110. புறத்துழிஞை
விண்டோயு மிளைகடந்து
குண்டகழிப் புறத்திறுத்தன்று.

(இ - ள்.) ஆகாயத்தைக் கிட்டும் காவற்காட்டைக் கடந்து ஆழ்ந்த கிடங்கின் கரையிலேவிட்டது எ-று.

(வ - று.)
கோள்வாய் முதலைய குண்டகழி நீராக
வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான்-நீள்வாயில்
ஓங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப
ஆங்கொ லரிய வமர்.

(இ - ள்.) ஆளைப் பற்றுகை தப்பாத முதலையினையுடைய குழிந்த அகழே தண்ணீராக வாய்த்த வாளினையுடைய மறமன்னன் வந்து விட்டான்; நீண்ட 1வாய்தலாற் சிறந்த உயர்ச்சியினையுடைய மதிலிடத்து ஒள்ளிய வளையினையுடையார் வெய்தாக உயிர்ப்ப வெல்லுதற் கரிய பூசல் ஆம்போலும் எ-று.

(16)

1. வாய்தல்-வாசல்