சூ. 167 :

மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை

தம்முள வாதல் வாயில்கட் கில்லை

(24)
 

க - து :

வாயில்களின்   கூற்றுப்   பற்றிய  தொரு   மரபு  கூறுகின்றது.
 

பொருள் :மனையறக்  கிழமை   பூண்டொழுகும்   தலைவியிடத்துத்
தலைவனது  புறத்தொழுக்கமாகிய  கொடுமைகளை, அவள்  புலவி  தீர்தற்
பொருட்டு  உரைக்கும் தம்  கூற்றிடத்து  உளவாக உரைத்தல் வாயில்கட்கு
இல்லை.
 

உளவாக்கியுரைப்பின்    அது    புறங்கூறுதல்  என்னும்   குற்றத்தின்
பாற்படுமாகலானும்    அதனான்   தலைவியது   புலவி     மிகுதலன்றித்
தீராதாகலானும் இல்லை என்றார்.
 

தலைத்தாள்  என்பதனைத்  தாட்டலை என  மாறுக  என்றும்  அதன்
பொருள்  பாதத்திடத்து   என்பதாம்  எனவும்  அஃதொரு  தகுதிச்சொல்
எனவும் விளக்குவார் நச்சினார்க்கினியர். அவ்  விளக்கம்  ஒக்கும்.  எ.டு :
வாயில்களின் கூற்றினுட் கண்டு கொள்க.