சூ. 310 : | வேறுபட வந்த உவமத் தோற்றம் |
| கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் |
(34) |
க - து : | பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி, என்னும் சூத்திரமுதலாக மேலைச் சூத்திரமளவும் உவமப்போலி என்னும் உள்ளுறை யுவமம் பற்றிய மரபுகளைத் தொகுத்துக் கூறி இனி, இச்சூத்திரமுதலாக ஏனை உவமத்திற்குரிய எஞ்சிய இலக்கணங்களை ஓதுவாராய் இச்சூத்திரத்தான் உவமம் கூறிய முறையானன்றி வேறுபட்டும் வரும் என்றும் அவற்றை அமைத்துக்கொள்ளுமாறும் பற்றிப் புறனடை கூறுகின்றார். |
பொருள் : வினை பயன் மெய் உரு என்னும் சூத்திர முதலாகக் கூறிய இலக்கணத்தினின்றும் வேறுபடச் சான்றோர் செய்யுட்கண் வந்த உவம வெளிப்பாட்டினை உவமிக்கப்படும் பொருள் கொள்ளும் நெறி நோக்கிப் பொருத்திக் கொள்க. |
தோற்றமாவது : சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடுபொருள் என்னும் ஐந்தும் எண்வகைச் சுவைகளும் நிலைக்களமாக வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாற் றோன்றுதலை. கொளஅல் = கொளுவுக. |
அஃதாவது எழுவகைச் செய்யுள் வாயிலாக நல்லிசைப் புலவோர் தாம் உணர்த்தக்கருதிய பொருளைப் பல்வேறு திறம்பட உவமத்தான் உணர்த்துங்கால் அவர் உணர்த்தும் பொருள் இவை அப்பொருள்களை விளக்க மேற்கொண்ட உவமம் இவை என ஓர்ந்து உவமத்தைப் பொருளொடு புணர்த்தி உணர்த்துக என்றவாறு. |
இச்சூத்திரம் ஏனை உவமம் பற்றிய புறனடை என்பது தோன்ற உவமமென வாளா கூறாத உவமத் தோற்றம் என்று விளங்க ஓதினார். |
இதனை ஏனையுவமங் கூறிய அதிகாரத்துக் கூறாமல் ஈண்டுக் கூறியது என்னையெனின்? முன்ன மரபினாற் தேர்ந்து கொள்ளும் உள்ளுறையுவமம் போல வேறுபட வந்த உவமத் தோற்றமும் ஓர்ந்துணர்ந்து அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதனை அறிவுறுத்துதற்கென்க. |
எ - டு: 1) | நிலத்தினும் பெரிதே வானினுயர்முந்தன்று |
| நீரினும் ஆரள வின்றே சாரற் |
| கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு |
| பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே |
(குறு-3) |
இதன்கண் பெருமைக்கு உவமமாக எடுத்துக்கொண்ட பொருள்களை முறையாக உவமித்துக் கூறாமல் உறழ்ந்து கூறியதனான் இது வேறுபடவந்த உவமத்தோற்றமாயிற்று. |
2) | நீர்நிலந் தீவளி விசும்போ டைந்தும் |
| அளந்து கடையறியினும் அளப்பருங் குரையை |
(பதிற்-24) |
|
கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் |
தொல்லது விளைந்தென நிலவளங் கரப்பினும் |
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை |
இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின் |
முன்னுங் கொண்டிரென நும்மனோர் மறுத்தல் |
இன்னா தம்ம இயல்தே ரண்ணல் |
(புறம்-203) |
என இவ்வாறு வருவனவும் வேறு நிறுத்த உவமத் தோற்றமாம். |
3) | அடைமல்கு குளவியொடு கமழும் சாரல் |
| மறப்புலி உடலின் மான்கணம் உளவோ |
| மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய |
| இருளும் உண்டோ ஞாயி றுசினவின் |
| அச்சொடு தாக்கிப் பாருற் றிரங்கிய |
| பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய |
| அரிமணல் ஞெமிரக் கற்பக நடக்கும் |
| பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ |
| ...... ........ ....... ........ ........ .................. ........ |
| பொருநரும் உளரோ நீகளம் புகினே |
(புறம்-90) |
இதன்கண் அதியமானின் ஆற்றற்குப் புலி முதலாயவற்றையும் பகைத்துவரும் பொருநர்க்கு மான்கண முதலாயவற்றையும் உவமமாக எடுத்துக்கொண்டு அவற்றை எதிர்வைத்து உவமமாகக் கூறாமல் வினா வாய்பாட்டான் வேறு வைத்துக் கூறினமையான் இதுவும் வேறுபடவந்த உவமத் தோற்றமாயிற்று. |
4) | புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின் |
| எலிபார்த் தொற்றா தாகும் மலிதிரை |
| கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று |
| நனியுடைப் பரிசில் தருகம் ............ |
(புறம்-237) |
இதன்கண் பெருஞ்சித்திரனார் தனக்குப் புலியையும் வெளிமானுக்குக் களிற்றையும் இளவெளிமானுக்கு எலியையும் உவமமாகக் கொண்டு அவற்றை வாயுறைபோலக் கூறிப் பொருளை உய்த்துணர வைத்தமையின் இதுவும் வேறுபட வந்த உவமத்தோற்றமாயிற்று. |
5) | நுதலும் முகனும் தோளும் கண்ணும் |
| இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ |
| ஐதேய்ந் தன்று பிறையு மன்று |
| மைதீர்ந் தன்று முகனு மன்று |
| வேயமர்ந் தன்று மலையு மன்று |
| பூவமர்ந் தன்று சுனையு மன்று |
| மெல்ல இயலும் மயிலு மன்று |
| சொல்லத் தளரும் கிளியு மன்று |
(கலி-55) |
எனவரும். இதன்கண் நுதல் முதலியவற்றிற்குப் பிறை முதலியவற்றை உவமமாக எடுத்துக்கொண்டு அவற்றைத் தகுமெனக் கூறாமல், காரணங்காட்டி மறுத்துக் கூறியதனான் இதுவும் வேறுபட வந்த உவமத் தோற்றமாயிற்று. |
6) | ஈங்கே வருவாள் இவள்யார்கொல் |
| வல்லவன் தைஇய பாவைகொல், நல்லார் |
| உறுப்பெல்லாங் கொண்டியற் றியாள்கொல்வெறுப்பினால் |
| வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல் |
எனவரும். இதன்கண் தலைவிக்கு உவமமாக எடுத்துக்கொண்ட பாவை முதலியவற்றை உவமத்தன்மை விளங்கக் கூறாமல், ஐய வாய்பாட்டால் பொருள் புலப்படக் கூறினமையான் இதுவும் வேறுபட வந்த உவமத்தோற்றமாயிற்று. |
7) ஒருதிறம் பாணர் யாழில் தீங்குரல் எழ |
ஒருதிறம் யாணர் வண்டின் இமிரிசையெழ |
ஒருதிறம் கண்ணார் குழலின் கரைபெழ |
ஒருதிறம் பண்ணார் தும்பி பரந்திசைஊத |
(பரி-17) |
எனவரும் இதன்கண் குழலிசைக்கும் யாழிசைக்கும் முழவிசைக்கும் உவமமாக எடுத்துக்கொண்ட வண்டினையும் தும்பியையும் இணைத்து உவமித்துக் கூறாமல் வேறு வேறு செயல்போலக் கூறினமையான் இதுவும் வேறுபட வந்த உவமத் தோற்றமாம். |
8) "மதி ஏக்கறூஉம் மாசறு திருமுகம்" |
(வெண்-157) |
என்பதன்கண் உவமமாக எடுத்துக்கொண்ட மதிக்கு இளிவரல் கற்பித்து வேறாகக் கூறினமையான் இதுவும் வேறுபட வந்த உவமத் தோற்றமாம். |
9) கடந்தடு தானைச் சேர லாதனை |
யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம் |
பொழுதென வரைதி புறங்கொடுத் திறத்தி |
மாறி வருதி மலைமறைந் தொளித்தி |
அகலிரு விசும்பி னானும் |
பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே |
(புறம்-8) |
இதன்கண் கதிரவனைச் சேரலாதனுக்கு உவமமாக எடுத்துக் கொண்டு அதனது உவமத்தன்மையை மறுத்துக் கூறிப் பொருளுக்கு உயர்வு கற்பித்துக் கூறினமையான் இதுவும் வேறுபடவந்த உவமத் தோற்றமாயிற்று. |
10) தொகுமுகை இலங்கெயி றாக |
நகுமே தோழி நறுந்தண் காரே |
(குறு-126) |
கண்ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ |
கொண்மூக் குழீஇ முகந்து |
(கலி-145) |
என்றாற்போல உவமத்தையே பொருளாக வைத்துக் கூறுவதும் வேறுபட உவமத் தோற்றமேயாம். இவ்வாறு வருவனவற்றை வடநூலார் ரூபகம் என்ப. இடைக்கால அணியிலக்கண நூலார் அதனை ஏற்று உருவகஅணி என வகைப்படுத்துவர். |
இனி, இங்ஙனம் பொருளிது பொருளை விளக்க வந்த உவமமிது எனப் பல்வேறு குறிப்பினவாய் உய்த்துணர வருவனவற்றிற்கெல்லாம் இச்சூத்திரமே விதியாகக் கொண்டு அமைத்துகொள்க. அவற்றுள் சிலவருமாறு : |
| கண்ண னவனிவன் மாறன், கமழ்துழாய்க் |
| கண்ணி அவற்கிவற்கு வேம்புதார் - வண்ணமும் |
| மாய னவனிவன் சேயன்மர பொன்றே |
| ஆய னவனிவன் கோ |
(பேராசிரியர் மேற்கோள்) |
| அடிநோக்கின் ஆழ்கடல் வண்ணன்நன் மேனிப் |
| படிநோக்கின் பைங்கொன்றைத் தாரோன் முடிநோக்கின் |
| தேர்வளவ னாதல் தெளிந்தேன்றன் சென்னிமேல் |
| ஆரலங்கற் றோன்றிற்றுக் கண்டு |
(தண்டிமேற்) |
| இந்திர னென்னின் இரண்டேகண், ஏறூர்ந்த |
| அந்தரத்தா னென்னிற் பிறையில்லை - அந்தரத்துக் |
| கோழியா னென்னின் முகனொன்றே கோதையை |
| ஆழியா னென்றுணரற் பாற்று |
(முத்தொள்ளாயிரம்) |
| சுற்றுவிற் காமனும் சோழர் பெருமானாம் |
| கொற்றப்போர்க் கிள்ளியும் கேழொவ்வார்-பொற்றொடீ |
| ஆழி யுடையான் மகன்மாயன் செய்யனே |
| கோழி யுடையான் மகன் |
(தண்டி - மேற்) |
| புனல்நாடர் கோமானும் பூந்துழாய் மாலும் |
| வினைவகையான் வேறு படுப - புனல்நாடன் |
| ஏற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவன் |
| ஏற்றிரந்து கொண்டமையா னின்று |
(தண்டி - மேற்) |
| மண்படுதோட் கிள்ளி மதவேழம் வேற்றரசர் |
| வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்-விண்படர்ந்து |
| பாயுங் கொலென்று பனிமதியம் போல்வதூஉம் |
| தேயும் தெளிவிசும்பி னின்று |
(தண்டி - மேற்) |
இனி, அணிநூலார் வேறுவேறு பெயர்களான் கூறும் உவமக் கூறுபாடுகளெல்லாம் இதன்கண் அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க. |