14. பாதீடு
கவர்கணைச் சுற்றங் கவர்ந்த கணநிரை
அவரவர் வினைவயி னறிந்தீந் தன்று.

(இ - ள்.) கவர்த்த தலையம்பினையுடைய கிளை கொள்ளைகொண்ட பசுநிரையைச் செய்தார் செய்த தொழில்வகையை அறிந்து கொடுத்தது எ-று.

(வ - று.)
1ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை.

(இ - ள்.) ஒள்ளிய வாட்போரினை மேற்கொண்டோர்க்கும் ஒற்றுத் தெரிந்து சொன்னோர்க்கும் நிமித்தம் தப்பாவகை சொன்ன அறிவுடையோர்க்கும் தம்முடன் வேறுபடுவாரை மாறுபாடு கெடுத்த வெற்றியினையுடைய மறவினையாளர் தம் சீறூரிடத்துப் பங்கிட்டார் கைக்கொண்டு வந்த நிரையை எ - று.

(14)

1. தொல். புறத். சூ. 3, இளம். ந. மேற்.