வேய்பிணங்கிய மிளையரணம் பாய்புள்ளிற் பரந்திழிந்தன்று. (இ - ள்.) மூங்கில் தலைமணந்த காவற்காட்டினையுடைய குறும்பிலே இரைகண்டு பாயும் பறவையொப்ப வீரர் கைவளர்ந்து குதித்தது எ-று. (வ - று.) 1கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதும் தோடுகொள் புள்ளின் 2றொகையொப்பக் -கூடார் முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ளர் அரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து. (இ - ள்.) குவடோங்கின மலையினின்றும் இரையைப் பூமியிலே கண்டு கருதிப் பாயும் தொகுதிகொண்ட பறவையின் குழுவையொப்பப் பகைவர் மாறுபாடு தம் மனத்தே கெட முழவுபோலத் திரண்ட தோளையுடைய வீரர் அரணிடத்துப்பாய்ந்து இழிந்து ஆரவாரித்தார் எ-று. (20)
1. தொல். புறத் . சூ. 11, இளம். மேற். (பி-ம்) 2. றொகையேய்ப்ப |