எறிபடையா னிகலமருள் செறிபடைமான் றிறங்கிளந்தன்று. (இ - ள்.) எறியும் வேற்படையுடையான்றன் மாறுபாட்டினைச் செய்யும் போருட் செறிந்த கலையினையுடைய குதிரையின் திறப்பாட்டைச் சொல்லியது எ-று. (வ - று.) குந்தங் கொடுவில் குருதிவேல் கூடாதார் வந்த வகையறியா வாளமருள் - வெந்திறல் ஆர்கழன் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை வார்கணையின் முந்தி வரும் . (இ - ள்.) பகைவர்தம் சவளப்படையும் கொடியவிற்படையும் உதிரத்தை அளைந்தவேற்படையும் வந்தபடி அறியாதவகை தலைமயங்கிய வாட்போருள் வெய்யவலியினையும் நிறைந்த வீரக்கழலினையுமுடைய மன்னன் விளங்கும் தலையாட்டத்தினையுடைய குதிரை , கொடியவில்லில் தொடுத்துவிட்ட நீண்ட அம்புபோல முற்பட்டு வரும் எ-று. (7) |