சூ. 168 :

மனைவி முன்னர்க் கையறு கிளவி

மனைவிக் குறுதி உள்வழி யுண்டே

(25)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :தலைவியின் முன்னர்த் தலைவனது கொடுமையை எண்ணி்ச்
செயலற்றுக்  கூறும்  கூற்றுத் தலைவியது புலவியை நீக்கி ஆக்கம் பயக்கும்
என்னும் உறுதியமையுமிடத்து அவ்வாயில்கட்கு உளதாகும்.
  

எ - டு :

அறியா மையின் அன்னை யஞ்சிக்

குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்

விழவயர் துணங்கை தழூஉகம் செல்ல

நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை

நொதும லாளன் கதுமெனத் தாக்கலின்

கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்றென

யாண்டைய பசலை என்றனன் அதனெதிர்

நாணிலை எலுவ என்றுவந் திசினே

செருநரும் விழையும் செம்மலோ னென

நறுநுத லரிவை போற்றேன்

சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே

(நற்-50)
  

இது  தலைவனது  கொடுமையைத்   தோழி  புனைந்துரை   வகையாற்
கூறியது.