பொருள் : (1) வேட்கை என்பது, ஒருவர்ஒருவரை அடைதல் வேண்டுமென்னும் ஆரா விருப்பமாம் (2) ஒருதலையுள்ளுதல் என்பது, ஒருவரை ஒருவர் இன்றியமையாதவர் என உலையா உறுதியொடு இடையறாது கருதுதலாம். ஒருதலை என்பதனை இடை விளக்காகக் கொண்டு நச்சினார்க்கினியர் ஒருதலை வேட்கை என வேட்கையொடும் கூட்டிப் பொருள் கூறுவார். வேட்கை என்னும் சொல்லே அப்பொருளைத் தருமாகலின் அங்ஙனம் கூறுதல் வேண்டா கூறலாகும் என்க. (3) மெலிதல் என்பது, அங்ஙனம் உள்ளுதலான் ஊண் உறக்கத்திற் சிந்தை செல்லாமல் இளைத்தல் (4) ஆக்கஞ்செப்பல் என்பது, ஒருவரை ஒருவர் எய்துதற்கும் பிரிவின்றி இன்புறுதற்கும் ஆவன இவை எனத் தமக்குத் தாமே கூறிக்கோடல். (5) நாணுவரையிறத்தல் என்பது, த லைமகனுக்காயின் கருமத்தான் நாணும் நிலை கடந்து வேணவாவுற்று நிற்றல். தலைவிக்காயின் பெண்மை காரணமாக ஒடுங்கி நின்ற உள்ளம் தன்நிலை கடந்து கிளர்ந்து நிற்றலாம். (6) நோக்குவவெல்லாம் அவையே போறல் என்பது’, தம்மான் நோக்கப்பெறும் புள்ளும் விலங்கும், கடலும் கானும் முதலிய அஃறிணைப் பொருள்களும் தம்மேபோல வேட்கை முதலாய உணர்வுகளான் உழல்வனவாகத் தோன்றுதலாம் ‘அவையே’ என்பது அத்தன்மையனவே என்றவாறு. இதனை "அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்" (பொருள் - 2) எனப்பொருளியலுள் கூறுவார். (7) மறத்தல் என்பது, பிறப்பும் குடிமையும் பிறவுமாகிய தம் தகவுகளை நினையாமையும், ஆயம், விளையாட்டு முதலியவற்றின்கண் சோர்வுறுதலுமாம். (8) மயக்கம் என்பது, செய்வனவற்றின்கண் ஆராய்ச்சியும், கடைபிடியுமின்றி நெகிழ்தலும் விளைவறியாது பேசுதலும், செயல் புரிதலுமாம். (9) சாக்காடு என்பது, தலைமகற்காயின் மடலேறுதல், வரை பாய்தல் முதலியவற்றை எண்ணுதலும் கூறுதலுமாம். தலைமகட்காயின் புலன்கள் மனத்தின்வழி நிகழாமல் கையறவுறுதலும் சாதற்குத் துணிந்தவளாகக் கூறுதலுமாம். |
மறத்தல் மயக்கம் சாக்காடு ஆகியவை பற்றிப் பொருளியலுள் "அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும்" (பொருள்-2) எனவும். "பொழுது தலைவைத்த கையறு காலை இறந்தபோலக் கிளக்குங் கிளவி மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு அவைநாற் பொருட்கண் நிகழு மென்ப" (பொரு - 41) எனவும் ஆசிரியர் கூறுமாற்றானறிக. |
என்று அச்சிறப்புடை மரபினவை களவெனமொழிப = என்று சொல்லப்பெற்ற அச்சிறந்த இலக்கணத்தையுடைய அவை களவொழுக்கத்திற்குரியவை எனக்கூறுவர் புலவர். |
இவை ஒன்பதும் இயற்கைப்புணர்ச்சி முதலாக உடன்போக்கு ஈறாகக் கூறப்பெறும் களவொழுக்கத்திற்குரிய உணர்வுப் பகுதிகளாகும் என்பது விளங்க "மரபினவை களவுஎன மொழிப" என்றார். எனவே இவையாவும் தலைமக்கள் மாட்டு நிகழவேண்டுமென்னும் யாப்புறவு இல்லை நிகழ்தற்குரியவை எனக் களவினது இலக்கணம் கூறிற்று என அறிக. |
வேட்கை நிகழ்ந்த அளவானே கூட்டம் நிகழ்தலும், அக்காலை நிகழாமல் மற்றைநாள் இடந்தலைப்பட்டு அவ்வழிக் கூட்டம் நிகழ்தலும், பாங்கனான் இடந்தலைப்பாடெய்த்தி நிகழ்தலுமாகும். அம்மூன்று நிலைகளிலும் உள்ளப் புணர்ச்சியளவானே களவு நிகழ்ந்து வரைந்து பின்னர்க் கூட்டம் நிகழ்தலும் வரைவு நீட்டித்த விடத்து ஆற்றாமையான் தோழி இடைநின்று கூட்டப் புணர்ச்சி நிகழ்தலும் உண்டு. அவ்வழி வரைவு நீட்டித்த காலை, பகற்குறி, இரவுக்குறி, உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கௌவை முதலிய நிகழ்தலும் தோழியிற் புணர்வாகவே கொள்ளப்படும். |
இவ் ஒன்பது வகையொடு காட்சிப் பகுதியையையும் கூட்டிப் பத்து நிலைகளாக ஆக்கி அவற்றை அவத்தைகள் என வடமொழிக் குறியீடு கொடுத்துக் கூறுவர் இடைக்கால நூலோர். |
களவொழுக்கத்தின்கண் தலைமக்கள் கூற்றிற்குரியவாகப் பின்னர்க் கூறப்படும் கிளவிகளுள் (1) மெய்தொட்டுப்பயிறல், பொய்பாராட்டல், மறைந்தவற்காண்டல், தற்காட்டுறுதல் போல்வன வேட்கைபற்றியனவாக அமையும். (2) நீடு நினைந்திரங்கல், பெட்ட வாயில் பெற்றிரவு வலியுறுத்தல், காணா வகையிற் பொழுதுநனி இகத்தல் போல்வன ஒருதலையுள்ளுதல் பற்றியனவாக அமையும். (3) தண்டாதிரத்தல், பிரிந்தவழிக்கலங்கல் கையறு தோழி கண்ணீர் துடைத்தல் போல்வன மெலிதல் பற்றியவையாக அமையும் (4) நிற்பவை நினைஇ நிகழ்பவையுரைத்தல், இட்டுப் பிரிவிரங்கல் போல்வன ஆக்கஞ்செப்பல் பற்றியனவாக அமையும். (5) தண்டாதிரத்தல் கேடும் பீடும் கூறல், மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தல் போல்வன நாணுவரையிறத்தல் பற்றியனவாக அமையும். (6) பண்பிற் பெயர்த்தல், அன்புற்று நகுதல், வரைவுதலை வருதல், களவறிவுறுதல் போல்வன மறத்தல் பற்றியனவாக அமையும். (7) சொல்லவட் சார்த்தி புல்லியுரைத்தல், வேட்கையின் மயங்கிக் கையறுதல், நொந்து தெளிவொழித்தல் போல்வன மயக்கம் பற்றியவையாய் அமையும். (8) மடன்மாகூறல், அழிவுதலை வந்த சிந்தை போல்வன சாக்காடு பற்றியனவாய் அமையும். ஏனையவற்றையும், தோழி கூற்று, செவிலி கூற்று ஆகியவற்றுள் இவ்வுணர்களான் வருவனவற்றையும் பொருந்துமாற்றான் நோக்கி இவற்றுள் அடக்கிக் கொள்க. |
எ - டு : | மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு |
| விழைந்த தன்தலையும் நீவெய் துற்றனை |
| அருங்கரை நின்ற உப்பொய் சகடம் |
| பெரும்பெயல் தலைய வீஇந் தாங்கிவள் |
| இரும்பல் கூந்தல் இயலணி கண்டே |
(குறுந்-165) |
இதன்கண் தலைவன் வேட்கை புலப்படுமாறு கண்டுகொள்க. |
| கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள் |
| குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே |
| யாங்கு மறந்தமைகோ யானே ஞாங்கர்க் |
| கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி |
| தாய்காண் விருப்பின் அன்ன |
| சாஅய் நோக்கினள் மாஅ யோளே |
(குறு-132) |
இதன்கண் ஒருதலையுள்ளுதல் அமைந்திருத்தலைக் கண்டு கொள்க. |
| பூவொடு புரையும் கண்ணும் வேயென |
| விறல்வனப் பெய்திய தோளும் பிறையென |
| மதிமயக் குறூஉம் நுதலும் நன்றும் |
| நல்லமன் வாழி தோழி அல்கலும் |
| தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் |
| குருகென மலரும் பெருந்துறை |
| விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே |
(குறு-226) |
இதன்கண் தலைவி வனப்புமெலிவு புலப்படுதல் காண்க. |
| அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த |
| வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப் |
| பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு |
| அறிகதில் அம்மஇவ்வூரே மறுகில் |
| நல்லோள் கணவன் இவன்எனப் |
| பல்லோர் கூறயாஅம் நாணுகம் சிறிதே |
(குறு-14) |
இதன்கண் தலைவன் ஆக்கஞ்செப்பல் ஒருவாறு அமைந்திருத்தலைக் கண்டுகொள்க. |
| காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு |
| நல்லாண்மை என்னும் புணை. |
(குறள் 1134) |
இது நாணுவரையிறத்தல். |
| யார்அணங் குற்றனை கடலே பூழியர் |
| சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன |
| மீனார் குருகின் கானலம் பெருந்துறை |
| வெள்வீத் தாழை திரையலை |
| நள்ளென் கங்குலும் கேட்கும் நின்குரலே |
(குறு-163) |
இது நோக்குவவெல்லாம் அவையே போறல். |
| பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன |
| நீர்உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
| பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு |
| உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து |
| இருவே மாகிய உலகத்து |
| ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே |
(குறு-57) |
இது மயக்கம். |
| மாவென மடலும் ஊர்ப பூவெனக் |
| குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப |
| மறுகின் ஆர்க்கவும் படுப |
| பிறிதும்ஆகுப காமங்காழ் கொளினே. |
(குறு-17) |
இது தலைவன் மடற்கூற்று. இதன்கண் சாக்காட்டுணர்வு வெளிப்படுதலைக் கண்டுகொள்க. பிறவும் சான்றோர் செய்யுட்கண் கண்டு கொள்க. |