105. ஆரெயிலுழிஞை
வாஅண்மறவர் வணங்காதார்
நீஇண்மதிலி னிலையுரைத்தன்று

(இ - ள்.) வாளினையுடைய வீரர் தம்மைப் பணியாதாருடைய உயர்ந்த புரிசையின் திண்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக்
கயிற்கழலார் கண்கனல் பூப்ப -எயிற்கண்ணார்
வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ
மாயப்போர் மன்னன் மதில்.

(இ - ள்.) மயிலின் திரளனையார் களிக்கும் மதுத்தெளிவை உண்ணப்பண்ண மூட்டுவாயாற் சிறந்த கழலினையுடைய உழிஞையார்விழி நெருப்பைக் கால அரணிடத்தார் பலரும்படப் பூசல் செய்தாலும் வெற்றியரிது; வஞ்சச்செருவினைச் செய்யவல்ல வேந்தன் புரிசையை எ-று.

மதிலை வென்றியரிதென்க.அரோ : இசை.

(11)