

எனவரும்
 

18) கூறியவாயில்  கொள்ளாக்  காலையும் என்பது : தோழி தலைவனது
வருந்தொழிற்கு அருமை கூறியவழி அதனை மறுத்துத் தான் கூறியவற்றைத்
தோழி உளங்கொள்ளா விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

தெருவின்கண், காரணமின்றிக கலங்குவார்க் கண்டுநீ

வாரணவாசிப் பதம்பெயர்த லேதில

நீ நின்மேற் கொள்வ தெவன்?

(கலி-60)
 
எனவரும்.
 

19. மனைப்பட்டுக்   கலங்கிச்   சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல்
சான்ற அருமறையுயிர்த்தலும் என்பது தாயரான் இற்செறிக்கப்பெற்ற  காலை
இனித்தலைவனை அடைதல் அரிதாம் எனக்கலங்கி  உள்ளம் சிதைந்த வழி
ஆராய்ச்சி  சான்ற  அரிய மன்றலைக் கருதும்வண்ணம் தோழிக்குத் தனது
வரைதல் வேட்கையைப் புலப்படுத்து மிடத்தும் என்றவாறு.
 

மனைப்படுதலாவது  :  இச்செறிக்கப்பெற்றிருத்தல்  :  அது தலைவியது
மெய்   வேறுபாடு   கண்டு   ஐயுற்றதாயர்  அவள்  புறம்  போகாதவாறு
மனையகத்து வைத்துக் காவல் புரிதல். அருமறை என்றது மறையோர்தேஎம்
என முன்னர்க் கூறிய மணமன்றலை. மறை ஆகுபெயர்.
 

தலைவன்   வரைவு   மலிதற்கு   இயையும்    வண்ணம்   பல்வேறு
கோணங்களில் தோழி  வரைவுகடாதல்  வேண்டுதலின் நினைத்தல் சான்ற"
என்றார்.
 

எ - டு :

பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்

எலவென் றிணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்

புலவுங் கொல் தோழி புணர்வறிந் தன்னை

செலவுங் கடிந்தாள் புனத்து

(திணை ஐங் - 10)
 

இது இற்செறிப்புக் கூறிற்று.
 

சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே

துறைபோ கறுவைத் தூமடி யன்ன

நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

எம்மூர் வந்தெம் ஒண்டுறைத் துழைஇச்

சினைக்கெளி றார்கையை அவரூர்ப் பெயர்தி

அனைய அன்பினையோ பெருமற வியையோ

ஆங்கண் தீம் புனல் ஈங்கட் பரக்கும்

கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்

இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே

(நற்-70)
 

20) உயிராக்காலத்து  உயிர்த்தலும்    என்பது :  அங்ஙனம்    தனது
வேட்கையைத்    தோழியிடத்து     வெளிப்படுத்தாமல்     அடக்கியவழி
நெட்டுயிர்த்து ஏங்குமிடத்தும் என்றவாறு. இதனை நோயட வருந்தல் என்ப.
அவ்வழித்தானே தன்நெஞ்சொடு கிளக்குமென்க.
 

எ - டு :

தழையணி யல்குல் தாங்கல் செல்லா

நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக

அம்மெல் லாகம் நிறைய வீங்கிக்

கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின

யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்

அவல நெஞ்சமொடு உசாவாக்

கவலைமாக் கட்டிப் பேதை யூரே

(குறு-159)
 

21) உயிர்செல   வேற்றுவரைவு  வரினது மாற்றுதற் கண்ணும் என்பது :
தன்உயிர்    கழியுமாறு   நொதுமலர்   வரைவு   வேண்டிவரின் அதனை
(தோழிதுணையாக)    நீக்குதலை    மேற்கொண்டவிடத்தும்   என்றவாறு.
உயிர்செலவரின்    எனக்    கூட்டுக.   நொதுமலர் வரைவுகருதி வருதல்
தன்உயிரைப்      போக்கும்படியான    செயல்     என்பது     விளங்க
உயிர்செலவரின் என்றார்.
 

எ - டு :

அன்னை வாழி வேண்டன்னை புன்னை

பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை

என்ஐ என்றும் யாமே இவ்வூர்

பிறிதொன் றாகக் கூறும்

ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே -

(ஐங் - 110)
 

22) நெறிபடு   நாட்டத்து   நிகழ்ந்தவை     மறைப்பினும்   என்பது :
உலகியலான்   தலைவியிடத்துத்  தோன்றியுள்ள  வேறுபாட்டைச்  செவிலி
முறையாக    நோக்கி    ஆராய    முற்பட்ட    விடத்துத்    தன்பால்
நிகழ்ந்தவற்றைத்      தலைவி        மறைத்தலைக்    கருதியவிடத்தும்
என்றவாறு.
 

எ - டு :

துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதவென்

மம்மர் வாள்முகம் நோக்கி அன்னைநின்

அவலம் உரைஎன் றனளே கடலென்

பஞ்சாய்ப் பாவை கொண்டு

வண்டலஞ் சிறுமனை சிதைத்த தென்றேனே

(இள-மே)
 

23. பொறியின்    யாத்த   புணர்ச்சி  நோக்கி ஒருமைக் கேண்மையின்
உறுகுறை தெரிந்தோள் அருமைசான்ற நாலிரண்டு   வகையிற்   பெருமை  சான்ற  இயல்பின் கண்ணும் என்பது : பாலது ஆணையாற்  கூட்டப்பெற்ற
இயற்கைப் புணர்ச்சியான் தலைவியின் கண் நிகழாநிற்கும் ஒழுகலாற்றினைக்
கண்டு,   தான்    அவள்     என்னும்    வேறுபாடின்றி    ஒன்றுபட்ட
கேண்மையினானே   அவளுற்ற  குறையினை   நுணுகியுணர்ந்த   தோழி
மதியுடம்பட்ட  அருமைப்பாடு  நிறைந்த  எண் வகையாற் பெருமை மிக்க
இயல்பின் கண்ணும் என்றவாறு.
 

என்றது : தலைவியது  நடைமுறை  வேறுபாட்டினை  நோக்கிக்  கண்ட
தோழி  முன்னுற   உணர்தல்  என்னும்   வகையான்    மதியுடம்படுதற்கு
மேற்கொண்ட  நாற்றம், தோற்றம்,  ஒழுக்கம், உண்டி, செய்வினை மறைப்பு,
செலவு, பயில்வு   ஆகிய   உணர்வுகளான்   தலைவனொடு தலைவிக்குப்
புணர்ச்சியுண்மையறிந்து மெய்யினும்  பொய்யினும்  வழிநிலை  பிழையாமல்
பல்வேறு கவர் பொருள்களான்   ஆராயுமிடத்துத்  தலைவி  தோழியொடு
கூற்று    நிகழ்த்தும்   என்பதாம். பொறி = ஊழ்.  முன்னர் ‘ஒன்றியுயர்ந்த
பாலதாணை’ என்றதனை ஈண்டுப் "பொறியின்  யாத்த  புணர்ச்சி" என்றார்.
"தெரிந்தோள்" எனத்  தோழியை  வினையாலணையும்  பெயராற் கூறினார்.
தலைவிக்குத் தோழிக்கும் உரிய ஒருமைக்கேண்மையைத் ‘’தாயத்தினடையா
ஈயச்செல்லா’’ (பொருளி - 25) என்னும் சூத்திரவிதியானறிக.
 

நாலிரண்டுவகை  என்றது : தோழி   மதியுடம்பாட்டிற்குரிய  மூன்றனுள்
முன்னுறவுணர்தலின்    கூறுகளாகிய    நாற்றம்    முதலாகப்   பல்வேறு
கவர்பொருள் கூறிநாடுதல் ஈறாகத் தோழி கூற்றினுள் ஓதப்படும் எட்டுமாம்.
அவ் ஆராய்ச்சி வழிநிலை பிழையாது நிகழும் நுண்மைத்தாகலின் ‘அருமை
சான்ற’ என்றார்.  முன்னுறவுணர்தல்  என்னும்  இலக்கணத்தான்  புணர்ச்சி
உண்மையைத்   தோழி   தெளிந்து  கோடல்  தோழியிற்  கூட்டத்திற்கும்
அறத்தொடு  நிற்றற்கும்  துணைபுரிதலான்  அவற்றைப்  ‘பெருமை  சான்ற
இயல்பு’ என விளம்பினார்.
 

எ - டு :

பையுள் மாலைப் பழுமரம் படரிய

நொவ்வுப் பறைவாவல் நோன்சிற கேய்க்கும்

மடிசெவிக் குழவி தழீஇப் பெயர்தந்து

இடுகுகவுள் மடப்பிடி எவ்வங் கூர

வெந்திற லாளி வெரீஇச் சந்தின்

பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ்

உருவ வெண்கோடு உயக்கொண்டு கழியும்

கடுங்கண் யானை காலுற ஒற்றலின்

கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு

பேஎ நாறும் தாழ்நீர்ப் பனிச்சுனை

தோளார் எல்வளை தெளிர்ப்ப நின்போல்

யானும் ஆடிக் காண்கோ? தோழி

வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேல்

திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்க்

கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் கலித்த

ஒண்பொறி மஞ்ஞை போல்வதோர்

கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே

(நச்-மேற்)
 

இதன்கண் சுனையாடினேற்கு இவ்வாறாயிற்றெனத் தலைவி  கரந்துகூறினமை
கண்டுகொள்க. ஏனையவற்றிற்கும் தலைவிகூற்று வந்துழிக் கண்டுகொள்க.
 

இக்கிளவிக்கு  இளம்பூரணரும்,  நச்சினார்க்கினியரும் கூறும்  உரையும்
விளக்கமும் இந்நூல் நெறிக்கு ஒவ்வாமையை ஓர்ந்தறிக.
 

24)  பொய்தலையடுத்த  மடலின்  கண்ணும்  என்பது : தலைவன் தன்
குறையைத்    தலைவி    கொள்ளுதற்   பொருட்டு   மடலூர்வல்  எனப்
பொய்ம்மையொடு  கூட்டிக் கூறுமிடத்தும்  என்றவாறு.   தலைவன்  கூறும்
மடற்கூற்றுப்    பொய்யெனக்   கருதினாளாயினும்   அதனை   விலக்கும்
குறிப்பொடு தலைவி கூற்று நிகழ்த்தும் என்க. இதனை அருளியல் கிளத்தல்
என்ப.
 

எ - டு :

வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே

அவையினும் பலவே சிறுகருங் காக்கை

அவையினும் அவையினும் பலவே குவிமடல்

ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த

தூக்கணங் குரீஇக் கூட்டுள சினையே

(நச்-மேற்)
 

25) கையறு  தோழி  கண்ணீர்  துடைப்பினும்  என்பது  :  தலைவியது
ஆற்றாமைகண்டு    செயலறவு    பட்டதோழி    அவள்    கண்ணீரைத்
துடைத்துத்துயர் மாற்ற முற்பட்ட விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

யாம்எம் காமந் தாங்கவும் தாம்தம்

கெழுதகை மையினா லழுதன தோழி

கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்

மன்ற வேங்கை மலர்ப்பதம் நோக்கி

ஏறா திட்ட ஏமப் பூசல்

விண்டோய் விடரகத் தியம்பும்

குன்ற நாடற் கண்டவெங் கண்ணே

(குறு-24)
 

26) வெறியாட்டிடத்து   வெருவின்   கண்ணும்   என்பது : தலைவியது
நிலைமையினை அறிந்து கொள்ளத் தாயர் வெறியாட்டு நிகழ்த்தி  வேலனை
வினாவும் வழி, அதுகண்டு அஞ்சுதற் கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

நம்முறு துயரம் நோக்கி அன்னை

வேலற் றந்தந்தன ளாயின் வேலன்

வெறிகமழ் நாடன் கேண்மை

அறியுமோ தில்ல செறியெயிற் றோயே

(ஐங்-241)
 

எனவரும்.
 

27) குறியின்   ஒப்புமை   மருடற்  கண்ணும் என்பது: தலைவன் தனது
வரவுணர்த்த   இயற்றும்  செய்குறி  அவனான்  நிகழாமல் பிறிது ஏதுவாக
நிகழ்ந்துழி  ஒப்புமையான்   அதனைத்   தலைவன்   செய்த   குறியாகக்
கருதிச்  சென்று  அது  பொய்யாயினமையறிந்து   உள்ளம்       மயங்கி
வருந்துமிடத்தும் என்றவாறு. என்றது, அல்ல குறிப்பட்டு வருந்துதல்.
 

இங்ஙனம்   குறியின்   ஒப்புமையான் மருள்தல் பெரும்பான்மையையும்
இரவுக் குறிக்கண்ணே யாமெனக் கொள்க.
 

எ - டு :

அணிகடற் றண்சேர்ப்பன் தேர்ப்பரிமா பூண்ட

மணியரவம் என்றெழுந்து போந்தேன்-கணிவிரும்பு

புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்

உள்ளருகு நெஞ்சினேன் யான்

(ஐந்-ஐம்.50)
 

28) வரைவுதலைவரினும் என்பது :  தலைவன்  வரைதலை  நேர்ந்தான்
என அறிந்தவிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து

வானின் அருவி ததும்பக் கவினிய

நாடன் நயமுடையான் என்பதனான் நீப்பினும்

வாடல் மறந்தன தோள்

(ஐந் - எழு - 2)
 

29) களவறிவுறினும்     என்பது  :   களவொழுக்கம் நற்றாய் முதலாய
தமர்க்குப் புலனாய விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

நான்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து

மால்கடற் றிரையின் இழிதரும் அருவி

அகலிருங் கானத் தல்கணி நோக்கித்

தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்

போதெழில் மழைகண் கலுழ்தலின் அன்னை

எவன்செய் தனையோ நின்இலங்கெயிறு உண்கென

மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து

உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து

உரைக்கலுய்ந் தனனே தோழி சாரற்

காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி

தீந்தொடை நரம்பின் இமிரும்

வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே

(நற்-17)
 

30) தமர்தற் காத்த காரண மருங்கினும் என்பது :  தலைவியினது கரந்த
நடையும் தோற்றப் பொலிவும் ஆகிய ஏதுக்களான் களவுப்புணர்ச்சியுண்மை
தெரிந்த   தமர்   தன்னைப்  புறம் போகாது இற்செறித்துக் காவல் செய்த
இடத்தும் என்றவாறு. ஈண்டுத் தமர்என்றது தாயரைச் சுட்டி நின்றது.
 

எ - டு :

பெருநீ ரழுவத்து எந்தை தந்த

கொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி

எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇச்

செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி

ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்

தாழை வீழ்கயிற் றூசல் தூக்கிக்

கொண்டல் இடுமணற் குரவை முனையின்

வெண்டலைப் புணரி ஆயமொ டாடி

மணிப்பூம் பைந்தழை தைஇ அணித்தகைப்

பல்பூங் கானல் அல்கினம் வருதல்

கௌவை நல்லணங் குற்ற இவ்வூர்க்

கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை

கடிகொண் டனளே தோழி பெருந்துறை

எல்லையும் இரவும் என்னாது கல்லென

வலவ னாய்ந்த வண்பரி

நிலவுமணற் கொட்குமோர் தேர்உண் டெனவே

(அகம்-20)
 

31) தன்குறி தள்ளிய தெருளாக்காலை  வந்தனன்  பெயர்ந்த வறுங்களம்
நோக்கித்  தன்  பிழைப்பாகத்  தழீஇத்  தேறலும் என்பது : தான்  குறித்த
குறியிடத்திற்குச் செல்லுதற்கியலாது  தவிர்ந்தமையைத் தலைவன் தெளியாது
புக்குத்  தலைவியைக்  காணப்பெறாது  நீங்கிய   அவ்  வறுங்களத்திற்குப்
பின்னர் வந்து நோக்கி  அது தன்னான் நேர்ந்த பிழையாக அக்குற்றத்தைத்
தனதாகக்  கொண்டு  தலைவன்பாற்  குறையின்று  எனத்   தெளியுமிடத்து
என்றவாறு.
 

தள்ளிய    என்றது :  தன்னாற்   சுட்டப்பட்ட   களம்   செவிலியால்
அறியப்பெற்றமையான்   அதனை   நீக்கிய நிலைமையை. தான் அதனைத்
தவிர்த்தமையைத்    தலைவன்    அறியானாதலின்     "தெருளாக்காலை"
என்றார்.
 

எ - டு :

விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்

தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்

அஞ்சிலை இடவ தாக வெஞ்செலற்

கணைவலந் தெரிந்து துணைபடர்த் துள்ளி

வருதல் வாய்வது வான்றோய் வெற்பன்

வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைக்

காவி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று

ஊசல் மாறிய மருங்கும் பாய்புடன்

ஆடா மையின் கலுழ்பில தேறி

நீடிதழ்த் தலைஇய கவின்பெறு நீலம்

கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை

மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்

குலவுப் பொறையிறுத்த கோற்றலை இருவிக்

கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து

பைதலன் பெயரலன் கொல்லோ ஐதேய்

கயவெள் ளருவி சூடிய உயர்வரைக்

கூஉங் கண்ணஃதெம் ஊர்என

ஆங்கதை யறிவுறல் மறந்திசின் யானே

(அகம்-38)
 

32) வழுவின்று    நிலைஇய    இயற்படு    பொருளினும்   என்பது :
தலைவன்பாற்   குற்றமின்றென   அவனது நிலைத்த இயல்புகளைக் கூறும்
பொருண்மைக் கண்ணும் என்றவாறு.
 

இது    தலைவியை    ஆற்றுவித்தல் வேண்டித் தோழி தலைவன்பாற்
குற்றத்தை   ஏற்றி   உரைக்குமிடத்து   அதனைத்   தலைவி  தன்வயின்
உரிமையும்    அவன்வயின்     அயன்மையும்    தோன்றக்    கூறலின்
‘’இயற்படுபொருள்" என்றார்.
 

எ - டு :

தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர்

கொடுமை கூறின வாயினும் கொடுமை

நல்வரை நாடற் கில்லை தோழியென்

நெஞ்சிற் பிரிந்த தூஉம் இலரே

தாங்குறை நோக்கங் கடிந்ததூஉ மிலரே

நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே

(நச்-மேற்)
 

எனவரும்.
 

33) பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக்
கண்ணும் என்பது : தலைவன் குறியிடத்து எய்தும் காலமும் வரும் நெறியும்
ஒத்தமைதலின்மையான்  மனனழிவு  மேலும்  மேலும்  சேர்ந்த சிந்தையுற்ற
விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்

செல்க என்றோளே அன்னை எனநீ

சொல்லின் எவனோ தோழி கொல்லை

நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த

குறுங்கை இரும்புலிக் கொலைவல் ஏற்றை

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

ஆரிருள் நடுநாள் வருதி

சாரல் நாட வாரலோ எனவே

(குறு-141)
 

34. காமஞ்   சிறப்பினும்   என்பது :   தலைவனைக்  கூடுதற்கு அவா
மிக்குழியும்  என்றவாறு.  அவ்வழிப்  பெரும்படர்   கூர்ந்து  மொழிதலின்
இதனைக் காமமிக்க கழிபடர் கிளவி என்ப.
  

எ - டு :

கொடுந்தாள் அலவ குறையாம் இரப்போம்

ஒடுங்கா ஒலிகடற் சேர்ப்பன்-நெடுந்தேர்

கடந்த வழியைஎம் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ

(ஐந்-ஐங்-42)
 

35. அவனளி   சிறப்பினும்   என்பது :   வேட்கை   மீதூரப்  பெற்ற
தலைவனது தண்ணளி அளவு இகந்த விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி

வான மீனின் வயின்வயின் இமைக்கும்

ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்

உள்ளின் உள்நோய் மல்கும்

புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய்

(குறு-150)
 

36) ஏமஞ்சான்ற   உவகைக்   கண்ணும் என்பது : களவின் பயனாகிய
கற்பொழுக்கத்திற்கு  விளக்கமாகிய  வரைதலைத்  தலைவன் முயலுமிடத்து
அஃது  இருவருக்கும் ஏமமாதலின்  அவ்  ஏமத்தான்  மிக்க  மகிழ்ச்சியின்
கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்தி

கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்

சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை

பொருந்தினார்க் கேமாப் புடைத்து.

(ஐந்-எழு. 12)
 

37) தன்வயின் உரிமையும் அவன் வயிற்பரத்தையும் அன்னவும் உளவே
ஓரிடத்தான என்பது : மறைந்தவற்காண்டல் முதலாகக் கூறிய  கிளவிகளுள்
கூற்றுமொழிக்கண்  ஒரோவிடத்துத்  தான்  தலைவற்குரிய  மனைக்கிழத்தி
என்னும் உணர்வானே  தனது  உரிமையும்,  வரையாமல்  களவு நெறியான்
ஒழுகுதலின்   தலைவன்கண்    அயன்மையும்    தோன்றக்     கூறலும்,
அவைபோல்வனவாகிய பிறவும் தலைவி கூற்றாதற்கு உளவாகும் என்றவாறு.
தலைவி கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது.
 

வழுவின்றி  நிலைஇய இயற்படு பொருள் முதலாகிய ஐந்தும் தன் வயின்
உரிமையும் அவன் வயின் பரத்தைமையும் விளங்கக் கூறும். ஏனையவற்றுள்
ஒரோவழி   அவை  தோன்றக்  கூறும்  என்க.  பரத்தைமை = அயன்மை
பரத்தைமையும் என்பது செய்யுள் விகாரத்தான் பரத்தையும் என நின்றது.
 

இனிப் ‘பரத்தை’ என்பதற்குக் கற்பிற்குரிய  பிரிவாகிய  ஒழுக்கம் எனப்
பொருள்  கொண்டு  நச்சினார்க்கினியர் வலிந்து  கூறும்  விளக்கம்  தமிழ்
மரபிற்கும் சூத்திர நோக்கிற்கும் ஒவ்வாமையை ஓர்ந்துணர்க.
 

அன்னபிறவும்  என்பதனான்  தலைவி   இரவுக்குறி  நயந்துரைத்தலும்
குறியிடத்து எதிர்ப்பட்டவழிக் கூறலும், பின்னர் விதந்து கூறும்  கூற்றுக்கள்
அல்லாமல்   சான்றோர்  செய்யுட்களுள்  வேறுபட  வருவனவும் எல்லாம்
அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க.