126. தொகைநிலை
எம்மதிலி னிகல்வேந்தரும்
அம்மதிலி னடியடைந்தன்று .

(இ - ள்.) எல்லா அரணிடத்துமுள்ள மாறுபாட்டு மன்னர் பலரும் அந்த எயிலிடத்தே அவன் பாதத்தைச் சேர்ந்தது எ-று.

(வ - று.)
நாவல் பெயரிய ஞாலத் தடியடைந்
தேவ லெதிரா திகல்புரிந்த - காவலர்
வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின்
முன்னின் றவிந்தார் முரண் .

(இ - ள்.) சம்புத்தீவினுள் அவன் தாள்நிழலையடைந்து சொன்ன சொல்லை ஏற்றுக்கொள்ளாது மாறுபாட்டை மேற்கொண்ட மன்னர் சிலைவலிநின்ற சேனையாற் சிறந்த வெற்றியை வேண்டுவோற்கு அவன் சூழ்ந்த அரணிண் முன்னே நின்று கெட்டார் , மாறுபாடு எ-று.

நாவல் பெயரியஞாலம் - நாவலின் பெயர்பெற்றபூமி; சம்புத்தீவு.

(32)