154. தொகைநிலை
அழிவின்று புகழ்நிறீஇ
ஒழிவின்று களத்தொழிந்தன்று.

(இ - ள்.) கேடின்றியே நிறையக் கீர்த்தியை நிறுத்தி எல்லாரும் போர்க்களத்திலே மடிந்தது எ-று.

(வ - று.)
மண்டமர்த் திண்டோண் மறங்கடைஇ மண்புலம்பக்
கண்டிரள்வேன் மன்னர் களம்பட்டார் - பெண்டிர்
கடிதெழு செந்தீக் கழுமினா ரின்னும்
கொடிதேகா ணார்ந்தின்று கூற்று.

(இ - ள்.) உறுபோரிடத்துத் திண்ணியதோளால் மாறுபாட்டைக் கடாவிப் பூமி தனிமைப்பட்டுப்புலம்பக் காம்பு கண்திரண்ட வேலினையுடைய வேந்தரிருவரும் போர்களத்துப்பட்டார்; அவர்தேவிய ரெல்லாம் கடிதாயெழும் செந்நெருப்பிற் கழுமினார்; இன்னமும் கொடுமையுடைத்தே காண், வயிறு நிறைந்தின்று கூற்றம் எ-று.

(28)