143. முன்றேர்க் குரவை
எழுவுறழ் திணிதோள் வேந்தன் வெஃறேர்
முழுவலி வயவர் முன்னா டின்று.

(இ - ள்.) கணையத்தையொத்த திண்ணிய தோளினையுடைய மன்னனுடைய வெல்லுந்தேர்முன் நிறைந்த வலியாற்சிறந்த வீரர் ஆடியது எ-று.

(வ - று.)
ஆனா வயவர்முன் னாட வமர்களத்து
வானார்மின் னாகி வழிநுடங்கும்- நோனாக்
கழுமணிப் பைம்பூட் 1கழல்வேந்த னூரும்
குழுமணித் திண்டேர்க் கொடி.

(இ - ள்.) அமையாதவீரர் முன்னேயாடப் போர்க்களத்து மேகத்து நிறைந்த மின்போன்று முறையேயாடும்; பகைபொறாத கழுவுமணியான் அமைந்த பசும்பூணினையுடைய கழல்வேந்தன் நடத்தும் திரண்ட மணியினையுடைய திண்ணிய தேர்மேற் கொடி எ-று.

(17)

1. கழல்வெய்யோன்