சூ. 228 :

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியுள் உரிய

(32)
 

க - து :

கற்பின்கண்  புலவிக்காலத்துத்  தலைமக்கட்கு  ஆவதொரு மரபு
கூறுகின்றது.
 

பொருள் பொருளியலை ஆராயுமிடத்துப் புலவியின்கண் தலைவியது
உயர்வும் தலைவனது பணிவும் உரியவாம் எனக் கூறுவர் புலவர்.
 

உயர்வு என்றது  தலைவன் பணிந்துழி  உட்கும்  நாணுமின்றித் தலைவி
அதனை    ஏற்றுத்தலைமை    செய்தொழுகுதலை.    பணிவு    என்றது
தலைமைப்பாடு  கருதாது  தலைவியைப்  பணிந்து  தாழ்ந்து   இரத்தலை.
இவ்வுயர்வும் பணிவும் காமத்திற்குச்  சிறப்பளித்து இன்பமிகுதி  செய்தலின்
"புலவியுள் உரிய" என்றார்.
 

எ - டு :

வரையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத்

தலையுற முன்னடிப் பணிவான் போலவும்

கோதை கோலா இறைஞ்சி நின்ற

ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்

(கலி-128)
 

என அமையும்.
 

‘’காமக் கடப்பினுள் பணிந்த கிளவி

காணுங் காலைக் கிழவோற் குரித்தே’’

(கற்-13)
 
என்றது கூற்றுப் பற்றியது. இது செய்கை பற்றியது என அறிக.