157. அரச வாகை
பகலன்ன வாய்மொழி
இகல்வேந்த னியல்புரைத்தன்று.

(இ - ள்.) 1நுகத்திற் பகலாணிபோன்ற நடுநிலைச் சொல்லினையுடைய மாறுபாட்டாற் சிறந்த மன்னனது தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
காவ லமைந்தான் கடலுலகங் காவலால்
ஓவ லறியா துயர்க்குவகை - மேவருஞ்சீர்
ஐந்தொழி னான்மறை மூத்தீ யிருபிறப்பு
வெந்திறற் றண்ணளியெம் வேந்து.

(இ - ள்.) காவற்றொழிற்குச் சமைந்தான்; கடல்சூழ்ந்த பூமியினை இவன் காத்தலாலே ஒழிதலறியாது பல்லுயிர்க்கும் மகிழ்ச்சி; பொருந்துதல் வரும் நன்மையினையுடைய ஐந்து தொழிலினையும் நான்கு வேதத்தினையும் மூன்று தீயினையும் 2பூணூலிடுவதற்கு முன்னும் பின்னுமாகிய இருபிறப்பினையும் 3பகையிடத்து வெவ்விய வினையினையும் குளிர்ந்த அருளினையு முடைய எம்முடைய வேந்தன் எ-று.

ஐந்துதொழில் - ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல்.

(3)

1. பட். 206; பழ. 95; தஞ்சை. 48
2. பூணநூல்
3. பகைவரிடத்து