பொருளதிகாரம்
 

ஏழாவது - உவமவியல்

பாயிரவுரை:
 

ஒரு பொருளை மொழி வாயிலாகப்  புலப்படுத்தும் முறைகளுள் உவமம்
நனி சிறப்புடையது. ஒருபொருளைக் கண்கூடாகக்  காட்டுவதினும்  அதனை
உவமவாயிலாக  எடுத்துக்  கூறுவது   வலியுடையது  என்பதனான்  சிறந்த
புலமையும் பரந்த அறிவுமுடையார் தாம் அறிவுறுத்த விரும்பும்  பொருளை
உவமத்தாற்  கூறுதலை  மேற்கொண்டனர்.  உவமம்  தான்  கருதியாங்குப்
பொருளைப் புலப்படுத்துவதோடு தன் அறிவாற்றலையும் பண்பாட்டினையும்
நாகரிகத்தையும்  உணர்வுகளையும் கேட்போர்க்குப் புலனாக்க வல்லதாகும்.
உவமத்தின்  ஆற்றலையும்  பயனையும்   தேர்ந்துணர்ந்த  தொன்னூலோர்
அகமும்   புறமுமாகிய   ஒழுகலாறுகளைப்  புலப்படுத்தும்   செய்யுளுக்கு
இணையாக உவமத்தைப் போற்றிக் கொள்வாராயினார்.
 

எழுவகைத்    திணைகளையும்      இருவகைக்    கைகோளினையும் செய்யுளுறுப்பாகக்  கூறிய  தொல்காப்பியனார்   தொல்லோர்   தம் நெறி
விளங்க,
 

உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத்

தள்ளா தாகும் திணையுணர் வகையே

(அகத்-50)
 

என   உவமத்தினைப்   பொருளைப்   புலப்படுத்துங்  கருவியாகக்  கூறி
அதன்  இயல்புகளை  வரைந்தோதுவாராயினார்.
 

உவமமானது   செய்யுளொடு      ஒருங்கிணைந்து,      சிறப்புநலன் 
முதலாகியவையேயன்றி   மெய்ப்பாடுகளையும்  நிலைக்களனாகக்  கொண்டு
தோன்றுதலான் உவமவியலை மெய்ப்பாட்டியலின்  பின்னும் செய்யுளியலின்
முன்னுமாக அமைத்துக் கூறுகின்றார் ஆசிரியர்.
 

இடைக்காலத்தே   இலக்கண   நூல்களைச்    செய்த  ஆசிரியன்மார்
மெய்ப்பாடுகளையும் ஆகுபெயர் முதலாய  குறிப்புமொழிகளையும், பொருள்
கோளையும்   முரண்,   தொடை  முதலியவற்றையும்,   நோக்கு முதலாய
செய்யுளுறுப்புக்களையும்    வேறுபடவந்த    உவமத்   தோற்றங்களையும்
உள்ளுறை உவமத்தினையும் செய்யுட்கு  அணி  செய்வனவாகக்  கொண்டு
வடமொழி அலங்கார நூல்களைப் பின்பற்றி அணிநூல் செய்து போந்தனர்.
 

தொல்காப்பியத்துள்  கூறப்படும்    உள்ளுறையுவமம்,    ஏனையுவமம்
என்னும் பொருளிலக்கணப்பகுதியை அணியிலக்கணங்  கூறுவதாகக்  கருதி
உவமை என்னும் அணியிலிருந்தே பிற அணிகள் யாவும் விரிந்தனவாதலின்
அவற்றையெல்லாம்   அடக்கி   இவ்வாசிரியர்    உவமவியல்  கூறுவதாக
மயங்குவார் பலர்.
 

தமிழ் இலக்கணம் யாவும் வடமொழி இலக்கணங்களை அடிப்படையாகக்
கொண்டு    வரையப்பட்டவை    எனக்   கருதுவார்க்கும்    அதற்கேற்ப ஆய்வுரைகளைக்  கூறுவார்க்கும்  தமிழிலக்கணத்தின்  தொன்மையினையும்
தொல்காப்பியத்தின்    நுண்மையினையும்     எடுத்துக்கூறித்    தமிழின்
தனித்தன்மையை  ஏற்கச் செய்வதென்பது ஏறா மேட்டிற்கு  நீர்பாய்ச்சுதலை
ஒக்கும் என்க.
 

இனித்,   தொல்காப்பியர்    உவமத்தினைப்    பொருளிலக்கணத்தின்
சிறந்ததொரு கூறாக அமைத்துணர்த்துவதனை,
 

உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத்

தள்ளா தாகும் திணையுணர் வகையே

(அகத்-50)
 

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்

கொள்ளு மென்ப குறியறிந் தோரே

(அகத்-51)
 

உள்ளுறுத் திதனொடு ஒத்துப்பொருள் முடிகென

உள்ளுறுத் திறுவதை உள்ளுறை யுவமம்

(அகத்-51)
 

ஏனை யுவமம் தானுணர் வகைத்தே

(அகத்-52)
 

எனவரும் அகத்திணையியற் சூத்திரங்களானும்
 

நோயும் இன்பமும் இருவகை நிலையிற்

காமங் கண்ணிய மரபிடை தெரிய

.... ....... ........ ......... ......... .........

இருபெயர் மூன்றும் உரிய வாக

உவம வாயிற் படுத்தலும் உவமம்

ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி

(பொருள்-2)
 

இறைச்சி தானே உரிப்புறத் ததுவே

(பொருள்-33)
 

இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே

திறத்தியன் மருங்கின் தெரியு மோர்க்கே

(பொருள்-34)
 

அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்

வன்புறை யாகும் வருந்திய பொழுதே

(பொருள்-35)

உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக்

கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே

(பொருள்-45)
 

எனவரும் பொருளியற் சூத்திரங்களானும்
 

கிழவி சொல்லின் அவளறி கிளவி

(உவம-26)
 

தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது

(உவம-27)
 

கிழவோற் காயின் உரனொடு கிளக்கும்

(உவம-28)
 

ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே

(உவம-29)
 

இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கிற் றோன்று மென்ப

(உவம-30)
 

கிழவோட் குவமம் ஈரிடத் துரித்தே

(உவம-31)
 

கிழவோற் காயின் இடம்வரை வின்றே

(உவம-32)
 

தோழியும் செவிலியும் பொருந்து வழிநோக்கிக்
கூறுதற் குரியர் கொள்வழி யான

(உவம-33)
 

எனவரும் உவமவியற் சூத்திரங்களானும் பிறவற்றானும் அறியலாம்.
 

மற்று,   உவமம்  -  உவமை  என்னும்  சொற்கள்  தம்முட்  பொருள்
வேறுபாடுடையனவாகும்.   உவமம்  என்பது  உவமிக்கும்   பொருளையும் உவமை   என்பது   அதன்   தன்மையையும் குறிப்பனவாகும். அவற்றால்
விளக்கம்   பெறுவது  பொருளாகும்.  உவமத்தை  வடநூலார்  உபமானம்
என்றும் பொருளை உபமேயம் என்றும் கூறுவர்.
 

உவமம் என்பது சொல்லப்படும் பொருளை விளக்கம் செய்யக் காட்டாக
வருவது, அதனான் விளக்கம் பெறுவது  பொருள். அவ்இரண்டற்கும் உரிய
பொதுத்தன்மையே  உவமை  எனப்படும்.  உவமம் - பொருள்   இவற்றின்
பொதுத்தன்மையைத் தொடர்பு படுத்திக்காட்டும் சொல் உவமச்சொல்லாகும்.
உவமச்சொல்லை உவம உருபு என வழங்குவார். அஃதாவது :
 

‘பவளம்  போற்செந்  துவர்வாய்’  என்னும் தொடருள் பவளம் என்பது
உவமம். வாய்  என்பது   பொருள். செந்துவர்  என்பது  உவமை.  போல்
என்பது  உவமஉருபு. இங்ஙனம்  ஆசிரியர் வேறுபடுத்து ஓதுவதனை ஓராத
உரையாசிரியன்மார் பல  விடத்தும்  மயங்குவாராயினர்.  திரிபுணர்ச்சியான்
உவமா என்னும்  வடசொல்லே உவமை  என வந்ததாகப் பலர் மயங்குவர்.
உவமை என்பது உவமப்பொருளின் தன்மையைக் குறிக்கும் என்பதை,
 

உவமத் தன்மையும் உரித்தென மொழிப

பயனிலை புரிந்த வழக்கத் தான

(உவம-26)
 

உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்.

(உவம-27)
 

என ஆசிரியர் தெளிவுபடுத்தலான் அறியலாம்.
 

உவமப்பொருள்   உவமத்தன்மை   உவமச்சொல்   (உருபு)   மூன்றும் பொருளை. (உவமேயத்தை) விளக்கி  நிற்கும் காரணத்தான் அம்மூன்றையும்
உவமம் என்னும் குறியீட்டான்  வழங்குதல்   நூலாசிரியன்மார்  மரபாகும்.
அவற்றை இடம் நோக்கி வேறுபடுத்து உணர்தல் வேண்டும்.
 

மெய்ப்பாடு உரிப்பொருளின் கூறாகிய  பண்பையும் செயலையும் பற்றிச்
செய்யுளுள் அமைந்து  உணர்வுப்  பொருளைப் புலப்படுத்தலின் அதனைச்
செய்யுளுறுப்பாகவும் உவமம்  முதல், கரு,  உரி   என்னும்  திணைக்குரிய
பொருளைத்   தோற்றுவித்து   நிற்றலின்  செய்யுள்  போலத் திணையுணர்
வகையாகவும் நூலோர் ஓதுவாராயினர்.
 

இருவகைக்  கைகோள்  பற்றி  நிகழும்  அகஒழுக்கம்  ஒத்த கிழவனும்
கிழத்தியுமாகிய தலைமக்களைப் பொருளாகக் கொண்டு  நடத்தலான், அவர்
தம்   உணர்வுகளையும்   செயல்களையும்    புலப்படுத்துங்கால்    தாமே
புலப்படுத்தலும்   தோழி, செவிலி,   கண்டோர்,   பாங்கர்  முதலாய  பிற
அகத்திணை  மாந்தராற்  புலப்படுதலும்  என  அப்புலப்பாடு வகைப்பட்டு
நிகழ்தலான்   அவ்வவர்  தம்   கூற்றுக்களின்  அடிப்படையில்    உவம
இலக்கணம்  அமைவதாயிற்று.   மெய்ப்பாடு    அதற்குத்  துணையாகவும்
நிலைக்களனாகவும் அமைவதாயிற்று. இதனை,
 

நோயும் இன்பமும் இருவகை நிலையிற்

காமங் கண்ணிய மரபிடை தெரிய

எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய

உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்

மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்

சொல்லா மரபின வற்றொடு கெழீஇச்

செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ

இருபெயர் மூன்றும் உரிய வாக

உவம வாயிற் படுத்தலும் உவமம்

ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி (பொருள்-2)என்றும்.

இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்

உவம மருங்கிற் றோன்று மென்ப

(உவம-36)
 

என்றும்   ஆசிரியர் கூறுமாற்றான் அறியலாம். அவ்வாற்றான் அகத்திணை
மாந்தருள் உவமங் கூறுதற்குரியாரையும் அவர் கூறத்தகும் முறைமையையும்
இவ்வுவமவியலுள் விளங்க விதிப்பாராயினார்.
 

இனி,   இவ்வியலுள்   அகத்திற்கும்  புறத்திற்கும்  பொதுவாக நிகழும்
ஏனையுவமத்திற்குரிய இலக்கணங்களை முதற்கண்  கூறி,  அகத்திணைக்குச்
சிறப்பாக  வரும்  உவம  இலக்கணங்களையும்   உவமங்   கூறுவதற்குரிய
மாந்தரையும் அவர்  கூறும் முறைமையையும்  பின் கிளந்துகூறி  இறுதியாக
உவமம் பற்றிய  சில  பொதுவியல்புகளையும்   புறனடையையும் தொகுத்து
ஓதுகின்றார்.
 

உவமவியல் : திணையுணர்  வகையாகிய உவமத்தின் இலக்கணங்களைத்
தொகுத்துக் கூறலின் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று.
 

உவமமாவது ஒருவர் ஒரு பொருளைத் தெளிவாகப்  புலப்படுத்தக் கருத
அப்பொருளின்  தன்மையை  நன்கு   பொருந்தியுள்ளதாகத்   தாம் கருதி
மேற்கோளாகக் கொள்ளும்  பொருளாம். இயல், என்பது இலக்கணத்தையும்
படலத்தையும் ஒருங்குணர்த்தி நின்றது.
 

சூ. 277 :

வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்

(1)
 

க - து :
 

உவமத்தின்   வகையும்   தொகையும்   கூறுமுகத்தான்  அது
வெளிப்பட்டுத் தோன்றுமாறு கூறுகின்றது.
 

பொருள் :வகை   பெறுதலான்   வந்த   உவமத்தின்  தோற்றமாவது
வினையும் பயனும் மெய்யும் உருவும்  என்று   சொல்லப்பட்ட   நான்காம்.
ஏகாரம்   தேற்றம்.  என்றது,  உவமத்தின்  வெளிப்பாடு  பொதுவகையான்
இந்நான்கு வகைப்படும் என்றவாறு.
 

வினையாவது : ஒருவினைமுதலின்  தெரிநிலையும்  குறிப்புமாக நிகழும்
தொழிற்பாடு   அல்லது   செயற்பாடு.   பயனாவது :   ஒருவினைமுதலின்
செயற்பாடு   காரணமாக  எய்தும்   பயன்பாடு.   மெய்யாவது : சினையும்
முதலுமாக அறியப்படும்  ஒரு   பொருளின்   வடிவு   அல்லது   பிழம்பு. உருவாவது : ஒரு பொருளின்  வண்ணமும் குணமும்  சுவையும்  அளவும்
பிறவுமாகிய பண்புகள்.
 

வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின்என்று

அன்ன பிறவும் ...... ...... ....... பண்பு

(சொல்-416)
 

என்றதனான் வடிவும் பண்பாக அடங்குமால் எனின்? ஆண்டு வடிவென்றது
ஒருபொருளின்  பண்பாகக்  கிடக்கும்  நெடுமை குறுமை வட்டம் கோணம்
முதலியவற்றையாம்,   ஈண்டு  அப்பண்புகளையுடைய  உறுப்போடு  கூடிய
பொருளை, அதனான் ஆசிரியர்  வடிவென்னும்   வாய்பாட்டாற்  கூறாமல்
‘மெய்’ என்னும் குறியீட்டாற் கூறினார். ஆதலின் அடங்காதென்க.
 

எ - டு : "அரிமா   வன்ன   அணங்குடைத்துப்பின்   திருமாவளவன்"
என்பது வினையுவமம். அரிமா அணங்குதலை ஒப்ப அணங்கும் தொழிலன்
என்பதாம்.
 

"மழைவிழை  தடக்கை  வாய்வாளெவ்வி" என்பது பயனுவமம். (விழை -
உவம உருபுச்சொல்)  மழை துப்பார்க்குத்   துப்பாய்   வழங்குதல் ஒப்பத்
துய்ப்பதற்கு உரியவற்றையெல்லாம் வழங்குங் கையன் என்பதாம்.
 

"வேய் மருள்  பணைத்தோன்"  என்பது  மெய்யுவமம். (மருள் - உவம
உருபுச்சொல்) வேய்திரண்டு  சமனாக  விளங்குதல் ஒப்பத் திரண்ட தோள்
என்பதாம்.   ஈண்டு   வேய் என்றது அதன்   ஒருபகுதியை என்க. இஃது
சினைக்குச்சினை வடிவுபற்றி வந்த மெய்யுவமம்.
 

"செந்தீ   ஒட்டிய   செஞ்சுடர்ப்   பருதி"   என்பது   முதற்பொருட்கு
முதற்பொருள் வடிவுபற்றி வந்த   மெய்யுவமம். ஒட்டிய   என்பது   உவம
உருபிடைச்சொல்.
 

"தாமரை   புரையும்   காமர்   சேவடி"   இது  வண்ணம் பற்றி வந்த உருவுவமம். "தளிர்புரையும்   திருமேனி"  இது மென்மைத்  தன்மை  பற்றி
வந்த    உருவுவமம்.   "யாயையைவர்   நட்பொரீஇ"    என்பதும்  அது.
"பால்போலும்    இன்சொல்"    என்பது சுவைபற்றி   வந்த  உருவுவமம். "தெம்முனை  யிடத்திற்  சேயகொல்  அம்மா அரிவை அவர்சென்ற நாடே"
என்பது அளவு பற்றி வந்த உருவுவமம். [இன்-உவமஉருபுச்சொல்]
 

வினைமுதலாய   இந்நான்கும்  பல  திறப்பட்டு  வருமென்பது தோன்ற
"வகைபெறவந்த" என்றார். அஃதாவது
 

"கடைக்கண்ணாற்    கொல்வான்போல்   நோக்கி"   (கலி-51)  என்பது
கொல்லுவான் நோக்குதல் போல் நோக்கி என்றவாறு.
 

"விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி

மங்குல் மாமழை தென்புலம் படரும்"

(அகம்-24)
 

என்பது மங்குல் மாமழை விசும்புதோலுரிவது  போல  இயங்கி  என்றவாறு.
"கொன்றன்ன  இன்னா  செயினும்"  என்பது கொன்றால் எய்தும் துயரன்ன
இன்னா என்றவாறு. பிறவும் இவ்வாறு வகையுற்று வருமாற்றினை  யெல்லாம் ஓர்ந்து கொள்க.