104. புறத்திறை
மறத்துறை மலிந்து மண்டி மாற்றார்
விறற்கொடி மதிலின் புறத்திறுத் தன்று.

(இ - ள்.) சினத்தின் வழிமிக்கு மேற்கொண்டு பகைவருடைய வெற்றிக்கொடியணிந்த அரணின் சுற்றிலே விட்டது எ-று.

(வ - று.)
புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப்
பல்லார் மருளப் படைபரப்பி-ஒல்லார்
நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின்
புறத்திறுத்தான் பூங்கழலி னான்.

(இ - ள்.) பகைவர் புகுமிடமும் ஓடிப்போம் வழியும் இன்றியேயொழியப் பொங்கியெழுந்து பலமன்னரும் மயங்கத் தன் சேனையைக் கைவளரவிட்டுப் பகைவர் மருமத்திலே குளித்த வாட்சேனையினையுடைய பகைவர் அரணத்தின் பக்கத்திலே பாடிவீடு கொண்டான், பொலிந்த வீரக்கழலினையுடையவன் எ-று.

(10)