109. இதுவுமது
பாடருந்தோற் படைமறவர்
ஆடலொடடையினு மத்துறையாகும்

(இ - ள்.) சொல்லுதற்கரிய பரிசையினையுடைய சேனைத்தலைவர் ஆடுதலுடனே நொச்சியாருடைய அரணினைக் குறுகினும் முன்பு சொன்ன துறையேயாம் எ-று.

(வ - று.)
நிரைபொறி வாயி னெடுமதிற் சூழி
வரைபுகு புள்ளின மான-விரைபடைந்தார்
வேலேந்து தானை விறலோன் விறன்மறவர்
தோலேந்தி யாட றொடர்ந்து.

(இ - ள்.) ஒழுங்குபட்ட இயந்திரங்களாலமைந்த 1புதவினையுடைய உயர்ந்த புரிசைநெற்றியிலே மலையிடத்துச்சென்றுபுகும் புட்களை யொப்பக் கடுகிக்கிட்டினார், வேலினையுயர்த்த சேனையால் நிறைந்த வெற்றியினையுடையோன் வென்றிவீரர்; கிடுகினையெடுத்துத் தாம் ஆடுதலைச் சூழ்ந்து எ-று.

தொடர்ந்து விரைபு அடைந்தாரென்க.

(15)


1. புகலினையுடைய