148. தானைநிலை
இருபடையு மறம்பழிச்சப்
பொருகளத்துப் பொலிவெய்தின்று.

(இ - ள்.) இரண்டுசேனையும் மறத்தை ஏத்தப் போர்க்களத்துச் சிறப்பெய்தியது எ-று.

(வ - று.)
நேரார் படையி னிலைமை நெடுந்தகை
ஓரா னுறைகழியா னொள்வாளும்- தேரார்க்கும்
வெம்பரிமா வூர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்கும்
கம்பமா நின்றான் களத்து.

(இ - ள்.) பகைவர்சேனையின் உரத்தைப் பெரிய மேம்பாடினையுடையவன் விசாரியான்,வாளும் உறையினின்றும் வாங்கான்,தேர்வீரர்க்கும் வெய்யசெலவினையுடைய குதிரையைச் செலுத்தினார்க்கும் வெல்லும் யானையின் மேலார்க்கும் நிலைத்தூண்போலக் களத்தின்கண் நின்றான் எ-று.

கம்பம்- நடுக்கமுமாம்.

(22)