151. உவகைக் கலுழ்ச்சி
வாள்வாய்த்த வடுவாழ்யாக்கைக்
கேள்கண்டு கலுழ்ந்துவந்தன்று.

(இ - ள்.) வாளால் வாய்ப்புப் பெற்ற விழுப்புண்மிக்க உடம்புடைய கணவனைக்கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வீழ்த்தது எ-று.

(வ - று.)
வெந்தொழிற் கூற்றமு நாணின்று வெங்களத்து
வந்த மறவர்கை வாடுமிப்பப்- பைந்தொடி
ஆடரிமா வன்னான் கிடப்ப வகத்துவகை
ஓடரிக்க1ணீர்பா யுக.

(இ - ள்.) வெய்ய செய்தியினையுடைய கூற்றமும் நம்மிடத்தும் இவ்வாறு மறமில்லையென்று மானித்தது.வெவ்விய போர்க்களத்துப் போர்செய்யவந்த தறுகண்ணர் கையிடத்து வாள் துணிசெய்யப் பச்சை வளையினையுடைய மனைவி தன் வென்றிச்சிங்கத்தையனைய கொழுநன் கிடப்ப அவன் வெற்றிக் கிடக்கைகண்ட உள்ளத்து மகிழ்ச்சியாற் செவ்வரி கருவரிபரந்த கண்ணகலமெல்லாம் நீர்பரந்து வீழ எ-று.

உகக் கூற்றமு நாணின்றென்க.

(25)

1. ணீராயுக