124. திறைகொண்டு பெயர்தல்
அடுதிற லரணத் தரசு வழிமொழியப்
படுதிறை கொண்டு பதிப்பெயர்ந் தன்று.

(இ - ள்.) கொல்லும் வலிமிகும் எயிலினிடத்து மன்னரெல்லாம் தாழ்வு சொல்ல முறைமையான திறையைக் கொண்டு இருந்த ஊரினின்றும் எடுத்துவிட்டது எ-று.

(வ - று.)
கோடும் வயிரு மிசைப்பக் குழுமிளை
ஓடெரி வேய வுடன் றுலாய்ப்-பாடி
உயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையி னான்.

(இ - ள்.) சங்கும் கொம்பும் முழங்கச் செறிந்த குறுங்காட்டைப் பரந்த எரிமூடக் கோபித்துக் கிளர்ந்து பாடிவீட்டினின்று மிக உயர்ந்த எயிலிடத்துப் பகைவர்தாழ எடுத்து மீளவிட்டான், மிக்க அழகினையுடை யான் எ-று.

(30)