சூ. 212 :

வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல்

மரீஇய மருங்கின் உரித்தென மொழிப

(16)
 

க - து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் :  பொழுதும்  ஆறும்  வழுவிய  குற்றங்காட்டல் முதலாகிய
ஏதுக்களான் வரைதல்  வேட்கையைக்  குறிப்பாற்   புலப்படுத்தலேயன்றிக்
களவு நீட்டித்தலைக்   கருதாது ஒழுகும்  தலைவனது வேட்கையை மறுத்து
வெளிப்படையாகக்  கிளந்து   உள்ளவாறு     கூறுதலும்   வழக்கின்கண்
பொருந்திய பக்கத்தான் தோழிக்குரியது எனக் கூறுவர் புலவர்.
 

எ - டு :

கொடிச்சி இன்குரல் கிளிசெத்து அடுக்கத்துப்

பைங்குரல் ஏனற் படர்தரும் கிளியெனக்

காவலும் கடியுநர் போல்வர்

மால்வரை நாட வரைந்தனை கொண்மே

(ஐங்-289)
 

இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் வலிந்துரை கைக்கிளை, பெருந்திணை
கட்குக்  கூறிய இலக்கணச்  சூத்திரங்களானே  பெறப்படும். பொருளியலுட்
கூறத்தக்க குறிப்பியைபு  யாதுமின்மையின் அவர்  கருத்துப் பொருந்தாமை
தெளிவாம்.