112. ஏணிநிலை
தொடுகழன் மறவர் துன்னித் துன்னார்
இடுசூட் டிஞ்சியி னேணிசாத் தின்று.

(இ - ள்.) இட்ட வீரக்கழலினையுடைய கொடுவினையாளர் செறிந்து செறியாதார் பண்ணின ஏவறைகளையுடைய மதிலிலே ஏணியைச் சாத்தியது எ-று.

சூட்டு-மாலை யென்றுமாம்.

(வ - று.)
1கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும்-பொற்புடைய
பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சாத்தினார்
ஏணி பலவு மெயில்.

(இ - ள்.) இடங்கணியும் அரவும் நெருப்பும் கடிகுரங்கும் வில் இயந்திரமும் அயிலும் இவையனைத்தும் பகைவர் உட்புகுதாதபடி விலக்கவும் பொலிவினையுடைய தாளத்திற்கொக்கச் சதிபாயும் குதிரையினையும் பல யானையினையுமுடைய உழிஞையார் இட்டார்; அரணிடத்து ஏணி பலவும் எ-று.

ஏணிபலவும் சாத்தினாரென்க.

(18)

1. சீவக.101-4; சிலப். 15:207-17; திருவிளை. நகர. 24-9.