153. இதுவுமது
காய்கதிர் நெடுவேற் கணவனைக் காணிய
ஆயிழை சேறலு மத்துறை யாகும்.

(இ - ள்.) பகையைச் சீக்கும் ஒளிநெடுவேலினையுடைய கொழு நனைக்காணவேண்டி அவன்பட்ட போர்க்களத்துள் அழகிய ஆபரணத்தையுடைய மனையாள் போயினதும் அத்துறையேயாம் எ-று.

(வ - று.)
கற்பின் விழுமிய தில்லை 1கடையிறந்
திற்பிறப்பு நானு மிடையொழிய - நற்போர்
அணங்கிய வெங்களத் தாருயிரைக் காண்பான்
வணங்கிடை தானே வரும்.

(இ - ள்.) கற்புடைமையிற் சீரியதொன்றில்லை; வாயிற்கடை நீங்கிக் குடிப்பிறப்பும் நாணமும் தன்னிடத்தைவிட்டு நீங்க நல்ல பூசலிற்பட்ட சேனைப்பரப்பிற்கிடந்த தன்னுயிரனையவனைக் காணவேண்டி நுடங்கும் இடையாள் தமியளாய் வரும் எ-று.

ஒழியத் தானே வருமென்க.

(27)

1. கடைதுறந்