145. பேய்க் குரவை
மன்ன னூரு மறமிகு மணித்தேர்ப்
பின்னு முன்னும் பேயா டின்று.

(இ - ள்.) அரசன் செலுத்தும் கொடுமைமிக்க மணியையுடைய தேரின் பின்பும் முன்பும் பேய் ஆடியது.

(வ - று.)
முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை
மன்ன னெடுந்தேர் மறனேத்தி- ஒன்னார்
நிணங்கொள்பேழ் வாய 1நிழல்போ னுடங்கிக்
கணங்கொள்பே யாடுங் களித்து.

(இ - ள்.) முன்னும் பின்னும், பெரிய கடல் போன்ற சேனையையுடைய அரசன் நெடியதேரின் மாறுபாட்டை வாழ்த்திப் பகைவரது நிணத்தைக் கொண்ட பெரிய வாயினையுடைய திரண்ட பேய் சாயை போல அசைந்து மகிழ்ந்து நடமாடும் எ-று.

(19)

1. சீவக.309.