சூ. 269 : | வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே |
(20) |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : காம ஒழுக்கத்தின்கண், மெய்தொட்டுப் பயிறல் முதலிய செயற்பாடுகள் நிகழுந்துணையும் ஆற்றாமல் உணர்வு மெலிந்தவிடத்துச் "சொல்லிய நுகர்ச்சி" (இயற்கைப் புணர்ச்சி) வல்லே பெறுதலும் கூடுமாகலின், அவ்வழிப் புணர்ச்சிக்குரியவாக மேற்கூறிய நிமித்தங்கள் முறையே நிகழ்தல் இல்லையாதலும் உரித்து. |
வினை என்றது மேல் "மன்னிய வினை" என்று கூறிய காம ஒழுக்கத்தை. உயிர் என்றது காதலுணர்வினை. ஈண்டுக் காமஒழுக்கம் என்றது கூடுதலுறுதலாகிய இயற்கைப் புணர்ச்சியை. பாராட்டெடுத்தல் முதலியவை புணர்ச்சிக்குப் பின்னிகழ்வன வாதலின் ஈண்டு இன்மையும் உரித்தே என்றது புகுமுகம் புரிதல் முதலாகக் கூறிய எட்டனுள் சிலவற்றை என்பது ஏற்புழிக் கோடல் என்பதனாற் கொள்க. உம்மை எதிர்மறை யாகலான் அவற்றுள் சில நிகழவும் பெறுமெனக் கொள்க. |
எ - டு : | கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை |
| நாறிதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ |
| ஐது தொடைமாண்ட கோதை போல |
| நறியள் நல்லோள் மேனி |
| முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே |
(குறு-62) |
எனவரும். இதன்கண் பொறிநுதல் வியர்த்தல் முதலியவை நிகழாமல் கூட்டம் நிகழ்ந்தவாறு கண்டு கொள்க. பிறவும் சான்றோர் செய்யுட்கண் இவ்வாறு வருவனவற்றை ஓர்ந்து கொள்க. |