பொருள் : குறிப்பு வேறுபட மங்கலச் சொல்லான் கூறும் கூற்றும், சான்றோர் அவைக்கண் சொல்லற் குரிய வல்லாத வற்றைப் பிறவாய்பாட்டான் கூறும் கூற்றும், ஆளுமைப் பொருட்கண் பிற குறிப்புப்படக் கூறும் கூற்றும், மேற்கூறியாங்கு உள்ளுறைக் குறிப்பாக இப்பொருளிலக்கணத்துள் வகுத்து ஓதலும் நூலோர் வகுத்த முறைமையாகும் எனக் கூறுவர் புலவர். இக்குறிப்புமொழிகள் அகத்திற்கும் புறத்திற்கும் ஒப்ப உரியவாகும். |
எ - டு :"நயன் இன்மையின்" என்னும் நற்றிணையுள் "ஈங்கிது தகாது வாழியோ குறுமகள், நகா அது உரைமதி உடையும் என் உள்ளம்" எனத் தலைவன் கூறிய மங்கல மொழியும் "முழவு முகம் புலர்ந்து" என்னும் நற்றிணையுள் "இன்று தருமகளிர் மென்றோள் பெறீஇயர் சென்றீ பெரும சிறக்க நின்பரத்தை" எனத் தலைவி வாழ்த்திக் கூறிய மொழியும் "இந்நிலை விடுத்தேன் வாழியர் குரிசில்" (புறம்-210) எனப் பெருங்குன்றூர் கிழாரின் வாழ்த்து மொழியும் "நோய் இலராக நின்புதல்வர்" (புறம்-196) என்னும் ஆவூர் மூலங்கிழார் கூற்றும் குறிப்புப் பொருள் தந்து நிற்றல் காண்க. |
"இகல்வேந்தன் சேனை" என்னும் முல்லைக்கலியுள் |
(108) |
"ஆமுனியா ஏறுபோல் வைகல்பதின்மரைக் காமுற்றுச்செல் வாய்" எனவும் "என்னோற்றனை கொல்லோ" என்னும் மருதக்கலியுள் கூனும் குறளும் உறழ்ந்து கூறும் கூற்றினுள் "புறம் புல்லின் அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது" எனவும் வரும் கூற்றுக்கள் அவையல் மொழிகளாய்க் குறிப்புப்பொருள் தந்து நிற்றல் காண்க. |
"யாரிவன் எம்கூந்தல் கொள்வான்? இதுவுமோர் ஊராண்மைக் கொத்தபடி றுடைத்து" (மருதக்கலி-24) எனவரும் தலைவி கூற்றும். |
"வேனில் உழந்த வறிதுயங்கு ஓய்களிறு" என்னும் பாலைக்கலியுள் (7) "நீயே செய்வினை மருங்கிற் செலவயர்ந்து யாழநின் கைபுனை வல்வில் ஞரண் உளர்தீயே எனவும் வினைமாண் காழகம் விங்கக்கட்டி புனைமாண் மரீஇய அம்பு தெரிதீயே" எனவும் வரும் தோழி கூற்றும் மாறில் ஆண்மையிற் சொல்லியனவாய்க் குறிப்புப்பொருள் தந்து நிற்றல் காண்க. |