137. பாண்பாட்டு
வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல்யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று.

(இ - ள்.) விளர்த்த கொம்பினையுடைய யானையை எறிந்து பறந்தலையிற் பட்டார்க்கு யாழ்வாசிக்கும் கைத்தொழிலில் வல்ல பாணர் உரிமைசெய்தது எ-று.

(வ - று.)
தளரிய றாய்புதல்வர் தாமுண ராமைக்
களரிக் கனன்முழங்க மூட்டி - 1விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து .

(இ - ள்.) தளர்ந்த இயல்பினையுடைய தம் மனைவி தாய் சிறுவர் இவர் தாம் போர்க்களத்துப் பட்டவாறு அறியாமையாற் பறந்தலையிலே நெருப்பை முழங்கமூட்டிச் சாப்பண்ணைப் பாடக்கருதினார் பாணர் , யானையை எறிந்து பட்ட வீரர்க்கு; துறக்கத்துள்ளார் விருந்திடுதல் செய்தார் எ-று.

(11)

1.இரங்கற்பண்; "நுளையர் விளரி நொடிதருந் தீம்பாலை" (சிலப். 7 : 48. )