147. ஒள்1வாளமலை
வலிகெழுதோள் வாள்வயர்
ஒலிகழலா னுடனாடின்று.

(இ - ள்.) உரம்பொருந்திய தோளினையுடைய வாள்வீரர் ஆர்க்கும் வீரக் கழலினையுடையானுடன் ஆடியது எ-று.

(வ - று.)
வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார்
ஆளமர் வென்றி யடுகளத்துத் - தோள்பெயராக்
காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார்
வேந்தொடு வெள்வாள் விதிர்த்து.

(இ - ள்.) வாளைமீன் மிளிரும் மடுவினையொப்ப ,வந்து பொருந்தாதார் வீரர் மேவும் வெற்றியினையுடைய கொலைக்களத்துத் தோளைப்பெயர்த்து வெகுண்டு கொல்லும் வலியினையுடைய கழல்வீரர் ஆடினார், அரசனுடனே விளர்த்த வாளினை அசைத்து எ-று.

(21)

1. சீவக.783.