சூ. 143 :

வெளிப்படை தானே கற்பினொ டொப்பினும்

ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக

வரையாது பிரிதல் கிழவோற் கில்லை

(51)
 
க - து :
 

களவின் நிகழ்தற்கு ஆகாத பிரிவுகள் இவை என்கின்றது.
 

பொருள் : களவு வெளிப்பாடு   புறத்தார்க்குப் புலனாயவழி அவர்தாம்
கிழவனும்    கிழத்தியுமாதல்    யாவர்க்கும்     தெளிவாதலின் அந்நிலை
கற்பினொடொப்பதாகும். ஒப்பினும்  கரணமொடு   புணரவரைந்து இல்லறக்
கிழமை பூண்டல்லது மேற்கூறிய பிரிவுகளுள்  ஓதல்,  பகை, தூது என்னும்
மூன்று பொருளும் பற்றிப் பிரிந்து செல்லுதல் தலைவனுக்கு மரபாதலில்லை.
 

இம்மூன்று   பொருள்   பற்றிக்  களவுக் காலத்துப் பிரிதல் மரபில்லை.
எனவே ஏனைப் பொருள்  பற்றியும்   காவல்  பற்றியும்  துணை பற்றியும்
பிரிதல் உண்டென்பது புலனாம்.  எடுத்துக்  காட்டுக்கள் மேற்கூறியவற்றுள்
கண்டுகொள்க.
 

களவியல் உரை முற்றியது.