எழுமரவக் கடற்றானையான் மழகளிற்றின் மறங்கிளந்தன்று. (இ - ள்.) மிகும் ஆரவாரத்தால் நிறைந்த கடல்போன்ற சேனையினை யுடையான் இளங்களிற்றினது மறத்தைக் கூறியது எ-று. (வ - று.) அடக்கருந் தானை யலங்குதார் மன்னர் விடக்கு முயிரு 1மிசையக் - கடற்படையுள் பேயு மெருவையுங் கூற்றுந்தன் பின்படரக் காயுங் கழலான் களிறு. (இ - ள்.) விலக்குதற்கரிய சேனையினையும் விளங்கும் கோவை மாலையினையுமுடைய அரசர் தசையினையும் உயிரினையும் உண்ண வேண்டிக் கடல்போன்ற சேனையுட் பேயும் கழுகும் கூற்றும் தனது பின் செல்ல வெகுளும், வீரக்கழல் வேந்தன் யானை எ-று. பேயும் எருவையும் விடக்குண்ணப் பின்படரவென்க. (6)
1. முணிய |