123. மகட்பாலிகல்
மயிற்சாயன் மகள்வேண்டிய
கயிற்கழலோ னிலையுரைத்தன்று.

(இ - ள்.) மயில்போன்ற மென்மையினையுடைய மகளை வேண்டிய மூட்டுவாயிற் சிறந்த வீரக்கழலினையுடையான் முறைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
அந்தழை யல்குலு மாடமை மென்றோளும்
பைந்தளிர் மேனியும் பாராட்டித்-தந்தை
புறமதில் வைகும் புலம்பே தருமே
மறமதின் மன்னன் மகள்.

(இ - ள்.) அழகிய 1தழையாற் சிறந்த நிதம்பத்தினையும் அசையும் மூங்கில்போன்ற மெல்லியதோளினையும் பசுந்தளிர்போன்ற நிறத்தினையும் கொண்டாடித் தமப்பனுடைய மதிற்புறத்துத்தங்கும் தனிமையையே கொடா நிற்கும்; வீரமே தனக்குப் புரிசையாகவுடைய வேந்தனிடத்து மகள் எ-று.

(29)

1. தழை-செங்கழுநீர்ப்பூ முதலியவற்றால் தொடுத்து இளையமகளிரணியும் உடைவிசேடம்; முருகு: 201-4; ஐங்குறு. 72; புறநா. 61: 1, 116: 1-2, 248: 1-2, 340: 1, 341: 2