150. சிருங்கார நிலை
பகைபுகழக் கிடந்தானை
முகைமுறுவலார் முயக்கமர்ந்தன்று.

(இ - ள்.) பகைவர் சீர்த்திபண்ணக் கிடந்தானை 1முல்லைமொட்டுப் போன்ற பல்லினார் தழுவுதலை மேவியது எ-று.

(வ - று.)
எங்கணவ னெங்கணவ னென்பா ரிகல்வாடத்
தங்கணவன் றார்தம் முலைமுகப்ப - வெண்கணைசேர்.
புண்ணுடை மார்பம் பொருளகத்துப் புல்லினார்
நுண்ணிடைப் பேரல்கு லார்.

(இ - ள்.) எம்முடைய கணவன் எம்முடைய கணவனென்று சொல்லும் பரத்தையர் மாறுபாடுகெடத் தமது கொழுநன்மாலை தம்முலை முகந்துகொள்ள வெய்ய அம்புபட்ட புண்ணினையுடைய மார்பகத்தைப் போர்க்களத்துத் தழுவினார்; நுண்ணிய இடையினையும் பெரிய அல்குலினையுமுடைய குலமகளிர் எ-று.

எங்கணவ னெங்கணவ னென்பார் தெய்வமகளிரென்றுமாம்.

(24)


1. முல்லையரும்பன்ன