118. யானை கைக்கோள்
மாறுகொண்டார் மதிலழிய
1ஏறுந்தோட்டியு மெறிந்துகொண்டன்று.

(இ - ள்.) பகைகொண்டார் அரணங்கெட யானையையும் காவலையும் பகைவரை யெறிந்து கைக்கொண்டது எ-று.

(வ - று.)
ஏவ லிகழ்மறவர் வீய விகல்கடந்து
காவலும் யானையுங் கைக்கொண்டான்-மாவலான்
வம்புடை யொள்வாண் மறவர் தொழுதேத்த
அம்புடை ஞாயி லரண்.

(இ - ள்.) தன் ஏவலைச் செய்யாத வீரர் கெட மாறுபாட்டைக் கடந்து தோட்டியையும் களிற்றையும் கைப்பற்றினான் குதிரைத் தொழிலைவல்லவன்; கச்சினையுடைய ஒள்ளிய வாள்வீரர் பணிந்து வாழ்த்த பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து எ-று.

ஏவல் - எவை வல்லவென்றுமாம்.

(24)

1. பெருங், 1.37: 212